islam
அஸ்ஸலாமு அலைக்கும்...
தடுமாறி நிற்கும் தமிழ்ப்பாட நூல்கள்
கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் நாளில் பொதுமக்களுக்குத் தீராத சிக்கலாகத் தோன்றுவது இரண்டு. ஒன்று; தனியார் பள்ளிகளின் கட்டணத் தொகை. இரண்டாவது; பாட நூல்கள்.
நடப்புக் கல்வியாண்டில் சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படு ம் என அறிவித்து, அனைத்து வகுப்புகளுக்கும் பாடநூல்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டும் வருகின்றன.
இந்த நிலையில் தமிழ்ப்பாட நூல் வழங்குவதைப் புதிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. காரணம், அவற்றில் முன்னாள் முதல்வரின் எழுத்தும் வரலாற்றுக் குறிப்புகளும் இருப்பதுதான்.
பலகோடி ரூபாய் செலவில், வண்ணமயமாக, அளவிலும் பெரியதாய் அச்சிடப்பட்ட தமிழ்ப் பாடநூல்கள் இப்போது மறுபரிசீலனைக்கு உட்பட்டுள்ளன. இதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் கல்வித்துறை அலுவலர்களும் பாடநூல் குழுவினருமே ஆவர்.
பாடத்திட்டத்தின் நோக்கத்தையும் செயல்முறைகளையும் மாணவர்களுக்கு எடுத்துச் செல்லும் கருவி பாடநூல். ஒவ்வொரு பாடத்துக்கும் கலைத்திட்டம், பாடத்திட்டம் ஆகியவை அமைக்கப்பட்ட பின்னர், அதற்கேற்ப பாடநூல்கள் தயாரிக்கப்படுகின்றன.
பாடநூல்கள் மதம், ஜாதி, இனம், அரசியல் சார்பற்றவையாய் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலை விளக்கிக் கூறும் வரலாற்றுப் பாட நூல்களைவிட, தமிழ்ப்பாட நூலில் அரசியல் கலந்தது பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அரசுத் தேர்வுக்குரிய பத்தாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூல் தயாரிப்புக் குழுவில், தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் சிறப்புத் தலைவரும், மாநிலப் பொறுப்பாளர்கள் பலரும் இடம்பெற்றுள்ளனர். அதிலும், சட்டமேலவைத் தேர்தலுக்குத் தமிழாசிரியர் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒருவரும் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
கடந்த கல்வியாண்டில் வெளிவந்துள்ள முதல் வகுப்பு, ஆறாம் வகுப்புத் தமிழ்ப்பாட நூல்களைத் தயாரிக்கத் தேவைப்பட்ட ஆசிரியர்களை, கல்வித்துறையினர் மாநில அளவில் திறனறி தேர்வு நடத்தித் தேர்ந்தெடுத்தனர். ஆனால், அதே கல்வித்துறை இவ்வாண்டு இத்தகைய பணிக்காக ஓர் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்தவர்களை - ஓய்வு பெற்றவர்களை எந்தத் தகுதி அடிப்படையில் நியமித்தது என்பது தெரியவில்லை.
சமச்சீர் கல்வித் திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்டுள்ள புதிய தமிழ்ப்பாட நூல்களில் முதல் பக்கத்தில் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் "நீராருங் கடலுடுத்த' எனும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் இடம்பெற்றுள்ளது. அடுத்த பக்கத்தில் முன்னாள் முதலமைச்சரின் செம்மொழி வாழ்த்துப் பாடல் அச்சிடப்பட்டுள்ளது. ஒருமொழிக்கு இருவகைப்பட்ட வாழ்த்துப் பாடல்கள் தேவைதானா? செம்மொழி வாழ்த்து என்பது ஒரு நிகழ்ச்சிக்காகத் தயாரிக்கப்பட்ட கருத்தமைவுப் பாடல் மட்டுமே. அந்த விழாவோடு அதன் செயல்பாடுகள் முடிந்துவிட்டன. தில்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காகத் தயாரிக்கப்பட்ட பாடல் இந்திய நாட்டின் அரசியலிலோ, கல்வித்துறையிலோ இடம்பெற்றிருக்கவில்லை. அதுபோன்ற ஒரு பாடலைத் தமிழ்நாட்டில் பாடநூல் குழுவினர் பாடநூலில் திணித்திருப்பது விதிகளை மீறிய செயலாகும்.
இதைக் கல்வித்துறை அலுவலர்கள் ஒப்புக்கொண்டு, நூல்களை அச்சிட்டு விற்பனை செய்யும் நிறுவனமான தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்திடம் கொடுத்து அச்சிடச்செய்து வெளிக்கொண்டு வந்துள்ளது எந்த வகையில் நியாயமானதாகும்.
இதில் அரசுத்துறைக்குரிய விதிமீறல்கள் எதுவும் நடந்திருக்கிறதா என்று எவ்வித மேலாய்வும் செய்யாமல் பாடநூல் குழுவினர் கருத்தை, கல்வி அலுவலர்கள் அப்படியே ஏற்றுக்கொண்டது முறைதானா? அத்துடன் இருவகையான வாழ்த்துப் பாடல்கள் இடம் பெற்றிருப்பதானது, எதிர்காலத் தலைமுறையினர் தமிழ் வேறு, செம்மொழி வேறு என்று பொருள்கொள்ளவும் இடமளிக்கிறது.
பாடநூல் பால்போல் இருக்க வேண்டும். அது மருந்தாகவும் உணவாகவும் இருப்பது அவசியம். அதில் சமநிலை பேணாது தங்கள் விருப்பம்போல் அரசியலைச் சேர்ப்பது சமூகநீதியைத் தகர்ப்பதாகும்.
வளரும் தலைமுறையின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஊன்றுகோலாக நிற்கும் பாடநூலைத் தமது விருப்பத்தின் விளம்பரக் கருவியாகப் பயன்படுத்துவது ஆசிரியர்க்கு அழகாகாது.
தமிழ்ப்பாட நூல்களில் புதிய அரசின் கருத்துக்கு ஒவ்வாத பகுதிகள் இடம்பெற்றிருப்பது ஒருபுறமிருக்க, பத்தாம் வகுப்புத் தமிழ்ப்பாடநூலில் செய்யுள், இலக்கணம், மொழிப் பயிற்சி, ஆங்கிலச் சொற்களுக்கான மொழி பெயர்ப்பு ஆகியவற்றில் ஏராளமான பிழைகள் இடம் பெற்றுள்ளன.
உரைநடைப் பாடப்பகுதிகள் பத்தாம் வகுப்புக்கேற்ற தரத்தில் அமையவில்லை. களையப்பட வேண்டியதும் திருத்தப்பட வேண்டியதுமான பகுதிகள் எல்லா வகுப்புகளிலும் நிறைந்து காணப்படுகின்றன. ஆனால் சென்ற ஆண்டு வெளிவந்த ஆறாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலில் சுட்டிக்காட்டப்பட்ட பிழைகளே இன்னும் திருத்தப்படவில்லை.
இந்நிலையில் புதிய நூல்களில் குவிந்துள்ள பிழைகளைக் களைவது எப்போது பிழையற்ற பாடநூல்களைத் தயாரிக்கப் புலமை மட்டும் போதாது பொறுப்புணர்வும் வேண்டும்.
-DINAMANI
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment