islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

இப்படியே போனால்...


சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்ந்துவிட்டபோதிலும், அதை நுகர்வோர் தலையில் சுமத்துவதற்கு அனுமதிக்காமல், மத்திய அரசு காலம் கடத்தியதற்குக் காரணம் - ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றதுதான்!

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி கையொப்பமிட்ட அரசாணை, பெட்ரோல் மீதான மாநில வரி குறைப்பு. இதனால் தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 50 காசுகள் வரை மிச்சமாகும் என்று அறிவிக்கப்பட்டது. இது தேர்தலை மனதில் வைத்து அறிவிக்கப்பட்ட சலுகை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இப்போது தேர்தல் முடிந்துவிட்டது. தமிழ்நாட்டைத் தவிர மற்ற இடங்களில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிப் புன்முறுவல் இருக்கவே செய்தது என்றாலும், இனி என்ன செய்தாலும் வாக்காளர் தனது கோபத்தை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அடக்கி வைத்திருக்க வேண்டும் என்பதால், பெட்ரோல் விலையை ஏற்றி விட்டார்கள்.

டீசல் விலையும் மேலும் அதிகரிக்கும். நிச்சயம் இதற்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும். அப்போது லாரி வாடகை உயரும். உடனே காய்கறி விலைகளும், பொருள்களின் விலைகளும் உயரும். பாதிக்கப்படுவதென்னவோ, நடுத்தர வருவாய்ப் பிரிவினராகிய பொதுஜனங்கள்தான்.

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானிக்கலாம் என்று மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது. அதன் பின்னர் 8 முறை விலை உயர்த்தப்பட்டுவிட்டது. சர்வதேசச் சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலர்களுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால், இந்த விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது என்று காரணம் கூறுகிறார்கள்.

வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட நிலையில் பெட்ரோலிய நிறுவனங்களின் லாபம் உள்ளிட்ட அடிப்படை விலை ஒரு லிட்டருக்கு ரூ. 36.52தான். அப்படியிருக்க சில்லறை விற்பனை விலை சென்னையில் ரூ. 67.32 ஆக இருப்பதன் காரணம் என்ன? மத்திய, மாநில வரிகள், செஸ் உள்ளிட்டவை 43% விதிக்கப்படுவதால்தான் இந்த நிலைமை என்பது பொதுமக்களிடமிருந்து மறைக்கப்படுகிறது.

ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் விற்பனையிலும் ரூ. 2 சாலைப் பராமரிப்பு மற்றும் நெடுஞ்சாலைகள் அமைப்பதற்காக நம்மிடமிருந்து 1998 முதல் பெறப்படுகிறது. 2008 புள்ளிவிவரப்படி 2% செஸ் மூலம் மத்திய அரசுக்குக் கிடைத்த தொகை ரூ. 84,251. 77 கோடி. பிறகும் ஏன் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று கேள்வி கேட்க இந்தியாவில் யாருமில்லை. இந்தப் பெருந்தொகை எப்படிச் செலவிடப்பட்டது அல்லது எங்கே போயிற்று என்று அரசும் தெளிவுபடுத்தத் தயாராக இல்லை.

முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின்போதுதான் முதலில் விலை நிர்ணய உரிமை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சில தனியார் நிறுவனங்கள் பெட்ரோல் நிலையங்களை நிறுவின. ஏற்கெனவே கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் ஈடுபட்டிருந்த ரிலையன்ஸ், எஸ்ஸôர், ஷெல் போன்ற நிறுவனங்களின் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் புதிதாகக் களமிறங்கின.

கச்சா எண்ணெய் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்தபோது அரசே மீண்டும் விலை நிர்ணய உரிமையை எடுத்துக் கொண்டது. போதாக்குறைக்கு, பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், இந்தோ பர்மா பெட்ரோலியம் போன்ற அரசு நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டதால், தனியார் பெட்ரோலிய நிறுவனங்களால் அவற்றுடன் போட்டிபோட முடியவில்லை. தனியார் பெட்ரோலிய நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கத் தயாராக இல்லாமல் தங்களது பெட்ரோல் நிலையங்களை மூடிவிட்டன.

திடீரென்று கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு மீண்டும் பெட்ரோலிய நிறுவனங்களே விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? கச்சா எண்ணெய் விலை குறைந்தவுடன், மீண்டும் லாபம் சம்பாதிக்க முடியும் என்று தெரிந்தவுடன், தனியார் நிறுவனங்கள் மத்திய அரசிடம் தங்களது செல்வாக்கைப் பிரயோகிக்கக் தொடங்கின என்பதுதான் அதன் பின்னணி.

படிப்படியாகத் தனியார் நிறுவனங்களின் சில்லறை விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டு மீண்டும் அதிக லாபத்தில் இயங்கத் தொடங்கிவிட்டன. இந்தத் தனியார் நிறுவனங்களின் எண்ணெய் சுத்திகரிப்பு வசதிகள் அதி நவீனமானவை என்பதால், அவர்களின் உற்பத்திச் செலவு பொதுத்துறை நிறுவனங்களைவிடக் குறைவாகவே இருக்கும். மேலும், நிர்வாகச் செலவும் குறைவு. அதனால் தனியார் நிறுவனங்களின் காட்டில் மழை.

இந்தியாவில் ஓ.என்.ஜி.சி. மூலம் நாம் தோண்டி எடுக்கும் கச்சா எண்ணெயைத் தனியார் நிறுவனங்களுக்கு, சர்வதேச விலையைவிட 30% குறைத்து வழங்குகிறோம். அந்தக் கச்சா எண்ணெயை அரசு நிறுவனங்களுக்கு மட்டும் வழங்குவது என்று முடிவெடுக்கக்கூட அரசுக்கு மனமுமில்லை, துணிவுமில்லை.

பொதுத்துறை நிறுவனங்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக விலை நிர்ணய அனுமதி அளிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்தபோதே, இந்த முடிவு தனியார் நிறுவனங்கள் மக்களைக் கசக்கிப் பிழிந்து கொள்ளை லாபம் அடைவதற்கான மறைமுக வழி என்று எழுந்த விமர்சனங்கள் இப்போது உண்மையாகிவிட்டன. இனிமேல், ஏர் இந்தியாவில் நடந்ததுபோல, பொதுத்துறை நிறுவனங்களில் வேலை நிறுத்தம் தூண்டிவிடப்பட்டு, அந்த நிறுவனங்களை நஷ்டத்தில் இயங்கவைத்து முடிவில் பெட்ரோலியத்துறை முழுமையாகத் தனியார்மயமாக்கப்படுவதற்கான முயற்சிகள் நடக்கும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.

தனியார் பெட்ரோலிய நிறுவனங்கள் மற்றும் தனியார் கார், மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர்களின் நலனையும், லாபத்தையும் மட்டுமே கருதிச் செயல்படாமல், பொதுமக்கள் நலத்தையும், நாட்டின் வருங்காலத்தையும் கருத்தில்கொண்டு அரசும் ஆட்சியாளர்களும் செயல்பட்டாலே போதும், பெட்ரோல் டீசல் விலை சாமானியனைப் பாதிக்காது. அதுதான் இந்த இந்திய தேசத்தில் நடப்பதில்லை, என் செய்ய?
dinamani

No comments:

Post a Comment