islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

National Defence Academy (N D A) தேசியப் பாதுகாப்பு அகாதெமி


ஒரு தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய முப்படைகளின் பங்கு மிக முக்கியமானது. தன்னலம் கருதாத, போராட்ட குணமுள்ள, தீரமிக்க இளைஞர்களே இதற்கு உயிர்நாடி. நாட்டின் முப்படைகளில் சேர, பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு இலவசப் பயிற்சி அளித்து, பட்டம் வழங்கி, வேலையையும் அளிக்கிறது தேசியப் பாதுகாப்பு அகாதெமி (நேஷனல் டிபன்ஸ் அகாதமி). இதன் வரலாறு மிக நெடியது.

ராணுவத்தில் அதிகாரிகள் நிலையில் இந்தியர்களை உருவாக்க 1932-ல் டேராடூனில் இந்திய ராணுவ அகாதெமி அமைக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின், மூன்று படைகளிலும் சேருபவர்களிடையே ஒருங்கிணைந்த பயிற்சி அளிப்பதன் அவசியம் உணரப்பட்டது. இதையடுத்து டேராடூனில் உள்ள கிளமண்ட் டவுனில் 1948, டிச.15-ல் தொடங்கப்பட்ட இணைப்பு சேவை பிரிவு (Joint services Wing), 1950 ஜனவரி 1-ல் தேசிய பாதுகாப்பு அகாதெமியாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1954 டிசம்பரில் இது கட வாஸ்லாவுக்கு (புனே) மாற்றப்பட்டது. முத்தா நதிக் கரையோரம் 8300 ஏக்கர் பரப்பளவில் இதன் வளாகம் விரிந்து பரந்தது.

பிளஸ் டூ முடித்து தேசியப் பாதுகாப்பு அகாதெமியில் சேருபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி. இதையடுத்து ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருந்து பி.ஏ. (வரலாறு, பொருளாதாரம், அரசியல் அறிவியல்), பி.எஸ்சி. (இயற்பியல், வேதியியல், கணிதம்), பி.ஏ. (கம்ப்யூட்டர் சயன்ஸ்) ஆகிய ஏதாவது ஒரு பாடப் பிரிவில் பட்டம் அளிக்கப்படுகிறது.

கல்விப் பயிற்சியோடு உடற்பயிற்சி, ஹாக்கி, கால்பந்து, கிரிக்கெட், கைப்பந்து, கூடைப் பந்து, வாலி பால், ஸ்குவாஷ், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளுக்கும் பயிற்சி தரப்படுகிறது.

பயிற்சி முடிந்த பின், அவர்களின் பிரிவுக்கு ஏற்ப ராணுவம், கடற்படை, விமானப் படைப் பிரிவுகளில் சேர்க்கப்படுகின்றனர்.

எப்படிச் சேருவது?

தகுதிகள்: இந்த அகாதமியில் திருமணமாகாத ஆண்கள் மட்டுமே சேர முடியும். கல்வித் தகுதி பிளஸ் டூ. 17 முதல் 19ணீ வயதுக்குள் இருத்தல் அவசியம்.

இதற்கான தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்துகிறது. முன்னணி செய்தித்தாள்களில் (குறிப்பாக, எம்ப்ளாய்மெண்ட் நியூஸ்) அறிவிப்பு வெளியாகும். தமிழகத்தில் சென்னை, மதுரை ஆகிய இடங்களில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

"எம்ப்ளாய்மெண்ட் நியூஸ்' இதழில் வெளியாகும் விண்ணப்பப் படிவம் அல்லது அதே போல் கையால் எழுதியோ, தட்டச்சு செய்தோ விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:

மூன்று கட்டத் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். யு.பி.எஸ்.சி. மூலம் முதலில் எழுத்துத் தேர்வும், சர்வீஸ் செலக்ஷன் போர்டு மூலம் நேர்முகத் தேர்வும், சர்வீஸ் மெடிக்கல் போர்டு மூலம் மருத்துவப் பரிசோதனைத் தேர்வும் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வில் இரு தாள்கள். முதல் தாள் கணிதம், 300 மதிப்பெண்கள். அரித்மெட்டிக், மென்சுரேஷன், அல்ஜீப்ரா, ஜியோமெட்ரி, திரிகோணமிதி, புள்ளியியல் ஆகியவற்றில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

இரண்டாவது தாளில் (அறிவுத் திறன்), ஆங்கிலம் (மதிப்பெண்கள் 200) மற்றும் பொது அறிவு (400 மதிப்பெண்கள்) என இரு பிரிவுகள் உண்டு. பொது அறிவுப் பிரிவில், இயற்பியல், வேதியியல், பொது அறிவியல், வரலாறு, சுதந்திரப் போராட்ட வரலாறு, புவியியல், நாட்டு நடப்புகள் ஆகியவற்றில் இருந்து வினாக்கள் இடம்பெறும்.

மொத்த இடங்கள்:

இந்த அகாதெமியில் மொத்த இடங்கள் 300. இதில் ராணுவத்துக்கு 197 பேரும், கடற்படைக்கு 30 பேரும், விமானப் படைக்கு 73 பேரும் தேர்வு செய்யப்படுகின்றனர்.

No comments:

Post a Comment