ஊட்டச்சத்து குறைவான உலக நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 2-வது இடம். முதல் இடத்தில் வங்காளதேசம் உள்ளது. இந்தியாவில் 47 சதவீத குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைவினால் அவதியுறுகின்றனர். உலகில் பட்டினி நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 15-வது இடம். பட்டினியையும், ஊட்டச்சத்துக் குறைவையும் போக்குவதில் மாமிசத்தின் பங்கு மறுக்கமுடியாதது ஆகும். வெறும் வெஜிட்டேரியன்(சைவ) உணவுகளால் மட்டும் எந்த நாடும் வாழ முடியாது. அவ்வாறு எந்த நாடும் உலகில் இல்லை என்பதுதான் உண்மை. மாமிச உணவும் கூட உணவுப் பட்டியலில் இடம் பெற்றால்தான் பட்டினியை ஓரளவாவது கட்டுப்படுத்த இயலும்.
உலகில் அதிகளவிலான இயற்கை வளங்களை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியா மாமிசத்தை தரும் கால்நடைகளை அதிக அளவில் உற்பத்திச் செய்து உணவுப் பற்றாக் குறையையும், ஊட்டச்சத்து குறைவையும் சமாளிக்க இயலும். அதாவது இவ்வாறுதான் இரண்டு பிரச்சனைகளையும் எதிர்கொள்ள முடியும். ஆகையால்தான் நமது நாட்டில் மீன் விவசாயம், ஆடு விவசாயம், மாடு வளர்த்தல், கோழி வளர்ப்பு ஆகியவற்றை முடிந்தவரை மேம்படுத்த அரசு முயன்று வருகிறது.
புத்தர் பிறந்த நாட்டில் பிராணிகளை இம்சை செய்வது கூட பாவமென கருதினால் அவையெல்லாம் நடைமுறை வாழ்க்கையில் ஒத்துவராது என்பதுதான் நிதர்சனம். சைவ உணவை ஊக்குவிக்கும் ஏராளமான அமைப்புகள் இந்நாட்டில் உள்ளன. பிராணிகளை பாதுகாக்க விரும்பும் மேட்டுக் குடியினரின் ப்ளூ க்ராசும் இந்தியாவில் உள்ளது.
வேத காலத்தில் பார்ப்பனர்கள் மாமிசத்தை சாப்பிட்டுள்ளார்கள். அவர்களது பிரியமான உணவே பசு மாமிசம் தான். இவற்றிற்கான ஆதாரங்கள் அவர்களின் வேதங்களிலும், மனுஸ்மிர்தியிலும் காணக் கிடைக்கின்றன. இன்று மட்டும் அவர்கள் ஏன் தெய்வமாகக் கருதுகிறார்கள்? உயிர்க் கொலையை எதிர்த்த பௌத்தம் செல்வாக்கு பெற்றதால் தாங்களும் செல்வாக்கு பெற வேண்டி மாமிசத்தைக் கைவிட்டு சைவத்துக்கு மாறியவர்கள் பார்ப்பனர்கள். மாமிசத்தைக் கைவிட்ட பிறகு உணவுக்கு என்ன செய்வது? என யோசித்தார்கள். மந்திரம் ஓதுவதை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாத இக்கட்டான நிலையில்தான் அவர்கள் பாலை தேர்வு செய்தார்கள். மற்றொரு பக்கம் அடிமைகளாக நடத்தப்பட்ட மக்கள் வறுமை காரணமாக உணவுக்காக மாடுகளைக் கொன்று அதன் கறியை உட்கொண்டு உயிர் வாழ்ந்தார்கள். பசுக்களெல்லாம் கொல்லப்பட்டுவிட்டால் பார்ப்பனர்களுக்கு பால் பற்றாக்குறை ஏற்படுமே? அதனாலேயே பால் கொடுக்கும் பசுக்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டது. இந்த உண்மையைச் சொன்னால் எடுபடாது என்பதால் பசு புனிதமானது என்கிற கருத்தை பரப்பினார்கள். அன்று பார்ப்பனர்கள் மட்டுமே இந்துக்களாக கருதப்பட்டார்கள். பின்னாளில் மற்றவர்களும் இந்துக்களாக ஏற்கப்பட்டதால் பார்ப்பனர்களுக்கு மட்டுமே தெய்வமாக இருந்த பசு அனைத்து இந்துக்களுக்கும் பொதுவாக்கப்பட்டது. ஆனால் இதனை பெரும்பாலான இந்துக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
பசுக்களை பாதுகாக்க கோ சாலைகளை நிறுவுகிறார்கள். எந்த பயனுமற்ற பசுக்களை பாதுகாப்பதற்காக வேண்டுமானால் நாடு முழுவதும் கோ சாலைகளை நிர்மாணிக்க வேண்டிவரும். பசுக்களை கொல்வதற்கு பதிலாக சித்திரவதை செய்யப்பட்டு கொலைச்செய்யும் சாலைகளாக மாறும் வாய்ப்புள்ளது.
பிரபலமான குருவாயூர் கோயிலுக்கு சொந்தமான கோ சாலையில் பசுக்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பின் பயங்கர காட்சிகளை காண்பவர்கள் இதனை ஆதரிப்பார்களா?
பசுவதையை எதிர்க்கும் பாசிச கயவர்கள்தாம் குஜராத், பாகல்பூர், மும்பை, சூரத், பீவண்டி என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களை கொடூரமாக கொன்று குவித்தார்கள். சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீதான காழ்ப்புணர்வே இவர்களின் பசுவின் மீதான நேசத்திற்கு காரணமாகும்.
சரி மாட்டு இறைச்சியில் மட்டும் என்ன அபாயம் உள்ளது?இதனைக் குறித்து விஞ்ஞானமும் எதுவுமே கூறவில்லை. ஆனால், அவற்றை மிதமாக உண்ணுங்கள் என்று மட்டுமே மருத்துவர்கள் போதிக்கின்றனர். அவ்வாறெனில், உலகிலேயே மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் உள்ள 120 கோடி மக்களை கொண்ட இந்தியாவில் பெரும்பாலான மக்களின் ஊட்டச்சத்தை அளிக்கும் உணவான, பிற மாமிச உணவுகளுடன் ஒப்பிடுகையில் விலை குறைவான மாட்டிறைச்சியை மட்டும் சட்டரீதியாக தடைச் செய்வதன் அவசியம் என்ன?
மத்தியபிரதேச மாநிலத்தில் முன்பே அமுலில் இருந்த பசுவதை தடைச்சட்டம் தற்பொழுது மனிதர்களை கொலைச் செய்வதை விட கொடிய குற்றமாக மாறுவதற்கு என்ன காரணம்? என்ற கேள்வி நியாயமானதே! பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் 2010-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பசு வதை தடைச்சட்ட திருத்த மசோதா தான் இத்தகையதொரு கேள்வியை எழுப்புகிறது.
ஜனநாயக ரீதியாகவும், மதசார்பற்ற கொள்கையின் அடிப்படையிலும் ஒருபோதும் நியாயப்படுத்த முடியாத இந்த சட்டத்திருத்தம் இதுவரை குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைக்காமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்பொழுது திடீரென ஏற்பட்ட ஞானாதோயத்தில் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் கையெழுத்திட்டதால் ‘மத்தியபிரதேஷ் கோவம்ஸ் வத் பிரதிஷேட்(ஸம்ஸோதன்)’ சட்டத்திருத்த மசோதா அமுலுக்கு வந்துள்ளது.
இச்சட்டத்தின்படி பசுவதைச் செய்யும் நபருக்கு தற்போதைய மூன்று ஆண்டுகளுக்கு பதிலாக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். கூடவே 5 ஆயிரம் ரூபாய் அபராதமும். நீதிபதிகள் தங்கள் விருப்பப்படி இந்த அபராத தொகையை உயர்த்தலாமாம். இந்த சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் யாரும் பசுக்களை கொல்வதோ, கொல்வதற்கு உதவுவதோ, பசுக்களை கொல்வதற்கு வண்டியில் ஏற்றி செல்வதோ, பசுவை கொல்வதற்கு கொடுப்பதோ கூடாது. மாநிலத்திற்கு உள்ளேயோ,வெளியேயோ பசுவை அறுப்பதற்கு வாய்ப்புள்ள இடத்திற்கு கொண்டு செல்வதும், கொண்டு போக தூண்டுவதும், ஏஜண்டிடம் ஒப்படைப்பதும் குற்றமாகும். இதுத்தொடர்பான புகாரின் அடிப்படையில் யாரையும், எவ்விடத்திலும் பரிசோதிக்கவும், கைது செய்யவும் ஹெட் கான்ஸ்டபிள் மற்றும் அதற்கு மேல் ரேங்குடைய போலீஸ் அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதைப் போன்றதொரு சட்டம் பா.ஜ.க ஆளும் குஜராத்திலும், கர்நாடகா மாநிலத்திலும் அமுலில் உள்ளது. குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் மசோதாக்களில் இனி கையெழுத்திட காலதாமதம் ஆகாது என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது. நிச்சயமாக இது ஒரு பயங்கரவாத கறுப்புச் சட்டமாகும்.
சிறுபான்மையினர் மீது கொடுமைகளை இழைப்பதில் பிரசித்திப் பெற்ற அரசுகள் இச்சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சிறியதொரு சதவீத பிராமணர்களை தவிர ஹிந்துக்களில் பெரும்பாலான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் பசுக்களை பரிசுத்தமாக கருதுவதுமில்லை அவற்றிற்கு ‘கோ’ பூஜை செய்வதுமில்லை. முஸ்லிம், கிறிஸ்தவ சமுதாயத்தினருக்கும் பசு ஒரு சாதாரண மிருகமே. ஆனால், எந்த சமூகத்தின் மத உணர்வுகளையும் புண்படுத்தக் கூடாது என்பதால் அவர்கள் பசுவதை தடைச்சட்டம் அமுலில் இருக்கும் மாநிலங்களில் பசுவதை தடை சட்டத்தை எதிர்ப்பதுமில்லை. அச்சட்டத்தை மீறி செயல்படுவதுமில்லை.
பின்னர் ஏன் இத்தகையதொரு கொடிய சட்டம்? என கேள்வி எழுப்பினால், அதற்கான விடை மிக எளிதானது. இச்சட்டத்தின் பெயரால் சிறுபான்மை மக்களை முடிந்தவரை சித்திரவதை செய்யவும், அவர்களை காலவரையற்று சிறையில் அடைக்கவும் வழி உருவாகும். பொய் வழக்குகளை ஜோடிப்பதிலும், பொய்யான ஆதாரங்களை உருவாக்குவதிலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்பதை நிரூபித்துள்ள போலீசார் இருக்கும் வேளையில் வேலை மிகவும் எளிதாகும்.
தேசத் துரோகத்தையும், தீவிரவாதத்தையும் தடுப்பதற்கான சட்டத்தில் கூட ஹெட்கான்ஸ்டபிளுக்கு இவ்வளவு பெரிய அதிகாரம் வழங்கப்படவில்லை. பசுவை கொன்றதாகவோ, பசுவை கொல்ல ஒப்படைத்ததாகவோ கேள்வி பட்டால் அதன் அடிப்படையில் நிரபராதிகளை கைது செய்ய தாராளமான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நாம் மதசார்பற்ற இந்தியாவிலா வாழ்கிறோம் என்ற கேள்வியை அடிக்கடி எழுப்பும் சூழல்களில் இதுவும் ஒன்று. இச்சட்டத்தின் கடுமையும், துஷ்பிரயோகம் செய்யப்படும் வாய்ப்பும், எதிர்ப்புகளையும் கவனத்தில் கொண்டு இதுவரை பசுவதை தடுப்பு திருத்த மசோதாவில் கையெழுத்திட குடியரசு தலைவருக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பரிந்துரைக்காமல் இருந்தது. ஆனால் தற்பொழுது பாசிஸ்டுகளுக்கு மத்திய அரசு பணிந்தது மர்மமாகவே உள்ளது.
அரசியல் சட்டரீதியான நிர்பந்த சூழலா? அல்லது மித வாத ஹிந்துத்துவம் தீவிரவாத ஹிந்துத்துவத்தின் முன்னால் மண்டியிட்டதா? பதில் கூறுமா மத்திய அரசு?
அ.செய்யது அலீ.