islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

எம்.பி.பி.எஸ்., பி.இ. சேர விண்ணப்பம் எப்போது?


தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்., பி.இ. படிப்புகளில் சேர மே 15-ம் தேதிக்குப் பிறகு விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வரும் 13-ம் தேதி வெளியாகின்றன. இதைத் தொடர்ந்து புதிய அரசின் அனுமதியுடன் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட கல்வித் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானவுடன் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். மற்றும் பொறியியல் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கும். பி.இ. விண்ணப்பம் மே 16-ம் தேதி முதல் வழங்கப்படும்.

2,344 எம்.பி.பி.எஸ். இடங்கள்: சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, கோவை, சேலம், தஞ்சாவூர் உள்பட 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. கடந்த கல்வி ஆண்டில் விழுப்புரம், திருவாரூரில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. மொத்தம் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில், மாநில ஒதுக்கீட்டுக்கு 1,670 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

தமிழகத்தில் உள்ள எட்டு சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கு 674 இடங்கள் கிடைக்கும். அனைத்து எம்.பி.பி.எஸ். இடங்களும் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் உள்ள மருத்துவக் கல்வி தேர்வுக் குழு நடத்தும் கவுன்சலிங் மூலம் நிரப்பப்படும். சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கத்தில் கவுன்சலிங் நடைபெறும்.

20,000 விண்ணப்பங்கள்: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்த ஆண்டு மொத்தம் 18,135 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்தனர். இவர்களில் 11,693 பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு மே 17-ம் தேதி விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. கடந்த ஆண்டு முதல் கட்டமாக 20,000 விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டன. பின்னர் புதிய மருத்துவக் கல்லூரிகள் காரணமாக எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரித்ததால், மேலும் 5,000 விண்ணப்பங்கள் கூடுதலாக அச்சடிக்கப்பட்டன.

இந்த ஆண்டும் முதலில் 20,000 எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்பங்களை அச்சடிக்க மருத்துவக் கல்வி தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூ.500.

ரேங்க் பட்டியல், கவுன்சலிங் எப்போது? கடந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது; கடந்த ஆண்டு செம்மொழி மாநாடு காரணமாக சிறிது தாமதமாக ஜூன் 28-ம் தேதியன்று எம்.பி.பி.எஸ்.-பி.இ. ஆகிய இரண்டுக்கும் ஒரே நாளில் கவுன்சலிங் தொடங்கியது.

இந்த ஆண்டும் எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க ஜூன் 2-வது வாரம் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு, ஜூன் மாத இறுதியில் கவுன்சலிங் ஆரம்பிக்கும். எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் தொடங்கிய பிறகு, ஐந்து நாள்கள் கழித்து பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்க்க கவுன்சலிங் ஆரம்பிக்கும்.

பி.டி.எஸ். படிப்பில் சேர... சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூயில் மட்டும் மாநில ஒதுக்கீட்டுக்கு 85 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். ஆகிய இரண்டு படிப்புக்கும் சேர்த்து ஒரே விண்ணப்பத்தை பூர்த்தி செய்தால் போதுமானது. அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பி.டி.எஸ். இடங்கள் மற்றும் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 800-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் கவுன்சலிங் மூலம் நிரப்பப்படும்.

ஜூலை முதல் வாரத்தில் பொதுக் கலந்தாய்வு: பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 14-ம் தேதி வெளியிடப்படுமானால், மே 16-ம் தேதியிலிருந்து பி.இ. கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் கொடுக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு விடும். மே 31-ம் தேதி வரை விண்ணப்பங்கள் கொடுக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறினார்.

பின்னர் மாணவர்களின் பிளஸ்-2 மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டு, ஜூன் 15-ல் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும்.

ஜூன் 25-ல், விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் என சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் வருபவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும். ஜூலை முதல் வாரம் முதல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என்றார் மன்னர் ஜவஹர்.
DINAMANI

No comments:

Post a Comment