பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கத் தொடங்கிய முதல் நாளான திங்கள்கிழமையே 88 ஆயிரத்து 744 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளிலும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழான இடங்களும் ஒற்றைச்சாளர கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கப்படுகின்றனர்.
2011-12 கல்வியாண்டு பி.இ. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 62 மையங்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
முதல் நாளான திங்கள்கிழமை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மையத்தில், விண்ணப்பங்களை வாங்க அதிகாலை 3 மணிக்கே மாணவ, மாணவிகள் கூட்டம் கூடியது. கூட்டம் கூடியதைத் தொடர்ந்து, இந்த மையத்தில் மட்டும் அதிகாலை 3 மணி முதலே விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.
மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக முதல் நாளிலேயே 88 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.
விண்ணப்ப விநியோகத்தை தொடங்கி வைத்த சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் அளித்த பேட்டி: பொறியியல் படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை இம்முறை உயரும் என்பதால், கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 ஆயிரம் விண்ணப்பங்கள் கூடுதலாக அச்சிடப்பட்டுள்ளன.
விண்ணப்ப விநியோகத்துக்காக தமிழகம் முழுவதும் உள்ள மையங்களுக்கு மொத்தம் 23 ஆயிரம் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கூடுதல் விண்ணப்பங்கள் தேவைப்படும் பட்சத்தில் உடனடியாக அச்சிட்டு விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் உள்ள 486 பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளில் 400 கல்லூரிகள், கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலிடம் (ஏ.ஐ.சி.டி.இ.) அனுமதி கோரியுள்ளன. இதில் பெரும்பாலான கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு விடும்.
வரும் 18, 19, 20 தேதிகளில் ஏ.ஐ.சி.டி.இ., நிபுணர்கள் குழு கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டு, அனுமதி வழங்குவது தொடர்பாக பரிசீலிக்க உள்ளன.
இதனால் இப்போது பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1.20 லட்சம் அரசு ஒதுக்கீட்டிலான இடங்கள், 1.5 லட்சமாக உயர வாய்ப்பு உள்ளது. எனவே, இம்முறையும் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பி.இ. இடம் கிடைக்கும்.
படிப்புகளுக்கான இடங்கள் அதிகரிப்பு: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கிண்டி பொறியியல் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, கட்டடக்கலை மற்றும் திட்டக் கல்லூரி ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகளில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் பி.இ. எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல், சிவில் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இடங்கள் உயர வாய்ப்பு உள்ளது என்றார் மன்னர் ஜவஹர்.
பி.இ. விண்ணப்பங்கள் மே 31-ம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் ஜூன் 3-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
கடந்த முறை அரசு ஒதுக்கீட்டிலான பி.இ. படிப்புகளில் சேர 1,69,666 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 1,11,883 பேர் பி.இ. இடம் பெற்றனர். மொத்தம் 8,172 பி.இ. இடங்கள் காலியாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment