islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

புதிய அரசின் முன்னுள்ள மெட்ரிக் பள்ளிப் பிரச்னை


எவ்விதமான குழப்பங்களுக்கும் இடமில்லாமல் சரியான வழியில் செயல்பட வேண்டியது ஒரு மாநிலத்தின் கல்வித்துறை. ஆனால், அப்படிப்பட்ட செவ்விய நிலை தமிழகக் கல்வித்துறையில் தற்போது இல்லை.

2006, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்துவோம், தனியார் பள்ளிக் கட்டணங்களை ஒழுங்கு செய்வோம் என்று தி.மு.க. பொது மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து வாக்குக் கேட்டது. வெற்றி பெற்று ஆட்சியையும் அமைத்தது. ஆனால், போர்க்கால அடிப்படையில் ஆய்வுசெய்து, முடிவெடுத்து, பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டிய கட்டணம் பற்றிய விதிமுறைகள் கிணற்றில் போட்ட கல்லாக மூழ்கிப் போய்விட்டது.

சமச்சீர் கல்விக்கேற்ற பாடநூல்கள் தயாரிப்பதையே முழுநோக்கமாகக் கொண்டு கல்வித்துறை இயக்குநர்களும் இணைஇயக்குநர்களும் முடுக்கிவிடப்பட்டார்களே தவிர, திரிசங்கு சொர்க்கமாகக் தொங்கிக் கொண்டிருக்கும் தனியார், மெட்ரிக் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு இன்றுவரை முடிவு செய்யவில்லை.

கட்டண உயர்வு பற்றி விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட கோவிந்தராஜன் குழு தந்த அறிக்கையை எதிர்த்து நிர்வாகங்கள் நீதிமன்றத்துக்கு நடந்தார்கள். ஒரு சூழலில் கோவிந்தராஜன் பதவியை விட்டு விலகநேர்ந்தது. அவருக்குப்பின் ரவிராஜபாண்டியன் தலைமையில் வேறொரு குழு அமைக்கப்பட்டது. அவர் அறிக்கை எதுவும் தந்தாரா, அது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதா என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை.

இந்தப் பிரச்னையைப் பொறுத்தவரைஅரசு பொறுப்பேற்றதிலிருந்து எதையும் முழுமையாகச் செய்து முடிக்கவில்லை. பாதிக் கிணறுதான் தாண்டியுள்ளது. ஆனால் வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டி வழங்குவதில், பலமுறை டெண்டர் விட்டு ஆயிரக்கணக்கில் வாங்கி, அவசரஅவசரமாக விநியோகம் செய்துள்ளது. கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேக வேகமாகக் கணக்கெடுத்து, பின்னர் வாங்கிக் கொள்வதற்காக அடையாள அட்டைகளையும் வழங்கியுள்ளது. இத்திட்டங்கள் வாக்கு வங்கியைப் பெருக்கக் கூடியவை என்பதால் மிகவும் முன்னுரிமை கொடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆனால், வளரும் தலைமுறைக்காக, கல்விக் கட்டணத்தின் அசுரத்தனமான உயர்வைக் கட்டுப்படுத்த எந்த முடிவையும் அரசு எடுக்காதது உள்ளத்தை நெருடத்தான் செய்கிறது.

இந்த நிலையில் இன்னும் ஒருமாத இடைவெளியில் கோடைவிடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இப்போதே மெட்ரிக் பள்ளிகளும் அரசு உதவிபெறாத பள்ளிகளும் மாணவர் சேர்க்கையைத் தொடங்கிவிட்டன. கட்டணம் குறித்து அரசின் மெத்தனப் போக்கை நன்கு உணர்ந்து கொண்ட பள்ளி நிர்வாகங்கள், வழக்கம்போல் கட்டணம் என்னும் பெயரில் வாரிச் சுருட்டத் தொடங்கிவிட்டன.

அரசு நியமித்த குழுக்கள், அறிவிப்புகள், அதன்மீதான வழக்குகள், அதன் தீர்ப்புகள் பற்றி அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை. தனியார் பள்ளி நிறுவனங்களுக்கு இது மிகவும் சாதகமாக அமைந்துவிட்டது. கோவிந்தராஜன் குழு அறிவிப்பின் மீதான நீதிபதிகள் எச்.எல்.கோகலே, கே.கே. சசிதரன் ஆகியோர் வழங்கிய தீர்ப்புக்கு அரசு எந்த வகையில் முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுத்தது என்றே தெரியவில்லை.

ஒரு காலகட்டத்தில், கூடுதல் வரிகளை விதித்துவிடுவார்கள் என்று அஞ்சி தவறான வரவு செலவுக் கணக்கைக் குழுவிடம் தந்துவிட்டதாக ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனியார் பள்ளி நிர்வாகிகளில் ஒருவர் தெரிவித்தார். இப்படி அறியாமையில் இருந்துவிட்டு, தற்போது அரசையும் குழுவையும் குறைகூறி நீதிமன்றம் செல்வதை எந்தக் கணக்கில் எடுத்துக் கொள்வது?

2010-11-ம் கல்வியாண்டில், அரசு அமைத்துள்ள குழுவின் கட்டணத் தொகையைவிட அதிகமாக வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த மே மாதத்தில் கல்வி அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தார். கட்டண விகிதங்கள் இணைய தளத்தில் வெளியிடப்படும் என்றும் கூறினார். ஆனால், ஆயிரக்கணக்கான பள்ளிகள் அதிகமாகத்தான் கட்டணம் வசூலித்தார்கள். எத்தனை பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ன தண்டனை வழங்கப்பட்டது?

அதிகக் கட்டணம் வசூலித்த பள்ளிகளின் முன்னால் பல ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் திரண்டு நின்று போராடினார்கள். அரசு அறிவிப்பு வந்ததும் கூடுதலாகப் பெற்ற தொகை திருப்பித் தரப்படும் என்று பள்ளி நிர்வாகங்கள் அறிவித்தன. எத்தனை பெற்றோர்கள் செலுத்திய பணத்தைத் திரும்பப் பெற்றார்கள்?

அதற்கு மாறாக, யார்யாரெல்லாம் முன்னின்று போராடினார்களோ அவர்களின் பிள்ளைகளைப் பள்ளியிலிருந்து விலக்கி, மாற்றுச் சான்றிதழை நிர்வாகங்கள் தபாலில் அனுப்பிக் கொண்டிருக்கின்றன. இது எப்படிப்பட்ட பச்சைத் துரோகம் பாருங்கள். ஒரு மாநிலத்தில் இருந்துகொண்டு, அதன் அனுமதியைப் பெற்று, அம்மாநில மக்களிடம் கட்டணம் பெற்று செயலாற்றிவரும் பள்ளிகள், இவ்வாறு அரசையும், தீர்ப்பையும், சட்டங்களையும் காலில் போட்டு மிதிப்பது எந்த வகையில் சரியானது என்று எண்ணிப்பாருங்கள்.

மெட்ரிக் பள்ளிகள் சமச்சீர் பாடப் புத்தகங்களுக்கு மேல் கூடுதலாகத் தனியார் புத்தகங்களையும் வைத்துக் கொள்ளலாம் என்னும் தீர்ப்பைத் தவறாகப் பயன்படுத்தி, சமச்சீர் கல்வி என்னும் கட்டமைப்பைச் சீர்குலைக்கவும் திட்டமிட்டுள்ளன. மேற்கோள் நூல்கள் என்பது கல்லூரி அளவில் தேவைப்படுவதாகும். பள்ளிகளுக்கு அது தேவையில்லை.

இது தமிழகத்தில் உள்ள எல்லாப் பள்ளிகளையும்விட, தாங்கள் நிறைய எண்ணிக்கையில் புத்தகங்களை வைத்துப்பாடம் நடத்தி, அறிவைப் பெருக்குகிறோம் எனக் காட்டிக்கொள்ளும் பம்மாத்து வேலையே தவிர, வேறில்லை.

கல்விக் கட்டண உயர்வுக்கு இப்போது முடிவெடுக்காவிட்டால், இனிமேல் காலம் கனிந்து வராது. பெற்றோர்கள் தம் பிள்ளைகளின் கல்விக்காகப் பெருந்தொகையைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டியதுதான். அதைத்தவிர வேறு வழியில்லை. ஜனநாயகத்தில் இப்படியும் நடக்கலாம் போலிருக்கிறது.
dinamani

No comments:

Post a Comment