பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
பெட்ரோல் மீதான விலை நிர்வாக கட்டுப்பாட்டு முறையை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு கைவிட்டு விட்டதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம், உள் நாட்டில் பெட்ரோல் விலையை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்திக் கொள்ள முடியும். அதன்படி, சர்வதேச சந்தையில், இதுவரை இல்லாத வகையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், பெட்ரோல் விலையை கடந்த ஜனவரி மாதமே உயர்த்த, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டன. ஆனால், ஐந்து மாநில சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, மத்திய அரசு பிறப்பித்த வாய்மொழி உத்தரவால், விலையை உயர்த்துவது நிறுத்தி வைக்கப்பட்டது.
இப்போது, சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டதால், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 4.99 முதல் 5.01 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. டில்லியில் தற்போது, பெட்ரோல் விலை லிட்டருக்கு 58.37 ரூபாய்.
"சர்வதேச விலை நிலவரங்களின்படி பார்த்தால், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 9.50 முதல் 10 ரூபாய் வரை உயர்த்த வேண்டும். ஆனால், அதில் பாதியளவுக்கு மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன' என்று, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். விரைவில், மீண்டும் ஒரு முறை பெட்ரோல் விலை உயர்த்தப்படலாம் என்றும், அவர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment