islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

இந்தியாவுக்கு தலைகுனிவு!


இந்தியாவுக்குள் புலியைப்போல் பாயும் நமது மத்திய புலனாய்வுத்துறைக்கு வெளிநாட்டு விவகாரம் என்றால் காய்ச்சல் வந்துவிடுகிறதே, அது ஏன் என்று புரியவில்லை.

÷போபர்ஸ் வழக்கில் குவாத்ரோச்சியை விரட்டிக் கொண்டு நாடு நாடாகச் சென்றதுதான் மிச்சம். ஒவ்வொரு கட்டத்திலும் அவரைத் தப்பவிடுவதில் காட்டிய முனைப்பை, சிக்க வைப்பதில் காட்டவில்லை.

÷குவாத்ரோச்சியை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்காக கடந்த 2002-ம் ஆண்டில் மலேசிய நீதிமன்றத்தை சிபிஐ நாடியது. ஆனால், உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

÷இதற்குப் பிறகு ஆர்ஜென்டினா போலீஸôரால் குவாத்ரோச்சி கைது செய்யப்பட்டபோது, அங்கிருந்து அவரைப் பிடித்து வருவதில் சிபிஐ முனைப்புக் காட்டுவதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியது. ஆர்ஜென்டினாவுடன் குற்றவாளிகளைப் பகிர்ந்துகொள்ளும் எந்தவிதமான ஒப்பந்தமும் இல்லாததால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டியதாயிற்று.

÷சிபிஐயின் சார்பில் ஆர்ஜென்டினா நீதிமன்றத்தில் என்ன வாதாடினார்களோ தெரியாது. கடும் எரிச்சலடைந்த நீதிபதி, குவாத்ரோச்சியை விடுவித்ததுடன், அவருக்கு வழக்குச் செலவைக் கொடுத்துவிடும்படி சிபிஐக்கு உத்தரவிட்டார். இதுபோக, வழக்கறிஞர் செலவு, மொழிபெயர்ப்புச் செலவு என இந்த விசாரணைக்கு மட்டும் ரூ.40 லட்சம் வீணானதுதான் மிச்சம். தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து குவாத்ரோச்சியை நீக்கியதுடன், வழக்கையும் மூடியிருக்கிறது சிபிஐ.

÷போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் ஆன்டர்சனின் கூட்டாளிபோல சிபிஐ நடந்து கொண்டதோ என்று சந்தேகிக்காமல் இருக்க முடியவில்லை. ஆன்டர்சன் இந்தியாவிலிருந்து சிபிஐக்குத் தெரியாமல் தப்பி ஓடியிருக்க முடியுமா?

÷ஆண்டர்சன் உள்ளிட்டோர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு 10 ஆண்டுகள்வரை அவர்களுக்குச் சிறைத்தண்டனை விதிக்க வழிவகுக்கப்பட்டது. ஆனால், கவனக்குறைவு காரணமாகவே உயிரிழப்புகள் ஏற்பட்டன என்றுகூறி குற்றச்சாட்டைக் குறைத்து 1996-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வெறும் 2 ஆண்டு சிறைத் தண்டனைதான் வழங்கியது.

÷குற்றச்சாட்டுகளைக் குறைத்து 1996-ம் ஆண்டில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மறுபரிசீலனை மனு தாக்கல் செய்தது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று மானக்கேடான கேள்விகளைக் கேட்ட உச்ச நீதிமன்றம், சிபிஐயின் மனுவைத் தள்ளுபடி செய்தது. இப்போது போபால் வழக்கும் திக்குத் தெரியாமல் நிற்கிறது.

÷சிபிஐயின் கவனக்குறைவு இத்துடன் முடிந்துவிடவில்லை. புரூலியா ஆயுத மழை வழக்கில் தேடப்பட்டு வரும் கிம் டேவியைப் பிடித்து வருவதற்காக டென்மார்க் நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் ஆஜராவதற்காகச் சென்ற சிபிஐ மூத்த அதிகாரிகள் கிம் டேவிக்கு எதிராக கொல்கத்தா நீதிமன்றம் வழங்கிய கைது உத்தரவை கையோடு எடுத்துச் சென்றிருக்கின்றனர். விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, அதுவும் கிம் டேவியின் வழக்கறிஞர் சுட்டிக்காட்டிய பிறகுதான் சிபிஐ சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட கைது உத்தரவு காலாவதியானது என்று சிபிஐ அதிகாரிகளுக்கே தெரிந்திருக்கிறது. இப்போது தொங்கிய முகத்துடன் சிபிஐ அதிகாரிகள் கைது உத்தரவை நீட்டிப்பதற்காக மனுச் செய்திருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் தாண்டி சிபிஐ அமைப்பு இப்போது உலகின் கேலிக்கு ஆளாகியிருக்கிறது. இந்தியாவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு பாகிஸ்தானுக்குத் தப்பியோடியவர்கள் பட்டியலை இந்திய உள்துறை வெளியிட்டது. ஏற்கெனவே இந்தப் பட்டியல் பாகிஸ்தானிடம் வழங்கப்பட்டுவிட்டது என்கிற உபரித் தகவலையும் தெரிவித்தது.

இந்தப் பட்டியலில் உள்ள ஒரு பெயர் வாசூல் கமார்கான். மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த இந்த வாசூல் கமார் கான் கடந்த ஆண்டே மும்பை போலீஸôலும், பயங்கரவாத எதிர்ப்புப் படையாலும் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், மும்பையை அடுத்த தாணேவில் தங்கி இருக்கிறார். உள்துறை வெளியிட்ட பட்டியலில் இவர் பெயர் இடம்பெற்றதை ஒரு பத்திரிகை கண்டுபிடித்து அம்பலமாக்கிவிட்டது.

அதே பட்டியலில் இருக்கும் ஃபெரோஸ் அப்துல் ரஷீத் கான் என்பவரும் மும்பையில்தான் இருக்கிறார் என்பது இப்போது தெரியவந்திருக்கிறது. அவ்வளவு ஏன், கடந்த ஆண்டிலிருந்து தேசியப் புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) பிடியில் இருக்கும் மணிப்பூர் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ராஜ்குமார் மேகனின் பெயரும் சிபிஐயின் தேடப்படுவோர் பட்டியலில் இருக்கிறது.

முறையாக விசாரிக்காமல் ஏனோ தானோவென்றா பாகிஸ்தானில் இருப்பதாக நாம் சந்தேகப்படும், நம்மால் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலை அளிப்பது? நெருக்கடி முற்றுவதைப் புரிந்துகொண்ட சிபிஐ இப்போது தேடப்படுவோர் பட்டியலை முழுமையாகத் திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது. நீங்கள் குறிப்பிடும் தீவிரவாதிகள் உங்கள் நாட்டில் தான் இருக்கிறார்களா என்று முதலில் தீரவிசாரித்துவிட்டு எங்களைக் குற்றம்சாட்டுங்கள் என்று பாகிஸ்தான் கேட்பதில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது.

÷இதெல்லாம் வெறும் கவனக்குறைவு என்றும், எல்லோருக்கும் நேரும் பிழைதான் என்றும்கூறி உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார். ஒசாமா பின்லேடன் தங்கள் நாட்டில் இல்லை என்றுகூறிக் கொண்டிருந்த பாகிஸ்தானுக்கு, இப்போது எத்தகைய அவமானமும் நெருக்கடியும் ஏற்பட்டிருக்கிறதோ அதேயளவு அவமானம் கான் விவகாரத்தில் இந்தியாவுக்கும் ஏற்பட்டிருக்கிறது. தேடப்படுவோர் பட்டியலில் இருந்து கான் பெயரை நீக்கிவிட்டதாலோ, கானின் கைது உத்தரவை நீட்டித்துப் பெறுவதாலோ மட்டும் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தைத் துடைத்துவிட முடியாது.
-DINAMANI.

No comments:

Post a Comment