“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர், தன் அண்டை வீட்டாருக்குத் தொந்தரவு தர வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரீ 5187
அண்டை வீட்டாருக்குத் தொல்லை தருபவன் உண்மையான முஃமினாக இருக்க மாட்டான் என்பதை இந்த நபிமொழி மிகத் தெளிவாக விளக்குகிறது.
“அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்” என்று (மூன்று முறை) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அவன் யார்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “எவனுடைய நாச வேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன் தான்” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஷுரைஹ் (ரலி) நூல்: புகாரீ 6016
அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன் என்று மூன்று தடவை நபிகளார் கூறியது, அண்டை வீட்டாருக்குத் தொல்லை தருவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை விளக்குகிறது. அண்டை வீட்டாருடன் தொடர்ந்து பகைமைப் போக்கைக் கடைப்பிடிப்பவர்கள் இந்த ஹதீஸை ஆழமாகச் சிந்திக்கட்டும். அண்டை வீட்டாருக்குத் தொல்லைகள் தருபவன் சுவர்க்கம் புக முடியாது என்ற கடுமையான எச்சரிக்கையையும் நபிகளார் செய்துள்ளார்கள்.
“எவனுடைய நாச வேலைகளில் இருந்து அண்டை வீட்டார் பாதுகாப்பு பெறவில்லையோ அவர் சுவர்க்கம் செல்ல முடியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 73
முஸ்லிமல்லாத அண்டை வீட்டாருக்கும் பிரத்தியேக உபகாரம் செய்வார்
முஸ்லிம் தனது அருகிலிருக்கும் முஸ்லிம் குடும்பத்திற்கு உபகாரம் செய்வதுடன் தனது உபகாரத்தை நிறுத்திக் கொள்ளாமல் முஸ்லிமல்லாத குடும்பத்துக்கும் அதை விரிவுபடுத்த வேண்டும். ஏனெனில், இஸ்லாமின் மாண்புகள் உலகளாவியது. அது மத, வேறுபாடின்றி உலகின் அனைவரையும் தனது நற்செயல்களால் சூழ்ந்து கொள்ளும் தன்மை பெற்றது.
அப்துல்லாஹ் பின் அம்ரு (ரழி) அவர்களின் வீட்டில் ஆடு அறுக்கப்படும்போது தனது அடிமையிடம், "நமது அண்டை வீட்டாரான யூதருக்கு (ஆட்டிறைச்சியை) அன்பளிப்புச் செய்தாயா? நமது அண்டை வீட்டாரான யூதருக்கு அன்பளிப்புச் செய்து விட்டாயா?'' என (இருமுறை) கேட்பார்கள். "ஏனெனில் நான் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்: "ஜிப்ரீல் எனக்கு அண்டை வீட்டாரைப் பற்றி உபதேசித்துக் கொண்டேயிருந்தார்கள். அவர்களுக்கு வாரிசுரிமையை ஏற்படுத்தி விடுவார்களோ என்று நான் எண்ணுமளவு (உபதேசித்தார்கள்)'' என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி)
அருகிலிருக்கும் அண்டை வீட்டாருக்கு முன்னுரிமையளிப்பார்
அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென்ற இஸ்லாமின் சமூக அமைப்பைப் புரிந்துகொண்ட முஸ்லிம் அண்டை வீட்டாரில் மிக நெருக்கமாக இருப்பவருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் இருக்கின்றனர். அந்த இருவரில் யாருக்கு நான் அன்பளிப்பு வழங்க வேண்டும்?'' என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், "அந்த இருவரில் யாருடைய வாசல் (உம் வீட்டுக்கு) நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு'' என்று கூறினார்கள்.
நல்லறங்கள் பல புரிந்தும் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தந்தால் அவரும் நரகம் புகுவார்
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “ஒரு பெண்மணி அதிகம் தொழுகை, நோன்பு, தர்மம் செய்பவளாகக் கருதப்படுகிறாள்; ஆனால் அவள் அண்டை வீட்டாருக்குத் தன் நாவால் தொல்லை தருகிறாள். (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இவள் நரகில் இருப்பாள்’ என்றார்கள். இன்னொரு பெண்மணி குறைந்த நோன்பு, தர்மம், தொழுகை உடையவளாக இருக்கிறாள் என்று கருதப்படுகிறாள். அவள் தர்மம் செய்தால் வெண்ணைத் துண்டுகளைத் தான் தர்மம் செய்வாள். ஆனால் அவள் அண்டை வீட்டாருக்கு நாவால் தொல்லை தருவதில்லை. (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவள் சுவர்க்கத்தில் இருப்பாள்’ என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: அஹ்மத் 9298
“ஒரு அடியானின் உள்ளம் சரியாகும் வரை அவனுடைய ஈமான் சரியாகாது. அவனுடைய நாவு சீராகும் வரை அவனுடைய உள்ளம் சரியாகாது. யாருடைய அண்டை வீட்டார் அவனின் நாச வேலையிலிருந்து பாதுகாப்பு பெறவில்லையோ அந்த மனிதன் சுவர்க்கம் போக முடியாது. என்று நபிகளார் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: அஹ்மத் 12575
அண்டை வீட்டாரிடம் முறைகேடாக நடக்க மாட்டார்
அண்டை வீட்டாருக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் அவரது நம்பிக்கைக்குரியவராகத் திகழ்வது அவசியமாகும். பக்கத்து வீட்டில் இருக்கிறார்; அவர் நல்லவர் என்று நம்பி வெளியூர் செல்லும் போது அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக அவர் நடந்து கொள்ள வேண்டும். அண்டை வீட்டார் வெளியூர் சென்று விட்டார்; எனவே நாம் அங்கு சென்று திருடலாம், விபச்சாரம் செய்யலாம் என்று எண்ணி தவறான காரியங்களில் ஈடுபட்டால் அது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படும். அதற்குக் கடுமையான தண்டனையும் வழங்கப்படும்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப்பெரியது எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கு நீ இணை கற்பிப்பது” என்று சொன்னார்கள். நான், “நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்” என்று சொல்லி விட்டு “பிறகு எது?” என்று கேட்டேன். “உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்கு போட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது” என்று சொன்னார்கள். “பிறகு எது?” என்று நான் கேட்க, அவர்கள், “உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது” என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) நூல்: புகாரீ 4477
நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப்பெரியது எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கு நீ இணை கற்பிப்பது” என்று சொன்னார்கள். நான், “நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்” என்று சொல்லி விட்டு “பிறகு எது?” என்று கேட்டேன். “உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்கு போட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது” என்று சொன்னார்கள். “பிறகு எது?” என்று நான் கேட்க, அவர்கள், “உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது” என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) நூல்: புகாரீ 4477
பொதுவாக விபச்சாரம் செய்தல் ஒரு குற்றம்; நம்பியவர்களுக்குத் துரோகம் செய்தல் இன்னொரு குற்றம்; இந்த இரண்டும் சேர்ந்து பெரும் பாவமாக மாறி விடுகிறது.
“நீங்கள் விபச்சாரத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?” என்று தம் தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். “அல்லாஹ்வும் அவன் தூதரும் தடை செய்த ஒன்றாகும். இது மறுமை நாள் வரை ஹராமாகும்” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், “ஒருவன் தன் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் விபச்சாரம் செய்வதை விட (மற்ற) பத்துப் பெண்களிடம் விபச்சாரம் செய்வது (தண்டனையில்) இலேசானதாகும்” என்று கூறினார்கள். “திருட்டைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, “அதை அல்லாஹ்வும் அவன் தூதரும் தடை செய்துள்ளார்கள். எனவே அது ஹராமாகும்” என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒருவன் பக்கத்து வீட்டில் திருடுவதை விட (மற்ற) பத்து வீட்டில் திருடுவது (தண்டனையில்) இலேசானதாகும்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அல்மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) நூல்: அஹ்மத் 22734
அதாவது ஒருவர் பக்க வீட்டுப் பெண்ணிடம் விபச்சாரம் செய்வது, மற்ற பத்து பெண்களை விபச்சாரம் செய்தால் கிடைக்கும் தண்டனையை விட மிகக் கடுமையானதாகும். ஒருவர் பக்கத்து வீட்டில் திருடுவது, மற்ற பத்து வீட்டில் திருடுவதால் கிடைக்கும் தண்டனையை விட மிகக் கடுமையானதாகும்.
குழம்பில் தண்ணீரை அதிகப்படுத்துங்கள்
அண்டை வீட்டார் இருக்கிறார்கள் என்ற எண்ணம் நம்மிடம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கட்டும். நாம் நல்ல பொருள்களை சமைக்கும் போது அவர்களுக்கும் வழங்க வேண்டும். குறைவாக நாம் குழம்பு வைத்தாலும் அதில் கொஞ்சம் தண்ணீரைச் சேர்த்து அவர்களுக்கும் வழங்க வேண்டும்.
''அபூதரே! நீ குழம்பு வைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்து! உன் பக்கத்து வீட்டாரை (அதைக் கொடுத்து) கவனித்துக் கொள்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூல்: முஸ்ம் (4758)
அற்பமானது என்று கொடுக்காமல் இருந்து விடாதீர்!
நாம் அண்டை வீட்டாருக்கு வழங்கும் பொருள் தரம் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பது
நிபந்தனையில்லை. சாதாரண பொருளாக இருந்தாலும் அதை வழங்க வேண்டும். கொடுப்பவரும் வாங்குபவரும் அதை அற்பமாகக் கருதக் கூடாது.
''முஸ்லிம் பெண்களே! ஓர் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள்) இழிவாகக் கருத வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரீ (2566)
அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்வதில் தாராளத்தைக் கடைபிடிப்பார்
பக்கத்து வீடு என்று வரும் போது, அவர்கள் வீட்டைக் கட்டும் போது அல்லது வீட்டைப் புதுப்பிக்கும் போது மரக் கட்டைகள் போன்றவற்றை அண்டை வீட்டாரின் சுவற்றில் பதிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இவ்வாறு ஏற்படும் போது அண்டை வீட்டாருக்கிடையில் பெரிய சண்டைகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
அண்டை வீட்டாருக்கு மரப் பலகைகள் போன்றவற்றை தமது சுவற்றில் பதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அதைத் தடுக்கக் கூடாது என்றும் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் நபிகளார் நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்.
அண்டை வீட்டாருக்கு மரப் பலகைகள் போன்றவற்றை தமது சுவற்றில் பதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அதைத் தடுக்கக் கூடாது என்றும் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் நபிகளார் நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்.
''ஒருவர் தன் (வீட்டுச்) சுவரில் தன் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை பதிப்பதைத் தடுக்க வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூஹுரைரா (ர) சொல் விட்டு ''என்ன இது! உங்களை இதை (நபிகளாரின் கட்டளையைப்) புறக்கணிப்பவர்களாக நான் பார்க்கின்றேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த நபி வாக்கைத் தொடர்ந்து எடுத்துச் சொல்க் கொண்டேயிருப்பேன்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அல்அஃரஜ் நூல்: புகாரீ (2463)
இஸ்லாமின் மாண்புகளைப் புரிந்த முஸ்லிம் தனது அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்வதில் மிக தாராளமாக நடந்து கொள்வார். அவருக்கு உபகாரத்தின் கதவுகளைத் திறந்து, தீமையின் வாயில்களை மூடிவிடுவார். அவருக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் குறைவு எற்படுவதை அஞ்சிக் கொள்வார்.
நன்றியற்ற அண்டை வீட்டார்பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எத்தனையோ நபர்கள் மறுமை நாளில் தமது அண்டை வீட்டாரை பிடித்துக் கொள்வார்கள். "இறைவனே! என்னைத் தவிர்ப்பதற்காக அவர் தனது வாசலை மூடிவிட்டார்; அதன் மூலம் தனது உபகாரத்தைத் தடுத்துக் கொண்டார்'' என்று கூறுவார். (அல் அதபுல் முஃப்ரத்)
"ஒரு முஃமின், மற்றொரு முஃமினுக்கு உதாரணம் ஒரு கட்டிடத்தைப் போன்றதாகும். அதில் ஒன்று மற்றொன்றை பலப்படுத்துகிறது.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
மேலும் கூறினார்கள்: "முஃமின்கள் தங்களிடையே நேசிப்பதற்கும், கருணைகொள்வதற்கும், இணைந்திருப்பதற்கும் உதாரணமாகிறது, ஒர் உடலைப் போன்றதாகும். அதில் எதேனும் ஒர் உறுப்பு நோயுற்றால் எல்லா உறுப்புகளும் காய்ச்சலைக் கொண்டும் தூக்கமின்மையைக் கொண்டும் முறையிடுகின்றன.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
ஈமான் எனும் இந்த அற்புதமான இணைப்பின் மூலம் சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களையும் இணைப்பதில் இஸ்லாம் ஆர்வம் காட்டுகிறது. அதில் ஒர் அங்கமே அண்டை வீட்டினருடன் உறுதியான உறவை எற்படுத்தியதாகும்.
நன்மையான காரியங்களில் கூட்டாகுதல்
மார்க்கம் தொடர்பான மற்றும் நல்ல காரியங்களில் கூட்டாக செயல்படும் போது கூடுதல் நன்மைகள் கிடைக்கின்றன. அண்டை வீட்டாருக்கு நன்மையான காரிங்களை எடுத்துச் சொல்லுதல், தீமையான காரியங்களைச் செய்தால் அதைத் தடுத்தல், நற்காரியங்கள் நடக்கும் சபைகளுக்கு அழைத்துச் செல்லுதல், தவறும் பட்சத்தில் கேட்ட நல்ல செய்திகளை அண்டை வீட்டாருக்குச் சொல்லுதல் என்று நற்காரியங்களில் கூட்டாக செயல்பட்டு நன்மைகளை அள்ளிச் செல்ல வேண்டும். நபித்தோழர்கள் இவ்வாறு நற்காரியங்களில் கூட்டாகச் செயல்பட்டுள்ளனர்.
நானும் அன்சாரித் தோழர்களில் ஒருவரான எனது அண்டை வீட்டுக்காரரும், உமைய்யா பின் ஜைத் என்பாரின் சந்ததிகள் வசித்து வந்த இடத்தில் வாழ்ந்து வந்தோம். அது மதீனாவின் உயரமான இடங்களில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்களுடைய அவைக்கு நாங்கள் முறை வைத்துச் சென்று வந்தோம். ஒரு நாள் அவர் செல்வார்; ஒரு நாள் நான் செல்வேன். அறிவிப்பவர்: உமர் (ரலி)நூல்: புகாரீ 89
நானும் அன்சாரித் தோழர்களில் ஒருவரான எனது அண்டை வீட்டுக்காரரும், உமைய்யா பின் ஜைத் என்பாரின் சந்ததிகள் வசித்து வந்த இடத்தில் வாழ்ந்து வந்தோம். அது மதீனாவின் உயரமான இடங்களில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்களுடைய அவைக்கு நாங்கள் முறை வைத்துச் சென்று வந்தோம். ஒரு நாள் அவர் செல்வார்; ஒரு நாள் நான் செல்வேன். அறிவிப்பவர்: உமர் (ரலி)நூல்: புகாரீ 89
அல்லாஹ்விடம் சிறந்தவர்
“நண்பர்களில் அல்லாஹ்விடம் சிறந்தவர் தம் நண்பர்களிடம் சிறந்தவர்களாக இருப்பவர்களே! பக்கத்து வீட்டாரில் அல்லாஹ்விடம் சிறந்தவர், தம் பக்கத்து வீட்டாரிடம் சிறந்தவராக இருப்பவரே!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: திர்மிதீ 1867)
நல்ல அண்டை வீட்டார்
“நல்ல அண்டை வீட்டார் அமைவது, நல்ல வாகனம் கிடைப்பது, விசாலமான வீடு இருப்பது ஆகியவை ஒரு மனிதனின் நற்பேறில் உள்ளதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: அஹ்மத் 14830 தொல்லையைப் பொறுத்துக் கொள்ளுதல்
அண்டை வீட்டார் என்று வரும் போது சில பிரச்சனைகள் ஏற்படத் தான் செய்யும். அதைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு, வாழ்நாள் பகைவர்களாக மாறி விடாதீர்கள்.
அவர்கள் தரும் சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு அவருக்குச் சரியான அறிவுரைகளைக் கூறி திருத்தினால் இறைவனின் பேரருள் கிடைக்கும்.
ஒரு மனிதனுக்குத் தொல்லை தரும் அண்டை வீட்டார் இருக்கிறார்கள். அவரோ அவரின் தொல்லைகளைப் பொறுத்துக் கொண்டால் அல்லாஹ் அவரின் வாழ்வு, சாவுக்குப் போதுமானவனாக இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: ஹாகிம் 2446)
a.abdul wahab,salem. 9942349566