வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள்! இணை கற்பிப்போர் ஒன்று திரண்டு உங்களுடன் போரிடுவது போல் நீங்களும் ஒன்று திரண்டு அவர்களுடன் போரிடுங்கள்! அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோருடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! –
அல் குர் ஆன் (9:36)
‘வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக் கூடியவை. அவை – துல்கஅதாஃ, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜமாத்துல் ஆகிர்-க்கும், ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’
(அறிவிப்பவர்: அபூபக்ரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி- -3197)
மாதங்கள் என்பது பன்னிரண்டு என்பதும் அதில் முஹர்ரம் மாதமும் புனிதத்துக்குறியது என்றும் அதில் செய்ய வேண்டிய அமல்கள் என்ன என்பதையும் நபி(ஸல்) அவர்கள் சொல்லிதந்துள்ளார்கள்
முழுமையாக்கப்பட்ட இஸ்லாம்
…………இன்றையதினம்.எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். ………. அல் குர் ஆன் (5:3)
இஸ்லாம் என்பது நபி(ஸல்) அவர்கள்காலத்திலேயே முழுமையாக்கப்பட்டு விட்டது. இதில் எதையும் கூட்டவோ குறைக்கவோ நமக்கு அதிகாரம் கிடையாது என்பதைதான் மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள வசனம் தெளிவு படுத்துகிறது.
ஆஷுரா நோன்பு
ஆஷுரா நோன்பைப்பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது, அதற்கு அவர்கள் சென்ற வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர் : அபூகதாதா(ரழி), ஆதாரம் : முஸ்லிம்.
ரமளானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
ரமளான் (நோன்பிற்கு) முன் ஆஷுரா நோன்பு (அவசியமாக) நோற்கப்படக்கூடிய ஒன்றாக இருந்தது. ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது விரும்பியவர்கள் அதை நோற்றார்கள். விரும்பியவர்கள் அதை விட்டார்கள். (புகாரி, முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது ஆஷுரா நாளில் யூதர்கள் நோன்பு நோற்றிருப்பதை அறிந்ததும் இது ஏன் என்று வினவினார்கள். அதற்கு யூதர்கள் “இது ஒரு சிறந்த நாளாகும், இன்றைய தினத்தில் தான் அல்லாஹ் இஸ்ரவேலர்களை எதிரிகளிடமிருந்து விடுவித்தான். எனவே அவர்கள் அந்நாளில் நோன்பு நோற்றார்கள்” என்று கூறினார்கள். “மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றுவதற்கு நான் உங்களை விட அதிக உரிமையுள்ளவன்” என்று கூறிவிட்டு அந்நாளில் நோன்பு நோற்குமாறு மக்களை ஏவினார்கள். ( புகாரி)
ஆஷுரா தினத்தன்று நபி(ஸல்) அவர்கள் நோன்பு வைத்ததோடு, அதை வைக்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர்வரும் வருடம் ஒன்பதாவது நாளில் நோன்பு வைப்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)
எகிப்தின் ஆட்சிப்பொறுப்பில் இருந்து நானே மிகப்பெரிய கடவுள் என்று கூறி பல அக்கிரமங்களை புரிந்த ஒரு கொடுங்கோல் அரசனான பிர்அவ்னைக் தண்ணீரில் மூழ்கடித்து, மூஸா (அலை) அவர்களையும் அவர்களது கூட்டத்தாரையும் காப்பாற்றிய நாள் தான் ஆஷூரா நாள் எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாள்.
கர்பலா என்ற போரில் நடந்த துயரச்சம்பவங்களை கூறி தற்போது புனிதமான முஹர்ரம் மாதத்தை கேவலப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வருட முஹர்ரம் மாதத்திலும் இஸ்லாத்திற்கு கடுகளவும் சம்மந்தமில்லாத ஏராளமான அனாச்சாரங்கள் முஸ்லீம் பெயர் தாங்கிகளால் அரங்கேற்றப்படுகிறது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித்தந்த வழிமுறையை முதுகுக்குப்பின்னால் தூக்கி எறிந்து விட்டு இன்றைக்கு மனம் போன போக்கில் ஒவ்வொறு ஊரிலும் ஒவ்வொறு விதமாக மாற்றுமத கலாச்சாரத்தை பின்பற்றி பல் வேறு வகையான வழிகெட்ட செயல்கள் நடந்தேறி வருவதை காணமுடிகிறது.
ஆஷுரா என்பது துக்க நாளா?
ஹுசைன் (ரழி) கொல்லப்பட்ட சோக சம்பவம் முஹர்ரம் பத்தாம் நாளில் நடந்ததால் அந்த நாள் துக்க நாளாக ஒரு போதும் ஆகி விடாது. ஏனென்றால் இரண்டாம் கலீபாவாகிய உமர் (ரழி) அவர்களும், மூன்றாம் கலீபாவாகிய உஸ்மான் (ரழி)அவர்களும் இஸ்லாத்தின் எதிரிகளால் கொல்லப்பட்டனர் என்பதை அனைவரும் அறிந்ததே. கலீபாக்கள் கொல்லப்பட்ட அந்த துயரமான நாட்களை யாரும் துக்க தினமாக பார்ப்பதில்லை.
அதே சமயம் நான்காம் கலீபாவாக இருந்த அலி (ரழி) அவர்களின் மகன் ஹுசைன் (ரழி) கொல்லப்பபட்டதாக கூறி துக்க தினம் கொண்டாடுவது எப்படி இஸ்லாத்தில் நுழைந்தது என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். இதற்கு ஷியாக்களின் திட்டமிட்ட சதிதான் காரணம் என்பதை நாம் யாரும் மறுக்க முடியாது.
மேலும் நபி (ஸல்) அவர்கள் இறந்தது ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு ரபியுல் அவ்வல் மாதம் திங்கள்கிழமை தான். அன்றைய தினத்தை யாரும் துக்க தினமாக கொண்டாடுவது கிடையாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திங்கட்கிழமை மரணித்தார்கள்……
( புகாரி 1387)
ஹுசைன் (ரழி) அவர்கள் கொல்லப்பட்டதை துக்க தினமாக கொண்டாடுபவர்கள், நாம் உயிரினும் மேலாக கருதும் நபி(ஸல்) அவர்கள் மரணத்திற்காகவோ, உமர்(ரழி), உஸ்மான் (ரழி) போன்ற முக்கியமான நபித்தோழர்கள் கொல்லப்பட்டதற்காகவோ ஏன் துக்க தினம் கொண்டாடுவதில்லை.? என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும்.
ஷியாக்களை அறிந்து கொள்வோம்
நாம் உயிரினும் மேலாக நேசிக்கக்கூடிய இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தூதர்(நபி)ஆவதற்கு தகுதியில்லாதவர், உண்மையில் தூதராக வேண்டியது அலி (ரழி) அவர்கள் தான் என நம்பி உலகத்தில் பிரச்சாரம் செய்து வருபவர்கள். அதுமட்டுமல்லாமல், அபூபக்கர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி), நபி(ஸல்) அவர்களின் மனைவியான ஆயிஷா (ரழி) போன்றோர்களை சபிக்கக் கூடியவர்களாகவும் இருந்து வருகிறார்கள்.
இன்னும் பல மோசமான நம்பிக்கைகளும் வைத்து கொண்டிருக்கக் கூடியவர்கள் தான் இந்த ஷியாக்கள். இதிலிருந்து ஷியாக்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை தகர்த்தெறியக் கூடியவர்கள் என்பதை நாம் புரியலாம். மேலும் இவர்கள் நம்பும் பல கொள்கைகள் யூதர்களிடமிருந்து நடைமுறைப்படுத்தியதாகும். இதன் மூலம் முஹர்ரம் மாத அனாச்சாரங்கள் ஷியாக்களால், முஸ்லீம் சமுதாயத்தில் ஊடுருவியது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
இஸ்லாத்தின் பார்வையில் துக்க நாள்
இஸ்லாமிய கொள்கை அடிப்படையில், யார் மரணித்தாலும், கொல்லப்பட்டாலும், அந்த நாள் மீண்டும் வரும் போது அந்த தினத்தை துக்க தினமாக கொண்டாடுவது என்பது கிடையாது. அப்படி கொண்டாட நினைத்தால் வருடம் முழுதும் துக்கத்திலேயே கழிக்க வேண்டியதாக இருக்கும்.
இறந்து போனவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்த நாங்கள் தடுக்கப் பட்டுள்ளோம்……….. என நபி (ஸல்) கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரழி) நூல்: புகாரி 313)
ஹுசைன் (ரழி) கொல்லப்பட்ட பின் மூன்று நாட்களுடன் அந்தச் சோகம் முடிந்து விடுகின்றது. இதை அவர்களது குடும்பத்தார் பொறுமையுடன் ஏற்றுக் கொண்டு, இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் என்று சொல்லி தங்களுடைய வாழ்நாளில் சகஜ நிலைக்குத் திரும்பி இருப்பார்கள். ஹுசைன் (ரழி)யின் குடும்பத்தார் ஒவ்வோர் ஆண்டும் முஹர்ரம் பத்தாம் நாளை சோக தினமாக அனுஷ்டிக்கவில்லை, என்றாலும் ஷியாக்கள் முஹர்ரம் மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் பஞ்சா என்னும் கொண்டாட்டங்களுக்கு புத்துயிர் கொடுத்து, இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையை சிதைத்து வருகின்றனர்.
முஹர்ரத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் அனாச்சாரங்கள்
ஷியாக்களால் துவங்கி வைக்கப்பட்ட இந்த பஞ்சா எடுத்தலில் நடக்கும் தற்போதைய அனாச்சாரங்கள், அட்டூழியங்கள், கேலிக் கூத்துக்கள் ஆகியவற்றை முதலில் வரிசையாகப் பார்ப்போம்.
குறிப்பாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஐந்து விரல்கள் கொண்ட கை ஒன்று வைக்கப்படும். இதன் தாத்பரியம் இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கக் கூடியதாகும். அதாவது ஷியாக்களின் கொள்கையான ஐந்து புனிதர்களை வணங்கும் கொள்கைதான் இந்த பஞ்சாவின் அடிப்படையாகும்.
அதாவது, 1) முஹம்மது (ஸல்) அவர்கள், 2) அவர்களின் திருமகளார் பாத்திமா (ரலி), 3) அலி (ரலி), 4) ஹஸன் (ரலி), 5) ஹுஸைன் (ரலி)
என்று ஐந்து பேரைக் குறிப்பிடுவதே இந்த பஞ்சா எனும் கையாகும். உருது மற்றும் ஹிந்தியில் பாஞ்ச் என்றால் ஐந்து என்று எல்லோரும் அறிவோம். இதை அடிப்படையாகக் கொண்டே பஞ்சா என்ற பெயர் வந்தது.
பஞ்சா எடுத்தல், ஏழாம் பஞ்சா, தாம்பத்தியத்திற்குத் தடை, பத்தாம் பஞ்சா, பத்தாம் நாள் சந்தனக் கூடு, போதையில் சிலம்பாட்டம், மது போதையில் புலி வேஷம் போடுதல், நோய் நிவாரணத்தை கேட்டு தீக் கிணற்றில் உப்பு மிளகு போடுதல், தீமிதி, தீக்குளிப்பு, தீச்சட்டி தூக்குதல், மாவிளக்கு ஏந்துதல், அல்லாஹ் நமக்கு பரிசுத்தமாக்கி தந்த மீன் உணவை தடுத்து ஹராமாக்குவது, பெண்களின் கவர்ச்சி நடனம், ஆடல் பாடல்கள், கன்னி பெண்களும், திருமணமான பெண்களும் அன்னியர்கள் முன் தன் அழகு அலங்காரங்களையும் மறைக்காமல் வெளிகாட்டி செல்வது, குழந்தை பாக்கியம் வேண்டி நேர்ச்சை, போன்ற, இஸ்லாத்திற்கு எதிரான அனைத்து அநியாயமான செயல்களையும், முஸ்லீம் என்று கூறி செய்து வருகின்றனர். இஸ்லாத்திற்கும் இந்த அனாச்சாரத்திற்கும் என்ன சம்மந்தம் என்பதை சற்று நிதானமாக சிந்திப்பீர்களா?
மேலும் நபியின் நடைமுறை வாழ்க்கையில் அறியாமைக்கால நேர்ச்சைகளை தடைசெய்ததை கீழ்கண்ட சம்பவங்களின் மூலம் நாம் தெளிவாக அறியலாம்.
ஒரு முதியவர் தம் இரண்டு புதல்வர்களிடையே தொங்கிய படி கால்கள் பூமியில் இழுபட வந்து கொண்டிருந்தார். அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், இவருக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். (கஅபாவுக்கு) நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கின்றார்’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், இவர் இவ்விதம் வேதனைப் படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது’ என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள்.
(அறிவிப்பவர்: அனஸ் (ரளி) நூல்: புகாரி 1865)
அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தால் கூட, இது போன்று தம்மை வருத்திக் கொள்ளும் நேர்ச்சைகளைச் செய்யக் கூடாது எனும் போது அதை மற்றவர்களுக்காகச் நேர்ச்சை செய்வது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை விளங்கலாம். அப்படியே பாவமான காரியத்தில் நேர்ச்சை செய்தாலும் அதை நிறைவேற்றக் கூடாது என்ற சட்டமும் இந்த மக்களுக்குத் தெரியவில்லை.
அல்லாஹ்வுக்கு வழிபடுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் அவனுக்கு வழிபடட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக நேர்ச்சை செய்தால், அவனுக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) நூல்: புகாரி 6696)
அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதை மறந்துவிட்டு, கற்பனையாக ஒன்றை ஏற்படுத்தி, அதை பஞ்சா என்று பெயரும் கூறி அல்லாஹ்விற்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கமான நேர்ச்சையை இந்த சந்தன கூடு சாவடிக்குள்ளும், கொடிமரத்திற்கும் செய்து வரும் இணைவைப்பு என்னும் மாபாதகம் நடப்பதை நாம் அனைவரும் தடுக்க வேண்டாமா? நாம் தடுக்க வேண்டும் என்பதை கீழ்வரும் நபிவழிச் செய்தி நமக்கு அறிவுறுத்துகிறது.
நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணைவைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். தாத்து அன்வாத்’ என்று சொல்லப்படும்(அந்த மரத்தை). நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் அல்லாஹ்வின் தூதரே.. அவர்களுக்கு தாத்து அன்வாத்து’ என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்தி தாருங்கள் என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் சுப்ஹானல்லாஹ்! அல்லாஹூ அக்பர்.! இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும் என்று சொல்லி, என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா(அலை) அவர்களிடத்தில், மூஸாவே அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள் என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள், நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள் என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையைப் படிப்படியாக பின்பற்றுவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்:அபூவாக்கிதுல்லைசி(ரழி) நூல்: திர்மிதி 2106, அஹ்மத் 20892)
அந்த வார்த்தை தற்போது இந்த நிகழ்வுகள் மூலம் மெய்படுத்தப்படுவதை நாம் பார்த்து வருகிறோம். எதை எதை எல்லாம் நபியவர்கள் தடுத்தார்களோ அவை அனைத்தும் ஒரே இடத்தில் நடத்தப்படுவது தான் இந்த பஞ்சா என்னும் முஹர்ரம் மாத கொண்டாட்டம். எனவே யூத ஷியாக்களின் கூட்டுச் சதியால், உயிரினும் மேலான இஸ்லாமிய மார்க்கத்தை கீழான நிலையில் மக்களுக்கு காட்டுகின்றனர். இதனால் இஸ்லாத்தை விரும்புபவர்கள், நம்மிடம் உள்ள மூடப்பழக்கங்கள் இங்கேயும் இருக்கிறது என நினைத்து இஸ்லாத்தினுள் நுழைய தயங்குகின்றனர்.
இஸ்லாமிய கொள்கைகளை மேலோங்க செய்வதற்காக தியாகம் செய்ய வேண்டிய இளைய சமுதாயம் தான், இது போன்ற அனாச்சாரங்களை தடுக்க வேண்டியவர்கள். ஆனால் அவர்களோ இதை கண்டு கொள்ளாமல் இருப்பது எந்த வகையில் நியாயமான செயலாகும்? நாம் செய்யும் தியாகம் தான் நமக்கு பின்னுள்ள இஸ்லாமிய சமுதாயத்தை நெருக்கடியில்லாமல் வாழ வைக்கும் என்பதை நாம் அறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உலகில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை தெளிவான அடிப்படையில் தருவதே இஸ்லாத்தின் உன்னத நோக்கமாகும். எனவே இந்த தூய இஸ்லாம், இது போன்ற ஷியாக்களின் சதித்திட்டத்தினால் உருவாக்கப்பட்ட பஞ்சா போன்ற அனாச்சாரத்தை எப்படி ஆதரிக்கும்? என்பதை ஒரு கணம் சிந்திக்கவும்.
வெற்றி பெற்றோர் யார்?
இஸ்லாத்தை பாதுகாப்பது ஒரு முஃமீனுக்கு முக்கிய கடமையாகும். இஸ்லாத்தை பாதுகாப்பது என்றால், குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் மூலம் போதிக்கப்பட்ட கொள்கைகளையும், கோட்பாடுகளையும், கூட்டாமல் குறைக்காமல் செய்து வருவது தான். அப்படி யாராவது கூட்டுவதோ குறைப்பதோ செய்யும் பொழுது அதை தட்டிக் கேட்க வேண்டிய, தடுத்து நிறுத்த வேண்டிய, அதை மனதால் வெறுக்க வேண்டிய கடமை முஸ்லீம்கள் அனைவருக்கும் உண்டு.
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)
அந்த வெற்றி பெற்ற மக்களாக நாம் மாறுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!!.