islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

தேர்தல் முடிவால் பிளஸ் 2 "ரிசல்ட்' வெளியிடுவதில் சிக்கல்


சட்டசபை தேர்தல் முடிவு காரணமாக, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை, குறித்த தேதியில் வெளியிட முடியாத சிக்கல் எழுந்துள்ளது. தேர்தல் முடிவு தேதியையொட்டி, தேர்வு முடிவும் தயாராகும் என்பதாலும், தேர்தல் முடிவுக்குப்பின் புதிய அரசு பதவியேற்கும் வைபவம் நடைபெறும் என்பதாலும், தேர்வு முடிவுகள் வெளியாவது, கடந்த ஆண்டை விட, நான்கு நாள் வரை தள்ளிப் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


தேர்வு முடிவுகள் முன்கூட்டி வெளியிடவும் வழியில்லை.தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த மார்ச் 2ம் தேதி முதல், 25ம் தேதி வரை, பிளஸ் 2 தேர்வுகள் நடந்தன. 7 லட்சத்து 23 ஆயிரத்து 545 மாணவர்கள், இத்தேர்வை எழுதினர். 43 மையங்களில் நடந்துவந்த விடைத்தாள் திருத்தும் பணிகள், இன்னும் நிறைவு பெறவில்லை.பெரும்பாலான மையங்களில் பணிகள் முடிந்து விட்டாலும், சில மையங்களில் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மொழிப்பாட விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் முடியவில்லை. இப்பணிகள், வரும் 20ம் தேதியுடன் முடிகின்றன.வழக்கமாக, மே இரண்டாவது வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும். கடந்த ஆண்டு, மே 14ம் தேதி தேர்வு முடிவு வெளியானது.
இந்த ஆண்டும், இதே தேதியிலோ அல்லது ஒரு சில தினங்கள் முன்னதாகவோ, வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிவுகள், மே 13ம் தேதி வெளியாகிறது. இந்த தேதிக்குள், தேர்வு முடிவுகளை வெளியிட கண்டிப்பாக வாய்ப்பு இல்லை என, தேர்வுத்துறை வட்டாரங்களும், "டேட்டா சென்டர்' வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.ஏனெனில், விடைத்தாள் திருத்தும் மையங்களில் பெறப்படும் மதிப்பெண் விவரங்களை, மீண்டும் ஒரு முறை சரிபார்த்து, தேர்வுத்துறை, ஒப்புதல் அளித்த பிறகே, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள, "டேட்டா சென்டரில்' ஒவ்வொரு மாணவருக்கும் மதிப்பெண்கள் பதியும் பணி துவங்கும்.ஏழு லட்சம் மாணவர்களுக்கும், மதிப்பெண்களை பதிவு செய்து, சரிபார்த்து, "ரிசல்ட்' தயாரிக்க, 20 நாட்களுக்கு மேல் தேவைப்படும்.
முன்கூட்டியே தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் அவசரம், அவசரமாக செயல்பட்டால், பல்வேறு குழப்பங்கள் நேரிடும் என்பதை, தேர்வுத்துறையும், "டேட்டா சென்டரும்' உணர்ந்துள்ளன.எனவே, கடந்த ஆண்டைவிட முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு இல்லை. 13ம் தேதிக்குப்பின் தேர்வு முடிவுகள் தயாரானாலும், உடனடியாக முடிவை வெளியிட முடியாது. ஏனெனில், 14ம் தேதி முதல், புதிய அரசு அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடக்கும்.எனவே, இதுபோன்ற நேரத்திலும் தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு இல்லை என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், தேர்வு முடிவுகள் எதிர்பாராதவிதமாக தேர்ச்சி சதவீதம் குறைந்திருந்தால், அதுகுறித்து அரசிடம் ஆலோசிக்க வேண்டிய கட்டாயம், தேர்வுத்துறைக்கு ஏற்படும்.உண்மையான தேர்ச்சி சதவீதம் தெரிந்ததும், அது சராசரி அளவில் இருந்தால் பிரச்னை இருக்காது.
ஆனால், 5 சதவீதம் அளவிற்கு சரிந்தாலும், அதனால் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவதுடன், அரசியல் ரீதியாக பல்வேறு விமர்சனங்களை தற்போதைய அரசு எதிர்கொள்ள நேரிடும்.ஒரு மதிப்பெண் முதல் ஐந்து மதிப்பெண்கள் வரை தோல்வியடையும் நிலையில் உள்ள மாணவர்களை, கடைசி நேரத்தில் அரசு, "கரையேற்றி' விடுவது, ஒவ்வொரு ஆட்சியிலும் நடந்து வருகிறது. எனவே, இதுபோன்ற சிக்கல்கள் எல்லாம் இருப்பதால், புதிய அரசு அமைந்தபின், பள்ளிக் கல்வித் துறைக்கு பொறுப்பேற்கும் அமைச்சரிடம் ஆலோசனை பெற்ற பிறகே, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment