islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

ஜெயலலிதா கவனமாக இருக்க வேண்டிய நேரமிது


சட்டசபை தேர்தலில் கிடைத்த மகத்தான வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, மரியாதை செலுத்தும் நிமித்தமாக மாலை அணிவித்தார்

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா. மாலை, 4.30 மணிக்கு அவர் வந்தார். ஆனால், பகல் 12.30 மணியிலிருந்தே, அண்ணா சாலை போக்குவரத்தில், கடும் கெடுபிடி காட்டினர் போலீசார்.சென்னை போக்குவரத்தின் ரத்தநாளமே அண்ணா சாலை தான். அந்தச் சாலையில் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்தை தடை செய்வதும், தடுத்து அனுப்புவதும் பொதுமக்களுக்கு எவ்வளவு சிரமத்தை கொடுக்கும் என்பது போலீசாருக்கு தெரியாததல்ல.

கடந்த, 1991-96ல் நடந்த, அ.தி.மு.க., ஆட்சியின் போது, ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவப்பெயர், அவருக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து தான். நேற்று வரை முதல்வராக இருந்த கருணாநிதியும், தனது வருகைக்காக போக்குவரத்து நிறுத்தப்படுவதை பெரியளவில் ஆதரித்தவரல்ல.

நாளை முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஜெயலலிதாவும், அத்தகைய மனநிலையில் தான் இருக்கிறார் என்பது, அந்த போக்குவரத்து நெரிசலில் அவரே சிக்கியதில் தெரிந்தது. எந்த பந்தாவும் இல்லாத, தன் வழக்கமான வாகனத்தில், கடும் நெரிசலுக்கு இடையே, எம்.ஜி.ஆர்., சிலையை நோக்கி ஊர்ந்து தான் வந்தார் ஜெயலலிதா.ஆனால், இவருக்காக, பகல் 1 மணியில் இருந்தே, ஒரு பக்கம் போக்குவரத்து நிறுத்தமும், மறுபக்கம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இது, நிச்சயமாக புதிய முதல்வரிடம் நல்ல பெயர் எடுக்க விரும்பிய, ஏதோ ஆர்வக்கோளாறு அதிகாரியின் செயலாக தான் இருக்க வேண்டும். இத்தகையவர்களை அடையாளம் கண்டு, கண்டிக்க வேண்டியது முதல்வராக போகிறவரின் கடமை. போக்குவரத்து நிறுத்தத்தால் அதிருப்தியடைந்த வாகன ஓட்டிகள், தங்கள், "ஹாரனை' இடைவிடாமல் ஒலிக்கச் செய்ததன் மூலம் கொடுத்த, "சமிக்ஞை' அது தான்.

No comments:

Post a Comment