காவல்துறை உயரதிகாரிகளால் பெண் காவலர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"வேலியே பயிரை மேய்கிறது" என்ற பழமொழிக்கேற்ப மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்யும் ஆசிரியர்களும், பக்தர்களை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கும் சாமியார்களும், பெண் ஊழியர்களை பாலியல் தொந்தரவு செய்யும் ஆண் உயரதிகாரிகளும், பெண் காவலர்களை பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கும் காவல்துறை உயரதிகாரிகளும் நாளுக்கு நாள் பெருகி வருவதுடன், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தினந்தோறும் அதிகரித்து வருகின்றன.
இந்த வரிசையில், ஈரோடு காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வரும் ஒருவர் தனது உயரதிகாரிகள் தனக்கு பல்வேறு விதமான பாலியல் தொந்தரவுகளை கொடுத்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது புகார் மனுவில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: "நான் ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றேன். நான் பணியாற்றி வரும் மாவட்டத்தில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் சிலர் எனக்கு பல்வேறு விதமான பாலியல் தொல்லைகள் கொடுத்து வருகின்றனர். வெளியே சொல்ல முடியாத அளவுக்கு நான் பாலியல் சித்தரவதைகளுக்கு ஆளாகி உள்ளேன். நீதிபதிகள் கேட்டுக் கொண்டால் இதை தனியாக சொல்லத் தயாராக உள்ளேன்.
பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் தொல்லைகள் தொடர்பாக 1997-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில் பெண்கள் பணிபுரியும் இடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகள் பற்றி விசாரிக்க 3 பேர் கொண்ட குழுக்களை அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவு வெளிவந்து 13 ஆண்டுகள் ஆகியும் தமிழ்நாட்டில் பெண்கள் பணிபுரியும் காவல் நிலையங்களிலோ, போலீஸ் சரகத்திலோ, மாவட்ட போலீஸ் அலுவலகத்திலோ விசாரணைக் குழு இதுவரை அமைக்கப்படவில்லை.
எனவே, பெண் காவலர்களுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகள் குறித்து விசாரணை நடத்த உடனடியாக குழு அமைக்குமாறு போலீஸ் டி.ஜி.பி.க்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்".
பெண் காவலரின் இந்த புகார் மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால் தலைமையிலான பெஞ்ச், இது குறித்து விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment