islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

ஏழை இந்தியா, பணக்கார இந்தியா என்பதை அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் ஆவேசம்!


“இந்த நாட்டின் உணவுக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன என்று செய்திகள் கூறுகின்றன, அதே நேரத்தில் உணவின்றி மக்கள் சாகிறார்கள் என்ற செய்தியும் வருகிறது. இந்த நாடு ஏழை இந்தியாஎன்றும், பணக்கார இந்தியா என்றும் இரண்டாகிக் கிடப்பதை அனுமதிக்க முடியாது” என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.


மக்கள் குடிமை உரிமைக் கழகம் (பி.யு.சி.எல்), ஏழை எளிய மக்களுக்கான பொது விநியோகத் திட்டத்தில் நடைபெறும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து தொடர்ந்த, பொது நல மனுவை விசாரித்துவரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோரை கொண்ட நீதிமன்ற அமர்வு இவ்வாறு கூறியுள்ளது.

வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் நிலையில், இன்னமும் 36 விழுக்காடு என்று வைத்திருப்பது ஏன் என்று வினா எழுப்பிய நீதிபதிகள், எந்த அடிப்படையில் வறுமைக் கோடு நிர்ணயிக்கப்படுகிறது என்றும் அரசைக் கேட்டுள்ளனர். ஆளும் மாநில அரசுகளே தங்கள் மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் அளவு 36 விழுக்காட்டிற்கு மேல் என்று கூறியுள்ளதை சுட்டிக்காட்டினர்.

“நமது நாட்டின் உணவுக் கிடங்களில் போதுமான அளவிற்கு உணவுப் பொருட்கள் உள்ளன என்று நீங்கள் கூறுகிறீர்கள். அதே நேரத்தில் உணவின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனரே, இது என்ன வினோதம்?” என்று கேட்ட நீதிபதிகள், சத்தற்ற உணவு நிலையை குறைக்க, பொது விநியோகத் திட்டத்தை அரசு பலப்படுத்தி வருவதாகவும், அதனால் சத்துணவின்மை குறைந்து வருவதாகவும் மோகன் பராசரன் கூறியதற்கு, “குறைந்து வருகிறது என்றால் என்ன பொருள்? அது முழுமையாக இல்லாத நிலை ஏற்படவேண்டும்” என்று கூறினர்.

நமது நாட்டின் உணவுக் கிடங்குகள் நிரம்பி வழிவதாக வந்த நாளிதழ் செய்திகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், “இது மகிழ்ச்சியளிக்கூடிய செய்திதான். ஆனால் அதன் பலன் மக்களுக்கு சென்று சேரவில்லை என்றால் என்ன பயன்?” என்று கேட்டனர்.

நகர்புறங்களில் நாள் ஒன்றிற்கு ரூ.20க்கும் அதிகமாக சம்பாதிப்பவர்கள், கிராம்ப்புறங்களில் ரூ.11க்கும் அதிகமாக வருவாய் உள்ளவர்கள் வறுமைக்கோட்டிற்கு மேல் வாழும் மக்கள் என்று திட்ட ஆணையம் கூறுவதை ஏற்க முடியுமா என்று வினா எழுப்பிய நீதிபதிகள், நீங்கள் கூறும் வருவாய் கிராமத்தில் வாழக் கூட போதுமானதல்ல என்று கூறியுள்ளனர்.

“வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களை அளவிட என்ன அடிப்படை கையாளப்படுகிறது என்பதை திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் விளக்க வேண்டும். ஒரு வாரத்திற்குள் விரிவான விளக்கத்தை தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment