islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

உயர் கல்வியுடன் திறமையான இளைஞர்கள் தேவை: அப்துல்கலாம்


மாணவர்களின் கல்வியறிவை வளர்க்க உயர் கல்வியுடன் கூடிய திறமையான இளைஞர்கள் இந்தியாவுக்குத் தேவைப்படுகின்றனர் என்று என்று குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் தெரிவித்தார்.

சிபிஎஸ்சி பாடத்திட்ட ஆசிரியர்களின் சர்வதேச கருத்தரங்கை துபையில் ஞாயிற்றுக்கிழமை துவக்கிவைத்துப் பேசிய கலாம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியது: இந்தியாவின் உயர் கல்வித் துறை ஆண்டுதோறும் 30 லட்சம் பட்டதாரிகள் மற்றும் முதுகலைப் பட்டதாரிகளை உருவாக்கி அளித்து வருகிறது. நாட்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்ததும் வேலை தேடுவோர் எண்ணிக்கை 70 லட்சமாக உள்ளது. இதன்படி பார்த்தால் ஆண்டு தோறும் வேலை தேடுவோர் எண்ணிக்கை ஒரு கோடியாக உள்ளது.

இந்த 21-ம் நூற்றாண்டில் மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் உயர் கல்வியை கற்றுக் கொடுக்கவும் அவர்களின் அறிவுப் பசியைத் தூண்டிவிடவும், அவர்களை திறமையானவர்களாக உருவாக்கவும் உயர் கல்வியில் நிபுணத்துவம் பெற்ற இளைஞர்கள் நமது நாட்டிற்கு அதிக அளவில் தேவைப்படுகின்றனர். இந்தியாவில் இந்த அளவுக்குத் திறமையுள்ள இளைஞர்கள் கிடைப்பதில் பெரும் இடைவெளி உள்ளது. இந்த இடைவெளியைப் போக்க பள்ளிகளிலும், பள்ளிப் பாடத்திடத் திட்டத்திலும் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். இந்த மாற்றத்தை இப்போதே செய்யத் தயாராக வேண்டும்.

பள்ளிப் பருவம் மிகவும் முக்கியமானது. இங்குதான் மாணவர்களிடத்தில் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் உருவாக்க முடியும். இதைச் செய்ய என்னால் முடியும். நாம் எல்லோரும் சேர்ந்து உத்வேகத்தை உருவாக்க முடியும் என்றார்.

தில்லியிலுள்ள சிபிஎஸ்சி வாரியம் சார்பில் துபையில் நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கில், சவூதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன், கத்தார், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 400 ஆசிரியர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment