தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து இதுவரையில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி அல்லது மக்களுக்குக் கிடைத்த வெற்றி என வழக்கமான முறையில் கூறிக் கொள்ளலாம்.
ஆனால், ஜனநாயகத்துக்கும், மக்களின் இறையாண்மைக்கும் ஆபத்து ஏற்படவிருந்த ஒரு மாறுபட்ட சூழலில் அதைத் தடுத்து நிறுத்தி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும், வெற்றிகரமாகவும் நடத்தி முடித்துள்ள தேர்தல் ஆணையம்தான் உண்மையான வெற்றியின் நாயகன் என்றே கூற வேண்டும்.
சட்டப்பேரவைத் தேர்தல் காலம் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு குடிமகனும் எண்ணியதும், பேசியதும் ""இந்தத் தேர்தலில் பணம் அமோகமாக விளையாடும், ஊரைக் கொள்ளையடித்து வைத்திருப்பவர்கள் வாக்குகளைப் பணம் கொடுத்து கொள்முதல் செய்து விடுவார்கள், மக்களும் வாங்கிய பணத்துக்கும் வஞ்சகம் செய்யாமல் மனசாட்சிக்குப் பயந்து வாக்குகளை வாரி வழங்கி விடுவார்கள், ஜனநாயகம், தேர்தல் இவை எல்லாம் இனிவரும் காலங்களில் பணத்துக்கு முன்னால் சரணாகதிதான்'' என அங்கலாய்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் தனது வலிமைமிக்க கரங்களால் எல்லாவற்றையும் முடிந்த அளவு தடுத்து நிறுத்தி ஜனநாயக தீபம் அணையாமல் பார்த்துக் கொண்டது.
சட்டப்பேரவை பொதுத்தேர்தல் ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல் வாரம் நடைபெறலாம் என எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், தேர்தல் ஆணையம் அதிரடியாகத் தேர்தல் தேதி ஏப்ரல் 13 என அறிவித்தது. அது முதல் அடி.
அடுத்து, வாக்கு எண்ணிக்கை மே 13 என அறிவித்தது. இதெல்லாம் தகுமா, ஒரு மாதம் தூங்கா இரவுகளைக் கழிக்க வேண்டுமா? என அரசியல் கட்சிகள் குரல் எழுப்பினாலும் தனது முடிவில் உறுதியாக இருந்தது தேர்தல் ஆணையம். அது இரண்டாவது அடி.
தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்த உடன் இதுவரையில் இல்லாத அளவில் நாளொரு விதிமுறைகள் என்றுகூட இல்லாமல் மணிக்கொரு விதிமுறை எனக் கூறும் அளவுக்கு ஆணையம் கடுமை காட்டி சாட்டையைச் சொடுக்கியது. இது மூன்றாவது அடி.
அடுத்து இந்தத் தேர்தலில் நேர்மையான ஜனநாயகத்தை மதிப்பவர்களை பீதிக்கு உள்ளாக்கியது வாக்காளர்களுக்குப் பெருமளவில் பணம் விநியோகம் செய்யப்படலாம் என்பதுதான். அதற்கு தேர்தல் ஆணையம் விதித்த கட்டுப்பாடுதான் இன்று ஆணையம் காட்டிய கடுமைகளையும் மறந்து அதன் மீது ஒருவித மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.
உரிய ஆவணங்கள் இல்லாமல் பெருமளவு பணத்தை எவரும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச்செல்லக் கூடாது என்று கூறியதோடு ஆங்காங்கே நடத்திய சோதனைகள் பணத்தின் மதிப்பையே இழக்கச் செய்தன. ஆமாம், பஸ்ஸýக்கு மேலே ரூ. 5 கோடி கிடந்தது. இன்று வரையில் கேட்பாரில்லை. இதேபோல், சோதனையில் கைப்பற்றப்பட்ட பல கோடிகளுக்கு இன்றுவரை யாரும் உரிமை கோரவில்லை.
நியாயமான தேர்தலை விரும்பிய அரசியல் கட்சியினர் எவரும் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளை எதிர்க்கவில்லை. மாறாக, தேர்தலில் "வாக்கு கொள்முதல்' செய்யத் திட்டமிட்டிருந்த அரசியல் கட்சியினர் மட்டுமே வானத்துக்கும், பூமிக்கும் குதியோ குதி என குதித்தனர். அதைத் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்ததே தவிர, செவிசாய்க்கவில்லை. இது நான்காவது அடி.
கடந்த காலங்களில் "தேர்தல் ஆணையம்' ஒன்று இருப்பது என்பது தேர்தலின்போதுதான் தெரியவரும். அதுவும் அரசுத் துறையின் ஓர் அங்கம் என பலரும் எண்ணிக் கொண்டிருந்ததை மாற்றி அது "சுய அதிகாரம் படைத்த இரும்புக் கரம் கொண்ட வலிமையான அமைப்பு' என்பதைப் பறைசாற்றியவர் சேஷன்தான்.
அவரது அடியொற்றி, அவருக்குப் பின்வந்தவர்கள் ஆணையத்தின் பெயரைக் காப்பாற்றிச் சென்றனர்.
என்ன இருந்தாலும் தேர்தல் ஆணையத்துக்கு எஜமான் மத்திய அரசுதானே, அவர்களது "கூட்டு' இருந்தால் ஆணையத்தின் இரும்புக் கரம் கரும்புக் கரமாகும் என சில கட்சிகள் எண்ணிக் கொண்டிருந்தன. தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் திருமங்கலம் உள்ளிட்ட இடைத்தேர்தல்களில் "வாக்கு கொள்முதல்' செய்த அக் கட்சிகள் அதே நினைப்பில் இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலிலும் அந்த "பார்முலா'வைக் கையாளலாம் என எண்ணிக் கொண்டிருந்தன. ஆனால், "திருமங்கலம் பார்முலா' முழுமையாக எடுபடவில்லை. இது ஐந்தாவது அடி.
அசிங்கங்களை அரங்கேற்றம் செய்ய நினைத்திருந்த அரசியல் கட்சிகளுக்கு இத்தனை அடிகள் என்றால், வாக்காளர்களுக்கு ஆணையம் செய்த சேவைகளும் உண்டு.
வாக்களிக்க வாக்குச்சாவடி சீட்டுக்கு வாக்காளர்கள் அரசியல் கட்சிகளை நம்ப வேண்டாம் என வீடு தேடிச் சென்று ஆணையமே வழங்கியது.
எல்லோரும் வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றத் தூண்டும் வகையில் கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வுக் கூட்டங்களையும் நடத்தியது. அச்சமின்றி வாக்களிக்கப் பாதுகாப்பும் கொடுத்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக தேர்தல் ஆணையம் என்பது அரசியல் கட்சிகள் பக்கம் அல்ல; அது மக்கள் பக்கம் என்பதை நிரூபிக்கும் வகையில் அதன் நேர்மையான, வெளிப்படையான செயல்பாடு மக்களைக் கவர்ந்தது. ஆதலால் மக்கள் அதன் தோழமையை ரசித்தனர், ஒத்துழைத்தனர், நல்லதொரு ஜனநாயக மாற்றம் சாத்தியமாயிற்று.
dinamani
No comments:
Post a Comment