islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

போதையில் தள்ளாடும் தமிழகம்!!

                                         

மதுவைப்பற்றி குர் ஆன் இவ்வாறு கூறுகிறது, மது, சூதாட்டம் இவை அருவறுக்கத்தச்சைத்தானியச் செயல்கள் என்று.

அதிகம் போதை தரக் கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தமிழர்களாலும், கருணாநிதியாலும் பெரிதும் மதிக்கப்படும் வள்ளுவரும் மதுவின் கொடுமையறிந்தே ''கள்ளுண்ணாமை'' எ‌ன்ற அதிகாரத்தையும் இயற்றியிருக்கிறார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே.

மது அருந்தும் பழக்கத்தின் கொடுமையை அறிந்து காந்தியடிகள் மதுவிலக்கை ஒரு கொள்கையாகவே கருதினார். 1906 ம் ஆண்டு கள்ளுக்கடை மறியலையும் தொடங்கினார்.

அவரை பின்பற்றி தேசத்தின் பல தலைவர்களும் பல இடங்களில் மதுவிலக்குப்பற்றி முழக்கமிட்டனர்.

தமிழகத்தில் இராஜாஜி அவர்கள் முழு மதுவிலக்கை அமல்படுத்தினார் தந்தை பெரியாரும் மதுவிலக்கை ஆதரித்தார்.

மதுவின் கொடுமையை அன்று முதல் இன்றுவரை பல சான்றோர்கள் கூறிவருகிறார்கள். சிறிதளவு சிந்திப்பவர்கள் கூட மதுவின் தீமைகளை அறிந்தே வைத்துள்ளனர்.

ஆனால், இன்று மீண்டும் மது நாட்டிற்குள் புகுந்து சமுதாயத்தை சீரழித்துவிட்டது இதனால் நாட்டின் எதிர்காலம் நிச்சயம் பாதிக்கப்படும் என்பது மட்டும் உண்மை.

இன்றைக்கு செய்திதாள்களை எடுத்துக்கொண்டால் நாள்தோறும் வரக்கூடிய செய்திகள்,

பள்ளி மாணவர்களிடையே அதிகரிக்கும் மதுப்பழக்கம்.

கிராமத்து பெண்களிடையே குடிப்பழக்கம் அதிகரிப்பு.

குடிப்பதற்கு பணம் தராத மகன் குத்திக்கொலை.

டாஸ்மாக் கடைகளில் கல்லூரி மாணவர்கள் கூட்டம்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் விபத்து பலர் மரணம்.

குடி போதையில் இளைஞர் தற்கொலை.

இது போன்ற செய்திகள் வராத ஊடகங்களே இல்லை எனலாம்.

தமிழகத்தில் எந்த கட்சியினுடைய கட்சி மாநாடுகளுக்கும், பொதுக் கூட்டங்களுக்கும் கூட்டம் சேர்க்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும் தலைவர்கள், தொண்டர்களுக்கு சாராய போதையை இலவசமாக வழங்கி, கட்சியை வளர்க்கிறார்கள்.

இதனால், ஒவ்வொரு நாளும் டாஸ்மாக் விற்பனையும், குடிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சாராயத்தால் சாலை விபத்து, வீண் தகராறு, திருட்டு, கொலை, கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு, குடும்பப் பிரச்னை, நிம்மதியின்மை, உடல் நலக் கேடுகள் ஏற்படுகின்றன.

சாராயப்பழக்கம் இருக்கக்கூடாது என நினைப்போரையும்கூட, திரும்பிய பக்கமெல்லாம் சாராயக் கடைகளைத் திறந்து வைத்து குடிப்பதற்கு அரசு அழைப்பு விடுக்கிறது குடி மக்களை நோக்கி.

பள்ளிகள், மருத்துவ மனைகள் இல்லாத ஊர்களில்கூட இப்போது சாராயக் கடைகள் உள்ளன. ஏழைகளுக்கு தரமான கல்வியும், சிறந்த மருத்துவமும் ஒரு நல்ல ஆட்சியாளர்களால் உறுதி செய்யப்பட வேண்டும். அதுதான் நல்லாட்சியின் அழகு.

அதை விடுத்து கள்ளச்சாராயம் வேண்டாம், நல்லச்சாராயம் தருகிறோம் என்று சாராயக்கடைகளை திறப்பது நல்லாட்சியின் அழகல்ல.

வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டிய ஆட்சியாளர்கள், குடும்பத் தலைவரை குடிக்கு அடிமையாக்கி, விபத்தில் அவர் இறந்து விட்டால், அது வரை அந்தக்குடிமகன் அரசுக்குச் செலுத்தி வந்த டாஸ்மாக் கப்பத்துக்கு பதிலாக அவரது மனைவிக்கு விதவை உதவித்தொகை வழங்கி, அஞ்சலி செலுத்தும் அவலம்.

உலகத்தில் எந்த நாட்டிலும் நடக்காத அதிசயமாக கல்வியையும், மருத்துவத்தையும் தனியாரிடம் தாரை வார்த்து விட்டு சாராயம் காய்ச்சும் அரசு நம் அரசு.

முக்கிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் சிறிய கட்சிகள், தங்களுடைய கட்சி சார்பில் நடத்தப்படும் கூட்டங்களில் மதுவை ஒழிப்போம்! மதுவை ஒழிக்காமல் விடமாட்டோம்!! என கோசமிட்டுவிட்டு சாராயக்கடையை திறக்கும் கட்சிகளுடனேயே கூட்டணி வைத்து அந்த கட்சிக்கு வால் பிடிப்பார்கள். மது விலக்கை அமல் படுத்தும் கட்சியினுடன் மட்டும் தான் கூட்டணி வைப்போம் என்று தைரியமாக அறிவிக்கக்கூடிய ஒரு கட்சியும் தமிழகத்தில் இல்லை.

முஸ்லீம் லீக் கட்சி முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது, சமுதாயத்திற்காக எந்த நன்மையும் செய்யவில்லை, நாங்கள்தான் உண்மையான சமுதாய தொண்டர்கள் என கூறி புதிதாக களம் கண்ட
த மு மு க, ம ம க, கூட மது விலக்கை அமல் செய்யும் கட்சியுடன் மட்டும் தான் எங்கள் கூட்டணி, இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றை நாட்டு மக்கள் மீது வலிய திணிக்கும் கட்சியுடன் நாங்கள் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று கூற துணிவில்லாதது மட்டுமல்ல, இவர்கள் கூட்டணி வைத்த கட்சி ஆட்சி அமைத்து விட்டால், அந்த கட்சி சட்டசபையில் எங்கள் ஆட்சியில் கடந்த ஆட்சியைவிட அதிகமாக சாராயம் விற்று பல கோடி ரூபாயை அதிகமாக திரட்டி சாதனை படத்திருக்கிறோம் அந்த சாராயம் விற்ற காசில் மக்களுக்கு இலவசமாக பல திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று மார் தட்டி கூறினால், இவர்கள் பாராட்டுவார்கள் மேசையைதட்டி.

போதையில் தள்ளாடும் தமிழகத்தை தலை நிமிர்ந்து நிற்க வைக்க இனியொரு விதி செய்வோம் என்ற கண்டன உரையுடன் இரு சக்கர வாகன பிரச்சாரப் பேரணியையும் த.மு.மு.க., ம ம க கோவை போன்ற இடங்களில் நடத்தும். மக்களை ஏமாற்ற.

தமிழகத்தில் மது விலக்கும், ரத்தும்.

இந்தியாவில் தமிழ்நாட்டிலும், குஜராத் மாநிலத்திலும் மது விலக்கு அமலில் இருந்தது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, பாண்டி, கர்நாடகம் உள்பட பிற மாநிலங்களில் மது விலக்கு அமலில் இல்லாமல் இருந்தது.

புதிதாக மது விலக்கை அமல் படுத்தும் மாநிலங்களுக்கு உதவிப்பணம் (மானியம்) வழங்கப்படும் என்று அன்றைய மத்திய அரசு அறிவித்தது.

''எங்களுக்கும் மானியம் வழங்குங்கள்'' என்று, அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி கோரினார். ''ஏற்கனவே மது விலக்கை அமுல் நடத்தி வரும் மாநிலங்களுக்கு மானியம் கிடையாது'' என்று மத்திய அரசு கூறியது.

ஏற்கனவே மது விலக்கை அமல் நடத்தும் மாநிலங்களுக்கு இப்படி தண்டனை அளிப்பதா? எங்களுக்கும் மானியம் கொடுங்கள் என்று கருணாநிதி கோரியும், அவருடைய கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இதனால் மது விலக்கை ரத்து செய்துவிட்டு, பிறகு (மத்திய அரசு மானியம் கிடைக்கும்போது) மீண்டும் அமலுக்குக் கொண்டுவர முடிவு செய்தார் கருணாநிதி .

மதுவிலக்கை ரத்துசெய்ய கருணாநிதி திட்டமிட்டுள்ளத் தகவல் ராஜாஜிக்கு கிடைத்தது.​ உடனே ராஜாஜி,​​ கொட்டும் மழையில் குடைபிடித்தபடி கருணாநிதி வீட்டுக்குச் சென்று,​​ "மதுவிலக்கை ரத்துச் செய்யக்கூடாது'' என்று கேட்டுக் கொண்டார்.​ ஆனால்,​​ அதற்கு கருணாநிதி செவிசாய்க்கவில்லை.​ அப்போது,​​ "நான் சூடமாக இருக்கிறேன்:​ என்னைச் சுற்றி நெருப்பு ​(அண்டை மாநிலங்களில் மது விற்பனை)​ இருக்கிறது;​ நான் என்ன செய்வது'' என்று  அவருக்கே உரித்தான கவிதை நடையில் அழகு தமிழில் கூறி  நியாயப்படுத்தினார் கருணாநிதி.

1971 ஆகஸ்டு 30 ந்தேதி முதல் மது விலக்கு தள்ளி வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அன்று முதல் மதுக்கடைகளைத் திறப்பதற்கு வகை செய்யும் அவசர சட்டம் ஒன்றை அன்றைய தமிழக கவர்னர் கே.கே.ஷா பிறப்பித்தார். அந்த அவசரசட்டத்தில், இப்போது தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறாததால், இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்படுகிறது. இந்த அவசர சட்டம் ஆகஸ்டு 30 ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த அவசர சட்டப்படி, மது விலக்கு சட்டம் அமல் படுத்தப்படுவது தமிழகத்தில் அடியோடு நிறுத்தி வைக்கப்படுகிறது. அரசியல் சட்டத்தில் உள்ள அதிகாரத்தின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேற்கண்டவாறு அவசர சட்டத்தில் கூறப்பட்டு இருந்தது.

இந்த அவசர சட்டத்தின் காரணமாக, மது விலக்கு அமலில் இருந்தபோது மது குடித்த குற்றம், மது வாங்கிய குற்றம் போன்றவைகளுக்காக தண்டனை அடைந்தவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 700 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

மீண்டும், சாராயக்கடைகள் திட்டமிட்டபடி திறக்கப்படும். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

மதுக்கடைகள் திறப்பதை எதிர்த்து, ''மது விலக்கு சட்டத்தை நிர்வாக உத்தரவு மூலம் ஒத்தி வைக்க முடியாது. எனவே, தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறப்பது சட்ட விரோதமான செயல். இதற்கு தடை விதிக்கவேண்டும்'' என்று, சுதந்திரா கட்சி எம்.எல்.ஏ. டாக்டர் ஹண்டே, வி.எஸ்.ஸ்ரீகுமார், வெங்கடசாமி நாயுடு ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள்.

ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வீராசாமி, நீதிபதிகள் பி.எஸ்.கைலாசம், ஆர். சதாசிவம், டி.ராமபிரசாத் ராவ், வி.வி.ராகவன் ஆகிய 5 நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்தார்கள். ''மதுக்கடைகளை திறக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு விட்டதால் இந்த மனு செயலற்றதாகி விடுகிறது'' என்று கூறி தள்ளுபடி செய்தார்கள் வழக்கை.

திட்டமிட்டபடி கள்ளுக்கடைகள், சாராயக்கடைகள் திறக்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் 7,395 கள்ளுக்கடைகளும், 3,512 சாராயக் கடைகளும் திறக்கப்பட்டன. சென்னை நகரில் 120 ஒயின், பிராந்தி கடைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. மற்ற மாவட்டங்களில் 60 முதல் 100 கடைகள் வரை திறக்கப்பட்டன.

கள் ஒரு லிட்டர் ஒரு ரூபாய்க்கும், சாராயம் ஒரு லிட்டர் 10 ரூபாய்க்கும் விற்க விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பீர் 5 ரூபாய்க்கும், மற்ற மது வகைகள் ரூ.26 முதல் ரூ.55 வரை விலை நிர்ணயிக்கப்பட்டது. கடைகளை இரவு 10 மணிக்கு மூடிவிடவேண்டும் என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

கள், சாராயம் விற்பனையும் நடந்தது அமோகமாக.

ராஜாஜி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், அண்ணாதுரை ஆகிய ஆறு முதல்வர்கள், மதுவாசனையை அரசாங்கம் மூலம் தமிழக இளைஞர்களுக்குக் காட்டாமல் இருந்தார்கள். தமிழ்நாட்டில் சுமார் 23 ஆண்டு காலம் அமலில் இருந்த மது விலக்கு 1971 ஆகஸ்டு மாதம் தி.மு.க. ஆட்சியின்போது  ரத்து செய்யப்பட்டது.  1991-ல் ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றபோது, சாராயக்கடைகளை மூடினார். இருந்த போதும் கள்ளச்சாராயம் கொடிகட்டிப்பறந்தது. இதைக்குடித்து விட்டு ஆயிரக்கணக்காணோர் வருடம் தோறும் செத்து மடிவதும், பார்வை இழப்பதும் தொடர்ந்துகொண்டிருந்தது.

அன்றைக்கு கெட்டுக்குட்டிச்சுவாராக ஆரம்பித்த தமிழகம் இன்றுவரை மீள வில்லை என்பதுதான் சோகமான உண்மை.

வள்ளுவருக்காக கன்னியாகுமரியில் மிகப்பெரிய சிலையை நிறுவி தமிழகத்தில் என்னை விட வள்ளுவர் மீது யாரும் அன்பு பாராட்ட முடியாது என்று அய்யன் திருவள்ளுவரை போற்றிப்புகழும் கருணாநிதி, வள்ளுவர் எழுதிய குறளுக்கு குறளோவியம் தீட்டிய கருணாநிதி, வள்ளுவர் எழுதிய ''கள்ளுண்ணாமை'' என்ற சாராயத்தின் தீமையை விளக்கும் அதிகாரத்திற்கு ஓவியம் தீட்டவில்லையா? அல்லது, சாராயத்தின் தீமையை உணரவில்லையா?   

சாராயத்தின் தீமைகளை உணர்ந்த பெரியார், தனது தோட்டத்திலிருந்த தனக்கு சொந்தமான தென்னை மரங்களை அழித்தார். போதை எந்த வடிவிலும் மக்களைக் கெடுக்க தானும் ஒரு காரணமாகி விடக்கூடாது என்பதற்காக.

ஆனால், இப்போது, மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை நாம் மக்களுக்கு இலவசமாக பொருள்கள் கொடுத்து ஓட்டு வாங்கி ஆட்சியைப்பிடிக்க, என்றெண்ணி மது உற்பத்திச் சாலைகளை பெரியாரை மதிக்கிறோம் என்று கூறிக்கொள்ளும் கட்சியினரே தொடங்குவது எந்த விதத்தில் நியாயம்?

தான் படிக்காவிட்டாலும், கிராமங்கள்தோறும் கல்விக்கூடங்களைத் திறந்து, ஏழை மக்களும் நன்றாக படிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் கல்விக் கூடங்களை திறந்துவைத்தவர் காமராஜ்.

ஆனால், இன்று பள்ளிகள் பல ஆயிரக்கணக்கில் மூடப்பட்டு, மதுக் கடைகள் பல ஆயிரக்கணக்கில் திறக்கப்படுகின்றன. இதன் மூலம் இளைய சமுதாயத்தை குற்றச் சமூகமாக இன்றைய அரசுகள் மாற்றிக் கொண்டிருக்கிறது.

நர(ந்தர)மோடியின் அன்புச்சகோதரிக்கும், அன்புச்சகோதரர் ஆட்சி செய்யும் காந்தி பிறந்த மண்ணான குஜராத்தில் அரசின் சாராயக்கடை இல்லாமலேயே இந்தியாவிற்கே முன்னோடி (?) மாநிலமாக விளங்குவது தெரியவில்லையா?

பெரியார், அண்ணா, இவர்களின் வழியில் ஆட்சி நடத்துகிறேன் என்று கூறி ஆட்சி செய்யும் அம்மணிக்கு பெரியார், அண்ணா இவர்களின் மதுவிலக்கு கொள்கைகள் புரியவில்லையா?

கடந்த 8-9-2011 அன்று சட்டப்பேரவையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையை, மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் தாக்கல் செய்து, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மூலம் கடந்த 2009&2010ம் ஆண்டில் ரூ.12,498.22 கோடி வருவாய் கிடைத்தது. 2010&2011ம் ஆண்டில் இந்த வருவாய் ரூ.14,965.42 கோடியாக கிடைத்துள்ளது. என்று கூறி பெருமைப்பட்டுள்ளார்.

மதுபானங்கள் மூலம் கடந்த ஆண்டில் ரூ. 6,246 கோடி கிடைத்த விற்பனை வரி, இந்த ஆண்டு ரூ. 7,755 கோடியாக அதிகரிக்கும் என்றும், கடந்த ஆண்டைவிட கலால் வரி மூலம் ரூ. 2,076 கோடி கூடுதலாகக் கிடைக்கும் என்றும் அரசின் 2011-12ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில்(பட்ஜெட்டில்) தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, முந்தைய கருணாநிதி ஆட்சியைப் போலவே தமிழக மக்களைக் குடிபோதையில் ஆழ்த்தி, சாராய விற்பனை மூலம் கூடுதலாகக் கொள்ளையடிக்கும் இந்த கொழுத்த தொகையைக்கொண்டு, 6ஆம் வகுப்பு முதலாக மாணவர்களுக்கு பேண்ட் சர்ட், மாணவிகளுக்கு சல்வார் கமீஸ், ஏழைகளுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, தமிழ்ப்பெண்களின் தாலிக்குத்தங்கம், மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் என 8,900 கோடி ரூபாய்க்குப் புதிய திட்டங்களையும் சலுகைகளையும் பட்ஜெட்டில் அறிவித்துள்ளதோடு, வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு ஆடு, மாடுகளையும் தரப்போகிறார்கள் இலவசமாக.

தமிழ்ப்பெண்களின் தாலிக்கு தங்கத்தை வழங்கி, அவர்களின் தாலியை அறுக்கும் சாராயக்கடைகள் சரியா?

சட்டப் பேரவையில் நடந்த விவாதத்தின் போது, பா.ம.க., உறுப்பினர் கலையரசன், பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அன்றைக்கு, கருணாநிதி கூறியதை, ("நான் சூடமாக இருக்கிறேன்:​ என்னைச் சுற்றி நெருப்பு ​(அண்டை மாநிலங்களில் மது விற்பனை)​ இருக்கிறது;​ நான் என்ன செய்வது''), வேறு வார்த்தைகளில், ''தமிழகத்தில் இருந்த கள்ள சாராய வியாபாரிகள் பெருமளவில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கள்ள சாராயம் விற்பனை முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களில், மதுவிற்பனை நடக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது. அப்படி செய்தால், தமிழகம் தனித்தீவு போல காட்சியளிக்கும். மேலும், கள்ளச் சாராயமும், கள்ளமதுவிற்பனையும் நடக்க வழிவகுக்கும்''- என்றும் கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் முதல் தமிழக அரசே நடத்தி வருகிறது.

2004ம் ஆண்டு அரசுக்கு ரூ.4,872 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. 2009&2010ம் ஆண்டில் ரூ.12,491 கோடியாக அதிகரித்தது. இதில் லாபம் ரூ.2,500 கோடியாகும்.   

பார் ஏலம், காலி பாட்டில் விற்பனை, அட்டைகள் மூலம் 2009&2010ம் ஆண்டில்ரூ.500 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது. 2008-09ம் ஆண்டு டாஸ்மாக் கடைகள் மூலம் கலால், விற்பனை வரி ரூ.10,601.50 கோடி கிடைத்துள்ளது.

சாராய விற்பனை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்துகொண்டே செல்கிறது. 2009-ல் தீபாவளிக்கு தமிழகத்தில் ரூ. 81 கோடிக்கு நடந்த சாராய விற்பனை, 2010-ல் ரூ. 95 கோடியைத் தொட்டுள்ளது. இந்த வருடம் தீபாவளி அந்த சாதனையை கண்டிப்பாக முறியடித்து 100 கோடியை தாண்டும் என்று உறுதியாகக்கூறலாம்.

''மது  நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு'' என பாட்டிலில் எழுதி மட்டும் வைப்பதால் பயனில்லை.

இதைப்படித்து மக்கள் திருந்துவார்கள் என்றால், சிகரெட் பாக்கெட்டின் மீது மண்டை ஓட்டின் படத்தை போட்டதால் மக்களின் புகைப்பழக்கம் குறைந்ததா? அதிகரித்ததா?, அதுபோல் பாட்டிலில் மது குடிப்பது கேடு என்று எழுதி வைத்தால் குடி குறையும் என்றால், வருடா வருடம் அரசின் கஜானாவிற்கு வரும் கோடிகள் அதிகரிப்பு எப்படி?

''மது  நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு'' என்றால், அதற்குத் தடை விதிப்பதுதான் அரசின் கடமை.

அதை விடுத்து எச்சரிக்கை செய்வது மட்டுமே எங்களது கடமை எனக் கூறுவதற்கு ஓர் அரசு தேவையா?

''திருடுவது சட்டப்படி குற்றம்'' என்று எழுதி வீட்டின் முன் வைத்துவிட்டால் திருடன் படித்துப்பார்த்து விட்டு சென்று விடுவானா? , திருட்டு குறைந்து விடுமா?. அல்லது, வீட்டில் யாருமில்லை என்று திருடிச்செல்வானா? இவர்கள் முட்டாள்களா? அல்லது இவர்கள் மக்களை முட்டாள்களாக்குகிறார்களா?

தமிழகத்தில் இப்போது தினசரி சாராயம் அருந்துவோரின் எண்ணிக்கை 49 லட்சம் என்பதும், அவர்களின் சராசரி வயது 28-லிருந்து 13 ஆகக் குறைந்துள்ளது என்பதும் அதிர்ச்சியளிக்கும் தகவல்.

இன்று ஆரம்ப கல்வி மாணவர்கள் சாராயம் குடிக்கும் ஆபத்தும் வந்துள்ளது. பெண்களையும் சாராயம் குடிக்க தூண்டும் விளம்பரங்களை அரசே வெளியிடுகிறது. பள்ளிச் சிறார்களிடமும் சாராயப் பழக்கம் வேகமாகப் பரவி வருகிறது.

தமிழ்நாட்டில் 46 சதவிதம் மக்கள் போதை நோயாளியாகி உள்ளார்கள்.மேலும், தற்கொலைக்கு முயல்வோரில் 37 சதவீதத்தினர் சராயப்பழக்கம் உள்ளவர்களே!, என்றும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

மக்களை நல்வழியில் வழிநடத்திச் செல்ல வேண்டிய அரசு, மக்களின் கைகளைப் பிடித்து, கள்ளச்சாராயம் வேண்டாம் நல்லச்சாராயம் தருகிறோம் என்று கூறி சாராயக் கடைகளுக்கு அழைத்துச் செல்வதுதான் வேதனையான சாதனை.

சாராயம், சாதனை படைத்து சரித்திரத்தில் இடம் பெற வேண்டிய மனிதனின் பகுத்தறிவை இழக்கச் செய்து தரித்திரத்தில் ஆழ்த்திவிடுவதை, சாராயம் விற்று சரித்திரத்தில் இடம்பெறத் துடிக்கும் ஆட்சியாளர்கள் உணர வேண்டும்..!

இளைஞர்களின் இப்போதைய கொண்டாட்டங்களில் சாராய விருந்து (party) தவிர்க்க முடியாத ஒன்றாகி வருகிறது.

சென்னை கடற்கரை சாலைகளில் கல்லூரிகளுக்குச்செல்லும் இளைஞர் இளைஞிகள், படித்து விட்டு வேலைக்குச்செல்லும், ஆண்கள், பெண்கள், மேல் தட்டு வர்க்கத்தினர் வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சண்டே ஃபீவர் (sunday feawer), வீக் எண்ட் பார்ட்டி(weekend party)  என்ற பெயர்களில் குடித்துவிட்டு அடிக்கும் கும்மாளங்களில் ஆபாசங்கள் கடலுக்கு இணையாக பெருக்கெடுத்து ஓடுவதை வாரந்தோறும் ஊடகங்கள் வாசிக்கின்றன.

புத்தாண்டு, திருமணம், பிறந்தநாள் விழாக்கள், மற்றும் பண்டிகை, திருவிழாக்களின்போது களைகட்டும் பார்ட்டிகளால் சாராய விற்பனையில் புதிய சாதனை படைக்கப்படுவதே இதற்குச் சான்று.

முன்பெல்லாம், திரைப்படங்களில் கதாநாயகன் சோகமாக இருக்கும்போது சாராயம் அருந்துவதாகக் காட்சிகள் வரும். அதற்கே, ஊடகங்களில் கடும் கண்டனங்களைத் தெரிவித்த காலம் உண்டு.

ஆனால், இப்போது, ஒவ்வோரு வீட்டிலும் நுழைந்து விட்ட சின்னத்திரை  சீரியல்களிலேயே சாராயம் அருந்துவதாக வரும் காட்சிகள் மக்களை நாசமாக்கிக்கொண்டிருக்கிறன.

இதைக்கண்டு மக்களும் நாசமாக வேண்டும் என்றுதானே வீட்டுக்கு வீடு இலவச தொலைக்காட்சியும், அதைக்காண குறைந்த செலவில் அரசு கேபிள் இணைப்பும் கொடுத்துள்ளார்கள் நம் ஆட்சியாளர்கள்.

உலகில் மதுவிலக்கு பல நாடுகளில், குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் அமலில் உள்ளது.

தமிழகத்தில் மூதறிஞர் ராஜாஜி பூரண மதுவிலக்கை 1937-ம் ஆண்டில் நடைமுறைக்குக் கொண்டுவந்தார். சாராயம் மூலம் அரசுக்கு வருமானம் இருப்பது உலகம் அறிந்த உண்மை.

அதனால்தான் தமிழகத்தில் பல இலவச திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு மக்களின் ஓட்டு வங்கியை தக்கவைத்துக்கொள்ள கடும் போட்டி நிலவுகிறது.

மதுவிலக்கைக் கொண்டுவருவதால் நிதி இழப்பு ஏற்படுமே? என்று அப்போதைய  சென்னை மாகாண முதல்வர் ராஜாஜியைப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்தனர்.  அதற்கு ராஜாஜி இணங்கவில்லை. விற்பனை வரியை அறிமுகப்படுத்தி நிதிச்சுமையைச் சமாளித்தார்.

சமூகக் கேட்டினைத் தடுத்து நிறுத்துவதற்காக ஒரு மாநிலத்தின் வருவாயைப் பாதித்தாலும் அதைச் சமாளிக்கப் புதிய யுக்திகளை நடைமுறைக்குக் கொண்டுவருவதுதான் சிறந்த நிர்வாகத் திறன். அதற்கு ராஜாஜி அமல்படுத்திய மதுவிலக்குத் திட்டம் ஒர் உதாரணம்.

மதுவிலக்கை அமல்படுத்திய ராஜாஜி ஆரம்பத்தில் தமிழகத்தின் மாநில எல்லை மாவட்டங்களில் அமல்படுத்திவிட்டு, படிப்படியாக மாநிலம் முழுவதும் பூரண மதுவிலக்கைச் செயல்படுத்தினார்.

அவ்வாறு செய்தது ஏன்? என்று அன்றைய நிருபர்கள் கேட்டதற்கு ராஜாஜி ''சுடச்சுட தட்டில் வைக்கப்படும் தோசையை அப்படியே சாப்பிட முடியாது, அதன் ஓரங்களில் சிறிதாகத் துண்டு துண்டாக்கி எடுத்துச் சாப்பிட வேண்டும். பிறகு, நடுவில் ஆறிவிடும். முற்றிலும் சாப்பிட்டுவிடலாம்''. என்று தனக்கே உரிய பாணியில் விளக்கம் அளித்தார்.

பின்னர்,​​ தமிழகத்தில் 1967-ல் காங்கிரஸ் ஆட்சி போய் திமுக ஆட்சிக்கு வந்தபோது அண்ணாதுரை முதல்வராகப் பொறுப்பேற்றார்.​ அவரிடம் அதிகாரிகள் சிலர் மதுவிலக்கை ரத்து செய்தால் ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும் என்று கூறினர்.​ ஆனால்,​​ அண்ணா அதற்கு மறுத்துவிட்டார்.

மேலும்,​​ ''அந்த வருவாயானது புழுத்துப்போன தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம்'' என்று கூறி மறுத்துவிட்டார்.​ ஆனால்,​​ அண்ணாவின் வழியில் ஆட்சி செய்வதாகக் கூறிக்கொள்ளும்,​​  முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் மதுவிலக்குக் கொள்கையைப் பின்பற்றாதது ஏன்?

ஆனால், இன்றைக்கு அரசு சாராயக்கடைகளை திறந்து விட்டிருப்பதாலும்,தீய சேர்க்கையாலும் வளர் இளம் பருவத்தினர் 13, 14 வயதிலேயே சாராயம் உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு ஆளாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

விருந்தாளியாக வீட்டுக்குள் நுழையும் சாராயம், நாளடைவில் மோசமான எஜமானனாகி, குடும்பத்தையே நாசமாக்கி விடுவதை பல வீடுகளில் காணமுடிகிறது.

''பழக்கம் என்பது முதலில் ஒட்டடை பிறகு அது இரும்புக்கம்பி''. ஒட்டடையை சாதாரணமாக நீக்கி விடலாம் ஆனால் இரும்புக்கம்பியை? போதைப்பழக்கமும் அது போல்தான். கிருமிகளைவிட வேகமாக, தமிழகத்தில் போதைக் கலாசாரம் பரவி வருவது கவலையளிக்கும் உண்மை.

'குடிப்பழக்கம் ஒரு நோய்’ என உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

மனிதனை மெல்ல, மெல்லக் கொல்லும் ஆட்கொல்லி விஷம்தான் சாராயம் என்பது  நிரூபணமாகி விட்டது.

"எக்கேடோ கெட்டு ஒழியுங்கள்..!’ என்ற மனோபாவத்தில், வருமானம் ஒன்றை மட்டுமே குறியாகக் கொண்டு, காணும் இடமெல்லாம் சாராயக் கடைகளைத் திறந்துவிட்டு போதைப் பிரியர்களை அரசு குஷிப்படுத்தி வருகிறது. இரவானாலே, இவர்களின் தள்ளாட்டத்தால் பெண்களும், குழந்தைகளும், அப்பாவிகளும் வீட்டை விட்டு வெளியில் வரவே அச்சப்படுகின்றனர்.

எனவே, உடனடியாக தமிழகத்தில் மது விலக்கை உடனடியாக அமல் படுத்த வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு தீவிரமாகச் சிந்திக்கட்டும்!

சாராயக்கடைகளை மூடாவிட்டால் போதையில் சீரழியும் லட்சக்கணக்கான மனிதர்களால் நாதியின்றி வீதிக்கு வரப்போகும் தாய்மார்களும், குழந்தைகளும் என்ன செய்வார்கள்?, எங்கே செல்வார்கள்?.

இதை உணர்ந்தாவது, தமிழகத்தைச் சாராயம் எனும் சைத்தானின் கரத்திலிருந்து உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இத்தீமையை எதிர்த்து அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இல்லையேல் நம்முடைய எதிர்கால சந்ததிகளின் அன்றாட உணவுப் பட்டியலில் சாராயமும் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும்.

ஆட்சி, அதிகாரங்கள் வரும் போகும். ஆனால், ஆட்சியில் இருக்கும்போது என்ன செய்தோம் என்பதை வைத்துத்தான் வரலாறு வரையப்படும் என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் கொள்க.

எனவே, இளைய தலைமுறைகளையும்,ஏழைக்குடும்பங்களையும்,தள்ளாடும் தமிழகத்தையும் காக்க தமிழகத்தில் முழு மதுவிலக்கு என்பதே தற்போதைய தேவை.

இதன்மூலம் எதிர்காலத் தமிழகத்தின் இளைஞர்களைக்கொண்டு திறமையான, வளமான சமுதாயத்தை உருவாக்க முடியும்.

வரப்புயர நீருயரும்

நீருயர நெல் உயரும்

நெல்லுயர குடி உயரும்

குடி உயர கோன் உயரும்

கோன் உயர கோல் உயரும்  என்றார் மூதாட்டி,

இந்த வரிகள் எளிமையாகத் தகுதி பற்றிக் கூறுகிறது. ஒரு நாடு (கோன்)சிறப்படைய வேண்டுமென்றால், மக்கள் வசதியாக வாழ வேண்டும். மக்கள் மகிழ்ச்சியாக இருக்க, அவர்களது பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்க வேண்டும். பொருளாதாரம் அதாவது குடும்பம் வசதியாக இருக்க வேண்டுமானால் விவசாயம் , தொழில் , வியாபாரம் நன்கு அமைய வேண்டும்.

தமிழ் மொழிக்காக,அதன் வளர்ச்சிக்காக கோவையில் செம்மொழி மாநாட்டை நடத்திய தமிழ் மூதறிஞரும், இன்றைக்கு தமிழக மக்களின் அமோக ஆதரவைப்பெற்று ஆட்சியிலிருக்கும் அம்மையாரும் இந்த அவ்வை மூதாட்டியின் தமிழை எவ்வாறு புரிந்து கொண்டார்களோ?

இன்றைக்கு கோன் (நாடு) உயர்வதற்காக மக்களின் ''குடி'' யை உயர்த்த ஆட்சியாளர்கள் பாடுபடுகிறார்கள்.

''குடி''யை ஒழித்து - ''குடி''மக்களை காப்போம்.

அ,அப்துல் வஹாப், சேலம். செல்: 99423 49566.