islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

கால்நடை மருத்துவம் படிக்க 3,000 "பழைய' மாணவர் விருப்பம்!


தமிழகத்தில் சுமார் 3 ஆயிரம் "பழைய மாணவர்கள்' கால்நடை மருத்துவ பட்டப்படிப்பில் (பி.வி.எஸ்சி.) சேர விண்ணப்பங்களை வாங்கியுள்ளனர்.


இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான "கட்-ஆஃப்' மதிப்பெண் அதிகரித்துள்ளதால், கால்நடை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (பி.வி.எஸ்சி. மற்றும் ஏ.எச்.), இளநிலை மீன்வள பட்டப்படிப்பு (பி.எஃப்.எஸ்சி.), பி.டெக். உணவு பதனிடும் தொழில்நுட்பம் ("பி.டெக் புஃட் பிராஸஸிங் டெக்னாலஜி') மற்றும் பி.டெக். கோழியின உற்பத்தித் திட்டம் (பி.டெக். பெüல்ட்ரி புரொடக்ஷன் டெக்னாலஜி) ஆகிய படிப்புகளை சென்னை கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்தப் படிப்புகளில் நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) மாணவர்களைச் சேர்க்க கடந்த மே 2-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த முறை ஆயிரக்கணக்கான பழைய மாணவர்கள் விண்ணப்பத்தை வாங்கியுள்ளனர்.
எத்தனை இடங்கள்? கால்நடை மருத்துவப் படிப்புக்கு (பி.வி.எஸ்சி.) 226 இடங்களும், மீன்வளப் பட்டப்படிப்புக்கு (பி.எஃப்.எஸ்சி.) 40 இடங்களும், பி.டெக். உணவு பதனிடும் தொழில்நுட்பப் படிப்புக்கு ("பி.டெக் புஃட் பிராஸஸிங் டெக்னாலஜி') 20 இடங்களும், பி.டெக். கோழியின உற்பத்தி திட்டத்துக்கு ("பி.டெக். பெüல்ட்ரி புரொடக்ஷன் டெக்னாலஜி') 20 இடங்களும் உள்ளன.
முதல் கட்டமாக கால்நடை மருத்துவப் படிப்புக்கு 3,600, மீன்வள பட்டப்படிப்புக்கு (பி.எஃப்.எஸ்சி.) 400, உணவு பதனிடும் தொழில்நுட்பப் படிப்புக்கு 500, கோழியின உற்பத்தி திட்ட படிப்புக்கு 300 என மொத்தம் 4,800 விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டிருந்தன.
கூடுதல் விண்ணப்பம்: கடந்த வெள்ளிக்கிழமை வரை 3,381 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. அதில் 2,966 விண்ணப்பங்கள் கால்நடை மருத்துவ பட்டப்படிப்புக்கு (பி.வி.எஸ்சி.) என விநியோகிக்கப்பட்டுள்ளது. எனவே கால்நடை மருத்துவப் படிப்புக்கு கூடுதலாக 1,500 விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன.
விண்ணப்பங்களை எங்கு பெறலாம்? சென்னை மாதவரத்தில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், நாமக்கல் கால்நடை மருத்துவமனை வளாகம், மதுரை-திருப்பரங்குன்றம், கோவை-சரவணம்பட்டி, திருச்சி-உறையூர், ராஜபாளையம், வேலூர் ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையங்களில் விண்ணப்பங்களைப் பெறலாம்.
கட்டணம்: விண்ணப்பப் படிவத்துக்கான கட்டணம் ரூ. 600. ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பினருக்கு ரூ. 300. ஜூன் 6 வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்னை மாதவரம் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூன் 7.
இது குறித்து கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் குழு தலைவர் டாக்டர் திலகர் கூறியதாவது: கடந்த ஆண்டு 4,300 விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டன. இந்த ஆண்டு கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமான விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. கால்நடை மருத்துவ பட்டப்படிப்புக்கு (பி.வி.எஸ்சி.) மட்டும் சுமார் 5 ஆயிரம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே 25 முதல் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் விநியோகிக்கப்பட உள்ளது. கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும்போது, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் நகலையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். எனவே பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் விநியோகிக்கப்பட்ட உடன் 2011-ம் ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்கள் அதிக அளவில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.
தரவரிசைப் பட்டியல் எப்போது? ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். ஜூலை 13, 14 தேதிகளில் கவுன்சிலிங் நடைபெறும் எதிர்பார்க்கப்படுகிறது.
கால்நடை மருத்துவப் படிப்புகள்: 2010-ல் கட்-ஆஃப் மதிப்பெண்கள்
படிப்புகள் ஓ.சி. பி.சி. பி.சி (எம்) எம்.பி.சி. எஸ்.சி. எஸ்.சி.(ஏ) எஸ்.டி
பி.வி.எஸ்சி. 189.50 184.75 169.00 183.50 177.50 172.75 173
பி.எஃப்.எஸ்சி. 176.00 162.00 --- 166.00 165.50 137.50 ---
பி.டெக். 186.25 179.50 185.75 171 163 153.75 ---
ஓ.சி.-அனைத்துப் பிரிவினர்; பி.சி.-பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்; பிசிஎம்-பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினர்; எம்.பி.சி.-மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்; எஸ்.சி.-தாழ்த்தப்பட்ட வகுப்பினர்; எஸ்.சி.ஏ.-தாழ்த்தப்பட்ட (அருந்ததியர்) வகுப்பினர்; எஸ்.டி.-பழங்குடி வகுப்பினர்.

No comments:

Post a Comment