islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

மதுரை மேற்குத் தொகுதியில் ரூ.81 லட்சம் விநியோகம்: உளவுப் பிரிவு நேரடி விசாரணை



தேர்தலுக்கு முன்னதாக மதுரை மேற்குத் தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ. 81 லட்சம் பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரையடுத்து, ஐ.பி. (இண்டலிஜன்ட் பீரோ) உள்ளிட்ட போலீஸ் உளவுப் பிரிவு அதிகாரிகள் சனிக்கிழமை முதல் முகாமிட்டு, தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மதுரை மேற்குத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்டச் செயலர் செல்லூர் ராஜுவும், தி.மு.க. சார்பில் அக் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலர் கோ. தளபதியும் போட்டியிட்டனர்.

இரு கட்சிகளின் மாவட்டச் செயலர்கள் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியான பின்னரே, இத் தொகுதியை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும் தீவிரமாகக் கண்காணிக்கத் துவங்கினர்.

இந்த நிலையில், மேற்குத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் தேர்தல் நன்னடத்தை பிரிவு பறக்கும் படை அதிகாரிகள் குழு கடந்த 13-ம் தேதி சோதனையிட்டபோது, தி.மு.க.வைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் வைத்திருந்த 40 பக்கம் கொண்ட ஒரு நோட்டைக் கைப்பற்றினர்.

மேற்குத் தொகுதிக்கு உள்பட்ட 65-வது வார்டு பகுதிக்கு ரூ. 16,35,000, 66-வது வார்டு பகுதி வாக்காளர்களுக்கு ரூ. 18,96,200, 67-வது வார்டு பகுதி வாக்காளர்களுக்கு ரூ. 21,46,800-ம், 69-வது வார்டு பகுதி வாக்காளர்களுக்கு ரூ.24,41,400-ம் பணம் விநியோகிக்கப்பட்டதாக அந்த நோட்டில் தெரிவிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

பணம் பட்டுவாடா செய்தபோது, காவல் துறையினரிடம் பிடிபட்டு, எவ்வளவு பணம் இழக்கப்பட்டது, மீதம் கையில் இருக்கும் பணம் குறித்த மொத்தம் ரூ. 81 லட்சத்துக்கான முழு விவரங்களை தேர்தல் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், எஸ்.எஸ். காலனி போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

விசாரணையில், பணம் விநியோகம் தொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் மூலம் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து விவரம், தி.மு.க. பிரமுகரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ள அந்த 40 பக்க நோட்டிலும் இடம்பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், வாக்குப் பதிவு முடிவுற்ற நிலையில், கைப்பற்றப்பட்ட ரூ. 81 லட்சத்துக்கான ஆவணங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம், மாவட்ட நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதுதொடர்பாக நடந்த விவரம், மேற்கொள்ளப்பட்ட விசாரணை, சம்பந்தப்பட்ட தேர்தல் நன்னடத்தை பறக்கும் படை அதிகாரிகளின் வாக்குமூலம் உள்ளிட்டவை குறித்த அறிக்கையை மாவட்ட நிர்வாகமும், தேர்தல் ஆணையத்துக்கு தாக்கல் செய்துள்ளது எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந் நிலையில், மத்திய, மாநில உளவுப் பிரிவு போலீஸ் பிரிவினர் மதுரையில் சனிக்கிழமை முதல் முகாமிட்டுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக ஐ.பி. (இண்டலிஜென்ட் பீரோ) கண்காணிப்பாளர் தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள் மதுரை மேற்குத் தொகுதியில் முகாமிட்டு, பணம் விநியோகம் செய்யப்பட்டது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் எனவும் கூறப்படுகிறது.

விரைவில் நடவடிக்கை: மாவட்ட நிர்வாகம் தாக்கல் செய்த அறிக்கை, உளவுப் பிரிவு அதிகாரிகள் தாக்கல் செய்யவுள்ள அறிக்கையின் அடிப்படையில் மதுரை மேற்குத் தொகுதியில் நடந்த தேர்தல் ரத்து செய்யப்படுமா? அல்லது சம்பந்தப்பட்ட கட்சியின் வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவாரா? என்ற முடிவு விரைவில் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment