islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

எம்.பி.பி.எஸ். சேர 19,000 பேர் ஆர்வம்!


தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இதுவரை மொத்தம் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர்.

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் கடந்த திங்கள்கிழமை (மே 16) விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.

முதல் கட்டமாக 20 ஆயிரம் விண்ணப்பங்களை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அச்சிட்டது. ஆனால், விண்ணப்ப விநியோகம் தொடங்கிய முதல் நாளன்றே (மே 16) மொத்தம் 9,000 விண்ணப்பங்களை மாணவர்கள் பெற்றனர். இதையடுத்து கூடுதலாக 5,000 விண்ணப்பங்களை அச்சிட மருத்துவக் கல்வி தேர்வுக் குழு ஆர்டர் கொடுத்தது.

மருத்துவக் கல்வி தேர்வுக் குழு எதிர்பார்த்தது போலவே, கடந்த ஐந்து தினங்களில் மொத்தம் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர்; விண்ணப்பத்தைப் பெறவும் சமர்ப்பிக்கவும் ஜூன் 2-ம் தேதி கடைசி நாளாகும். கடந்த ஆண்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 18,131 என்பது குறிப்பிடத்தக்கது.

1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள்: தமிழகத்தில் மொத்தம் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள், எட்டு சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கு 600-க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். இடங்கள் என மொத்தம் 2,250-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு இத்தகைய கடும் போட்டி நிலவுகிறது.

85 அரசு பி.டி.எஸ். இடங்கள்: சென்னை பாரிமுனையில் உள்ள ஒரே அரசு பல் மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு 85 பி.டி.எஸ். இடங்கள் மட்டுமே உள்ளன. சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கு 850-க்கும் மேற்பட்ட பி.டி.எஸ். இடங்கள் (ஒரு இடத்துக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.85,000) கிடைத்து வருகின்றன. இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரவே கட்-ஆஃப் மிகவும் அதிகரித்துள்ளதால், பி.டி.எஸ். படிப்புக்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நர்சிங் படிப்புகளில் சேரவும் ஆர்வம்: டிப்ளமோ (நர்சிங்), பி.எஸ்ஸி. (நர்சிங்)-பி.ஃபார்ம்.-பி.பி.டி.-பி.ஏ.எஸ்.எல்.பி. ஆகிய மருத்துவம் சார்ந்த படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க கடந்த மே 18-ம் தேதி முதல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

டிப்ளமோ (நர்சிங்) படிப்பில் சேர கடந்த மூன்று தினங்களில் மட்டும் மொத்தம் 13 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர்; இதையடுத்து மேலும் 6,000 விண்ணப்பங்களை அச்சடிக்க மருத்துவக் கல்வி தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது.

பி.எஸ்ஸி. (நர்சிங்)-பி.ஃபார்ம். உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர கடந்த மூன்று தினங்களில் மொத்தம் 8,000 பேர் விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர். மாணவர்களின் ஆர்வத்தையடுத்து, மேலும் 2,000 விண்ணப்பங்கள் அச்சிட மருத்துவக் கல்வி தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது.
-DINAMANI.

No comments:

Post a Comment