அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
என் அன்பிற்க்கினிய சகோதர, சகோதரிகளே..
"இஸ்லாம்" இறைவனின் மார்க்கம் "திருக்குர்ஆன்" இறைவனின் வேதம் தான் என்பதற்க்கும் திருமறை முழுவதும் நற் சான்றுகள் நிரம்பி உள்ளன. "அல்லாஹ்"வின் இறுதி தூதர் முஹம்மது"நபி(ஸல்..) அவர்கள் வாழ்ந்து காட்டிய உலக வாழ்க்கையின் வரலாற்று தொகுப்புகள்(ஹதீஸ்), மற்றும் திருக்குர்ஆன் முழுவதும், இவர் இறை துாதர் தான் என்று நற் சாட்சியம் பகர்கின்றன. இவ்விரண்டும் தான் நம் வாழ்க்கை நன் நெறியாகும். நாம் வாழும் சமூகத்தில் நம் கண் முன் நிகழும் உண்மை நிகழ்வுகள் பல... அதில் பெற்ற தாய், தந்தையரை பேணுபவரின் வாழ்க்கை தரத்தை சற்று கூர்ந்து கவனித்தால் பல பேர் மேம்பட்டவராகவே! இருப்பதை காண்கிறோம். இது "அல்லாஹ்" நமக்கு அளிக்கும் மறைவான அருள் ஆகும். இறைவனின் கூற்றையும், நபிகள் நாயகம்(ஸல்..) அவர்களின் சொல், செயல்,அங்கீகாரம், இவை அ னைத்தையும் கற்று, சற்று சிந்தித்து, செயல்பட்டால் நீங்களும் இம்மை, மறுமை இவ் விரண்டிலும் மேம்பட்டவரே!
சில எடுத்துக்காட்டுகள் இதோ!...
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் பெரும் கருணையாளன் எல்லாம் வல்ல "அல்லாஹ்" ரப்புல் ஆலமீன் ! தன் திருமறையில் கூறுகிறான்.
அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
திருக்குர்ஆன் 4:36
"என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!" என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி " சீ " எனக்கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக!
திருக்குர்ஆன் 17:23
அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! " சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!" என்று கேட்பீராக!
திருக்குர்ஆன் 17:24
மனிதனுக்கு அவனுடைய பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனுடைய தாய் பலவீனத்துக்கும் மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவர் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள்.
திருக்குர்ஆன் 31:14
தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள்.
திருக்குர்ஆன் 46:15
எங்கள் தலைவர் முஹம்மதுநபி(ஸல்...) அவர்கள் நவின்ற பொன் மொழிகள் இதோ!...
"அல்லாஹ்வின் துாதரே! மனிதர்களிலேயே நான் தோழமை கொள்ள அதிக உரிமை படைத்தவர் யார்?" என்று நான் கேட்டேன். அதற்க்கு நபி(ஸல்) அவர்கள் "உன் தாய்" என்றார்கள். அடுத்ததாக யார் ? எனக்கேட்டேன். "உன் தாய்" என்றார்கள். அடுத்ததாக யார்? எனக்கேட்டேன். "உன் தாய் " என்றார்கள். அடுத்ததாக யார்? எனக்கேட்டேன். "உன் தந்தை " என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நுால்: புகாரி(5971)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அன்னையரைப் புண்படுத்துவது, (அடுத்தவருக்குத் தர வேண்டியதை) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான்.
அறிவிப்பவர்: முஃகிரா பின் ஷூஅபா(ரலி) நுால்:புகாரி (5975)
நபி (ஸல்) அவர்களிடம் பெரும்பாவங்கள் பற்றி கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்கு துன்பம் கொடுப்பதுமாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நுால்: புகாரி(2653)
"ஒரு மனிதர் தம் தாய் தந்தையரைச் சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்" என அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நுால்:புகாரி(5973)
நான் நபி( ஸல்) அவர்களிடம், "கண்ணியமும், மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்விற்க்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?" என்று கேட்டேன். அவர்கள், " தொழுகையை அதற்குறிய நேரத்தில் நிறைவேற்றுவது " என்றார்கள். "பிறகு எது?" என்று கேட்டேன். "தாய்,தந்தையருக்கு நன்மை செய்வது" என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) நுால்: புகாரி(5970)
ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் துாதரே! பெரும் பாவங்கள் எவை என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் இறைவனுக்கு இணை கற்பிப்பது என்றார்கள். அவர் பிறகு எது என்றார். நபி(ஸல்) அவர்கள் பிறகு தாய் , தந்தையரைப்புண்படுத்துவது என்றார்கள். அவர் பிறகு எது எனக்கேட்க நபி(ஸல்) அவர்கள் பொய் சத்தியம் என்றார்கள். நான் பொய் சத்தியம் என்றால் என்ன? என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் பொய் சொல்லி ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தைக் கைபற்றுவதற்காகச் சத்தியம் செய்வது என்றார்கள்.
அறிவிப்பவர்:-அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நுால்:- ஸஹீஹுல் புகாரி:-6920
இந்த நன் நெறிகளை கற்று, சிந்தித்து , செயல் படுத்தி "தவ்ஹீத்" கொள்கையை உயிர் மூச்சாக ஏற்று தடம் புரளாமல் என்றென்றும் நிலையான "ஏகத்துவம்", எத்தி வைத்து வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல் அருள் புரிந்து இவ்விரு உலகிலும் நன் மக்களாக ஆக்கி வைப்பானாக !
அல்ஹம்துலில்லாஹ்..
அதீன் Paris
Sorce: frtj.net
No comments:
Post a Comment