islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

உடல் தானம் செய்வதில் சேலம் முதலிடம்:அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் தகவல்




தமிழக அளவில் உடல் தானம் செய்ய அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கையில் சேலம் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது,'' என, சேலம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் மோகன் தெரிவித்தார். சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அகரம் காலனியை சேர்ந்த, 45 பேர், நேற்று தங்களின் உடல்களை தானம் செய்வதாக கூறி, அதற்கான உறுதி மொழி ஒப்பந்த பத்திரத்தை கண்காணிப்பாளர் டாக்டர் மோகனிடம் வழங்கினர். ஆர்.எம்.ஓ., டாக்டர் ஜெகதீஸ்வர், டாக்டர் தண்டபாணி ஆகியோர் உடனிருந்தனர். உடல் தானம் குறித்து கண்காணிப்பாளர் டாக்டர் மோகன் கூறியதாவது:
உடல் தான செய்திகளால், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தங்களின் உடலை மாணவர்களின் படிப்பு, ஆய்வுகளுக்கு தானமாக வழங்க மக்கள் முன் வருகின்றனர். இதில், சேலம் அரசு மருத்துவமனையில் சேலம் மாவட்ட மக்கள் மட்டுமின்றி நாமக்கல், தர்மபுரி மாவட்ட மக்களும் தங்களின் உடலை தானமாக வழங்க பதிவு செய்துள்ளனர். கடந்த 1991ல் துவக்கப்பட்ட சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இதுவரை, 700 பேர் தங்களின் உடலை தானம் செய்ய பதிவு செய்துள்ளனர். அவர்களில், 28 பேரின் உடல் தானமாக பெறப்பட்டு, மாணவர்களின் படிப்புக்கு பயன் படுத்தப்பட்டு வருகிறது. உடல் தானம் செய்வதற்காக பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் சேலம் மாவட்டம் தமிழக அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது. கடந்த 1994ல் முன்னாள் எம்.பி., கிருஷ்ணன், முதன் முதலாக தன் உடலை தானமாக வழங்கி, இந்த சேவையை துவக்கி வைத்தார். இந்த ஆண்டு இதுவரை, 76 பேர் தங்களின் உடலை தானமாக வழங்க முன் வந்துள்ளனர். இவ்வாறு உடல் தான ஒப்பந்தத்தை எங்களிடம் வழங்கியவர்கள், இறந்த நான்கு மணி நேரத்துக்குள், எங்களுக்கு தகவல் கிடைக்கும் பட்சத்தில், எங்களின் கண் மருத்துவக் குழுவினர், உடலை எடுத்து வந்து, முதலில் கண்ணை எடுத்து மருத்துவமனை கண் வங்கியில் பராமரிப்பர். பின், இந்த கண் வேறொருவருக்கு பொருத்தும் பணிகள் துவங்கும். உடல் தானம் செய்துள்ளவரின் மூளை செயல் இழப்பு ஏற்படும் பட்சத்தில், அவரின் உடலில் இருந்து சிறுநீரகம், கல்லீரல், கணையம் ஆகியவற்றை எடுத்து மற்றொருவருக்கு பொருத்தலாம். இதற்கு மருத்துவர்களிடம் முறையான சான்றிதழ் பெற வேண்டும். அவர்களின் இறந்த உடலை பயிற்சி மற்றும் ஆய்வுக்கு பயன் படுத்தலாம். இது போன்ற உடல் தானம் செய்பவரின் உடலுக்கு பதப்படுத்துதல் மற்றும் பக்குவப்படுத்துதலுக்காக அரசு, 25 ஆயிரம் ரூபாய் வரை வழங்குகிறது. உடல், உறுப்புகளை தானம் செய்ய முன்வரும் பொதுமக்கள் மருத்துவமனை நிர்வாகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
dinamalar

No comments:

Post a Comment