islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

பி.காம். படிப்புக்கு அதிகரிக்கும் வரவேற்பு: தொழிற்பிரிவு மாணவர்களுக்கு இடம் மறுக்கும் கல்லூரிகள்


பி.காம். படிப்புக்கு மாணவர்களிடையே அதிக வரவேற்பு எழுந்துள்ள நிலையில், பிளஸ்-2 தொழிற்பிரிவு (ஒக்கேஷனல்) மாணவர்களுக்கு அந்தப் பிரிவில் இடம் தர சில கல்லூரிகள் மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

பிளஸ்-2-வில் அதிக அளவிலான மாணவர்கள் முக்கியப் பாடங்களில் 200-க்கு 200 மற்றும் கூடுதல் மதிப்பெண்களை பெற்றிருக்கும் காரணத்தால், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணில் இம்முறை கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கலை அறிவியல் கல்லூரிகளுக்குப் படையெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இம்முறை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரியில் கலை அறிவியல் படிப்புகளில் மொத்தம் 2 ஆயிரம் இடங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், இந்தக் கல்லூரிக்கு இப்போது 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுபோல் அதே பகுதியில் உள்ள மற்ற கல்லூரிகளிலும், விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைவிட பன்மடங்கு உயர்ந்துள்ளது.

இந்த கல்லூரிகளில் கலை, அறிவியல் படிப்புகளைக் காட்டிலும், உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடிய பி.காம். பட்டப் படிப்புக்கே மாணவ, மாணவிகளிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.

இதை பயன்படுத்திக் கொண்டு, சில கல்லூரிகள் அரசு உதவி பெறும் திட்டத்தின் கீழ் வரும் சில படிப்புகளையும், சுயநிதி படிப்புகளாக மாற்றி லாபம் சம்பாதித்து வருகின்றன. இது ஒரு புறம் இருக்க, பிளஸ்-2-வில் தொழில் பிரிவு படித்த மாணவர்களுக்கு, சில கல்லூரிகள் பி.காம். படிப்பில் இடம் தர மறுப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

அமைந்தகரையைச் சேர்ந்த காயத்ரி என்ற மாணவி, பிளஸ்-2-வில் தொழில் பிரிவில் படித்துள்ளார். 1200-க்கு 930 மதிப்பெண் பெற்ற இவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி ஒன்றில், பி.காம். படிப்பில் சேர விரும்பி விண்ணப்பம் கோரியுள்ளார். ஆனால், கல்லூரி நிர்வாகிகள் பிளஸ்-2 தொழில் பிரிவுக்கு பி.காம். பிரிவில் இடம் கிடைக்காது. எனவே, வேறு பிரிவை தேர்வு செய்யுமாறு கூறியுள்ளனர்.

இதுகுறித்து சென்னையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி வணிகப் பிரிவு பேராசிரியர் ரவி கூறியது:

அரசு ஆணையின்படி, பிளஸ்-2 தொழில் பிரிவு மாணவர்களுக்கு, பி.காம். படிப்பில் 20 சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆணையை தமிழக அரசு பிறப்பித்து வருகிறது.

இம்முறை தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், இந்த ஆணையை பிறப்பிக்க தாமதமாகலாம். இருந்தபோதும், 2010-11 கல்வியாண்டில் பிறப்பிக்கப்பட்ட ஆணையையே கல்லூரிகள் பின்பற்ற வேண்டும்.

ஆனால், கல்லூரிகள் அரசு உத்தரவை மதிப்பதே இல்லை. லாபம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளன.

சில அரசு கல்லூரிகளும், தங்களுடைய தேர்ச்சி விகிதத்தை உயர்த்திக் காட்ட வேண்டும் என்பதற்காக, தொழிற்பிரிவு மாணவர்களை பி.காம். படிப்பில் சேர்த்துக்கொள்ள மறுத்து வருகின்றன. பல்கலைக்கழகமும் இதைக் கண்டுகொள்ளாமல் உள்ளது. எனவே, மாணவர் சேர்க்கை நடைமுறைகள் முடிவதற்குள், உத்தரவை தீவிரமாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment