islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

ஐ.ஐ.டி. நிலம் டாடாவுக்கு தாரை வார்ப்பு?



சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்துக்குச் சொந்தமான நிலம் அந்த நிறுவனத்தின் ஒப்புதல் இல்லாமலேயே டாடா குழுமத்துக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு தமிழக அரசு நீண்ட காலக் குத்தகைக்கு விட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.


இந்த இடத்தில் தற்போது பல்வேறு நவீன அடுக்கு மாடிக் குடியிருப்புகளும், வணிக வளாகமும் கட்டப்பட இருக்கின்றன.

கடந்த 1993-ம் ஆண்டு சென்னை கிண்டியிலுள்ள ஐ.ஐ.டி. பெயரில் தரமணியில் உள்ள 40 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை தமிழக அரசு தன்னிச்சையாகக் கையகப்படுத்தியது. பிறகு ஐ.ஐ.டி.யின் கோரிக்கையை ஏற்று ஆராய்ச்சிப் பூங்கா அமைப்பதற்காக சுமார் 11 ஏக்கர் நிலத்தை அந்த நிறுவனத்துக்கே திருப்பியளித்திருப்பதாகத் தெரிகிறது.

கையகப்படுத்தபட்ட 40 ஏக்கர் நிலமும் உண்மையில் தங்களுக்கே சொந்தமானது என ஐ.ஐ.டி. நிர்வாகத்துக்கே தெரியாது என்கிற அதிர்ச்சிகரமான தகவலும் அம்பலமாகியிருக்கிறது.

கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் ஒரு பகுதியில் எம்ஜிஆர் திரைப்பட நகரம் அமைக்கப்பட்டது. மீதி நிலம் காலியிடமாகக் கிடந்தது.

இந்த நிலையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பூங்கா அமைப்பதற்கான முயற்சியில் ஐ.ஐ.டி. ஈடுபட்டது. இதற்காக சுமார் 10 ஏக்கர் இடம் தேவை என்று கடந்த 2001-ம் ஆண்டில் தமிழக அரசுக்கு ஐ.ஐ.டி. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஐ.ஐ.டி. கேட்ட நிலம் அந்த 40 ஏக்கர் நிலத்துக்குள்தான் வருகிறது. இந்த விவரமும் ஐ.ஐ.டி.க்குத் தெரியாது.

கடந்த 2002-ம் ஆண்டு ஏப்ரலில் அந்த 40 ஏக்கரில் அடங்கிய 24.78 ஏக்கரில் பல்வேறு ஆய்வுப் பணிகள், தகவல் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு பயன்படும் வகையில் எம்.ஜி.ஆர். அறிவுப் பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. இது எம்ஜிஆர் திரைப்பட நகரை ஒட்டி அமைந்திருக்கிறது. இதில்தான் சுமார் 10 ஏக்கர் நிலத்தை ஐ.ஐ.டி. கேட்டது.

இந்த நிலையில், எம்.ஜி.ஆர். அறிவுப் பூங்கா தொடர்பாக அரசு அறிவிப்பாணை வெளியிடப்படுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு, நில நிர்வாக ஆணையர் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். நில ஆவணங்களின் படி கனகம் கிராமத்தில் உள்ள அந்த 40 ஏக்கர் நிலமும் ஐ.ஐ.டிக்கு சொந்தமானது என்பதை தனது கடிதத்தில் அவர் குறிபிட்டிருக்கிறார்.

ஐ.ஐ.டிக்கு தெரியாமலேயே இந்த நிலம் எப்படி குத்தகைக்கு விடப்பட்டது என்றும் அவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார். அந்த நிலத்தில் 10 ஏக்கரை ஐ.ஐ.டியின் பயன்பாட்டுக்கு ஒதுக்கவும் அவர் உத்தரவிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் உயர் கல்வி நிறுவனங்கள் அமைப்பதற்காக காமராஜர் ஆட்சி காலத்தில் தரமணியில் இந்த நிலம் ஒதுக்கப்பட்டது. முன்பு சென்னையின் ஒதுக்குப்புறமாக இருந்த இந்த இடம் இப்போது கிழக்குக் கடற்கரை சாலை பகுதி அடைந்துள்ள பிரமாண்ட வளர்ச்சியால் சென்னையின் முக்கிய இடங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

வருவாய்த் துறையின் ஆவணப் பதிவுகளின்படி கனகம் கிராமத்துக்கு உள்பட்ட இந்த நிலம் இப்போது வரை சென்னை ஐஐடி-க்கு சொந்தமானதாகவே இருக்கிறது. ஆனால் அரசு அதனை தன்னிச்சையாக கையகப்படுத்தியுள்ளது. வேடிக்கை என்னவென்றால் அது தங்களுக்குச் சொந்தமான இடம் என்று ஐஐடி நிர்வாகத்திற்கே தெரியாமல் இருந்ததுதான்.

இந்த நில விவகாரம் தொடர்பாக ஐஐடி நிர்வாகம் 2001 ஆகஸ்டு முதல் 2007 அக்டோபர் வரை அரசுக்கு பலவேறு கடிதங்களை எழுதியுள்ளது.

கிடைத்திருக்கும் ஆவணங்களின்படி, சுமார் 11 ஏக்கர் நிலத்தை பெறுவதற்கு ஐ.ஐ.டி. நிர்வாகம் 6 ஆண்டுகள்வரை போராடியிருப்பதாகவும் தெரிகிறது. இறுதியாக கடந்த 2007-ம் ஆண்டில்தான் ஐ.ஐ.டி.க்கு அந்த நிலம் கிடைத்திருக்கிறது. அந்த இடத்தில்தான் 12 மாடிகளைக் கொண்ட 3 கட்டடங்களுடன் கூடிய போஷ் ஆராய்ச்சிப் பூங்காவை ஐ.ஐ.டி நிறுவியிருக்கிறது.

அந்த 40 ஏக்கரில் சுமார் 25.27 ஏக்கர் நிலம் டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா ரியால்டி அண்ட் இன்ட்ஃப்ராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனத்தின் ராமானுஜம் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டத்துக்காக 99 ஆண்டு குத்தகைக்கு விட்டப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த இடத்தில் பிரமாண்டமான 150 குடியிருப்புகள், 2.5 லட்சம் சதுர அடி பரப்புள்ள வணிக வளாகம், 100 சேவைக் குடியிருப்புகள், 1500 பேர் அமரக்கூடிய சர்வதேச மையம் ஆகியவை அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது.

சென்னை ஐ.ஐ.டி.க்கு தனக்கு சொந்தமான நிலம் எது என்பது தெரியாமல் ஒருபுறம் இருக்கட்டும். சென்னை ஐ.ஐ.டிக்கு சொந்தமான இடத்தைத் தமிழக அரசு, ஐ.ஐ.டி.யின் ஒப்புதல் பெறாமலே, 25.27 ஏக்கர் நிலத்தை டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா ரியால்டி அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்துக்கு ராமனுஜம் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்கு 99 ஆண்டு குத்தகைக்கு எப்படி வழங்கியது?

24.27 ஏக்கர் நிலம் என்பது 460 கிரவுண்டு. தரமணியில் இன்று ஒரு கிரவுண்டு நிலத்தின் சந்தை விலை குறைந்தது 3 கோடி ரூபாய். அப்படிப் பார்த்தால் இடத்தின் மதிப்பு மட்டுமே ஏறத்தாழ 1380 கோடி ரூபாய்!

கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கும் கதையைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஐ.ஐ.டி போன்ற கல்வி நிறுவனத்துக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தனியார் நிறுவனத்துக்கு தாரை வார்த்திடும் விசித்திரம் சென்னையில் தமிழக அரசால் அரங்கேற்றப்பட்டிருக்கும் அதிர்ச்சி தரும் செயலை இப்போதுதான் கேள்விப்படுகிறோம்.

நாங்கள் ஐ.ஐ.டி மாணவர்கள் என்று பெருமை தட்டிக்கொள்பவர்கள் பல பொறுப்பான பதவிகளில் இருக்கிறார்களே, தங்களது கல்வி நிறுவனத்துக்கு சொந்தமான இடம் தனியாருக்கு குடியிருப்புகளும் வணிக வளாகமும் கட்டி கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்காக தாரை வார்க்கப்பட்டிருக்கிறதே, இதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவார்களா?

இந்தப் பிரச்னை இப்போதாவது வெளிவந்திருக்கிறதே, ஐ.ஐ.டி. நிர்வாகம் தங்களுக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக தமிழக அரசு தனியாருக்குக் கொடுத்திருப்பதை எதிர்த்து நீதிமன்றத்தின் மூலம் தடையுத்தரவு வாங்குமா?

இன்றைய சந்தை விலையில் அந்த இடம் விற்கப்படுமேயானால், இரண்டு மூன்று ஐ.ஐ.டி.களை உருவாக்கலாமே, அதைப்பற்றி யாராவது கவலைப்படப்போகிறார்களா?

இந்த தாரை வார்ப்பு முறைகேட்டில் சம்பந்தப்பட்டிருப்பது அதிகாரிகள் மட்டும்தானா, இல்லை அரசியல்வாதிகளும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களும் கூடவா?

No comments:

Post a Comment