islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

தருமம் வெல்லும்; வெல்ல வேண்டும்!


மதுரை என்றாலே மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலும், வைகையின் வளமும் சங்க இலக்கியமும்தான் ஞாபகம் வரும், வர வேண்டும். ஆனால், இப்போது சட்டம் - ஒழுங்கு பிரச்னையால் மதுரை என்றாலே ஒரு பயம் மக்களைக் கவ்வுகிறது. அந்த நிலை வருந்தத்தக்கது. இதற்குக் காரணம் பல பயங்கர நிகழ்வுகள், கொள்ளை, தீவைப்பு, ரெüடிகளின் அட்டகாசம் என்று சமூக அமைதியை விரும்பும் நடுநிலையாளர்கள் மனம் வெதும்புகின்றனர்.

காவல் துறையின் அடிப்படைப் பொறுப்பு சட்டம்-ஒழுங்கைப் பராமரித்தல், குற்றங்கள் நடவாமல் தவிர்த்தல், நடந்த குற்றங்களைத் துரிதமாகக் கண்டுபிடித்தல் என்று வரையறுக்கப்பட்டுள்ளன. காவல் பணி சமுதாயத்தைக் கட்டுக்கோப்பாகக் காக்கும் பணி. சுதாரிப்பும், கவனமும் தொடர்ந்து இருப்பது அவசியம்.

இது ஏதோ மற்ற அரசு அலுவலகங்கள்போல் கோப்புகள் மூலம் அன்றாடம் வரையறுக்கப்பட்டுள்ள நேரப்பணி அல்ல. மக்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய முக்கிய பணி. அதைச் சரிவரக் களப்பணியாளர்களுக்கு உணர்த்தி, அவர்களை உற்சாகப்படுத்தி பணித்திறனை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு மேற்பார்வையிடும் உயர் அதிகாரிகளுடையது.

ஒரு தலைமைக் காவலரின் தொப்பியும், லத்தியும் மாட்டு வண்டியில் வந்தாலே கிராமத்தில் தானாக அமைதி வந்துவிடும் என்று அந்தக்காலத்து போலீûஸப்பற்றி தெற்கு மாவட்டங்களில் பெருமையாகச் சொல்வார்கள். அன்றைய போலீஸின் கஞ்சி போட்ட அரை நிஜாரும், பூட் பட்டியும் அதில் சொருகிய பென்சிலும், கையில் சிறு நோட் புக்கும், உயர்ந்த சிவப்புத் தொப்பியும் பார்த்தால், மக்களுக்கு ஒருவித பயம் கலந்த மரியாதையைத் தானாக வரவழைத்தது.

ஆனால், இப்போதோ எந்த ஒரு சிறு பிரச்னை என்றாலும் உயர் அதிகாரிகள் புடை சூழ நிலைமையைச் சமாளிக்க வேண்டிய நிலை. அப்படி வந்தாலும் பிரச்னைகள் முழுமையாகத் தீர்வதில்லை. ஏதோ அப்போது எரியும் தீயை அணைத்துவிட்டுச் செல்கின்றனர். பிரச்னை உருவாக்கத்தின் காரணம் ஆராயப்படுவதில்லை; அதைக் களைய முயற்சிப்பதில்லை.

இன்றைய உலகம் தகவல் வேட்கையில் திளைக்கும் உலகம். வெகு விரைவாக ஊடகங்கள், இணையதளம் மூலம் தகவல்களும் கருத்துகளும் பரவுகின்றன. இந்த நவயுகத்தில் காவல்துறையின் செயல்பாடு ஹைதரலி காலத்தில் இருந்தால் மக்களின் கதி அதோ கதிதான். ஏதோ சில நவீன கருவிகள் வாங்கிக்கொடுத்தால் மட்டும் போதாது; காவல்துறையின் அணுகுமுறையும், சிந்தனையும் மாறவேண்டும். காவல் உதவி மையங்கள் சமூக சேவை மையம் என்றிருந்த பெயரை மாற்றி காவல் நேய சேவை மையம் என்று வைக்கப்பட்டது. மனித நேயமே இல்லா காவல் நேயத்தால் யாருக்குப் பயன்? மனிதன் நோக மனிதன் பார்க்கும் பார்வை என்ற பாரதியாரின் வரிகளை எண்ணிப்பார்க்க வேண்டும். மக்கள் நோகும்படியான பார்வைதானே காவல்துறைக்கு என்று காவல் நிலையத்துக்கே வர அஞ்சுகின்றனர். ஏதாவது புகார் கொடுக்க வேண்டுமென்றாலும் காவல் நிலையத்துக்குப்போய் பழக்கமில்லை என்று சிபாரிசைத் தேடி அலையும் நிலை.

வெளிப்படையான நிர்வாகத்தை சர்வதேச அளவில் அளவிடும் "ட்ரான்பரன்ஸி இன்டர்நேஷனல்' என்ற அமைப்பு ஊழலில் திளைக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று கணித்துள்ளது. இப்போது பேசப்படும் ஊழல் செய்திகளைப் பார்க்கையில், அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

அரசுத் துறைகளில் மக்களோடு நேரடியாக அதிகம் தொடர்புடைய துறைகள் சுகாதாரத்துறை, மக்கள் நலத்துறை, கல்வித்துறை, வேளாண்மைத்துறை மற்றும் காவல்துறை. இருபது சதவிகிதம் மக்கள் அரசு மருத்துவமனைகளில் தொடர்பு கொள்கின்றனர். இருபத்தைந்து சதவிகிதம் கல்வித்துறை, காவல்துறையோடு நான்கு சதவிகிதம்தான் மக்கள் தொடர்பு இருக்கிறது. ஆனால், அரசுத் துறைகளில் ஊழல் மலிந்த துறை காவல்துறை என்பது மக்களின் கருத்து என்று வெளிப்படையான நிர்வாகத்தின் ஆய்வில் வெளிவந்துள்ளது. மற்ற துறைகளில் ஊழல் அதிகமாக இருந்தாலும் காவல்துறை ஊழல்தான் மக்களால் அதிகமாக உணரப்படுகிறது. இது காவல்துறை ஆளுமையைச் சிந்திக்க வைக்க வேண்டும்.

மக்கள் விரும்புவது அவர்களது குறைகளைக் கேட்டு உரிய விசாரணை மேற்கொள்வது, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பது. இதைச் செய்யத் தவறும்பொழுதுதான் அதிருப்தி ஏற்படுகிறது. பொதுமக்கள் காவல் நிலையம் வருவதற்கு ஏன் அஞ்சுகிறார்கள்? சில காவல் நிலைய அலுவலர்களின் அலட்சியப் போக்கு, மனுக்களைப் பதிவுசெய்ய மறுப்பது, பாதிக்கப்பட்டோர் கூறுவதைச் சந்தேகிக்கும் வகையில் வேண்டாத குறுக்குக் கேள்விகள் கேட்பது, உடனடியாக விசாரிக்காமல் காலம் தாழ்த்துவது போன்ற காரணங்களால் பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு வர அஞ்சுகின்றனர். சாதாரணமாகவே அரசு அலுவலகங்களில் எந்த ஒரு வேலையை நாடிச் சென்றாலும் காத்துக்கிடக்க வேண்டிய நிலை. ஒரு பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வாங்குவதே பிரம்ம பிரயத்தனமாக இருக்கிறது.

இத்தகைய சூழலில் காவல் நிலையத்தில் மேலும் கடுமையான அணுகுமுறை இருக்கும் என்று மக்களே தீர்மானித்துவிடுவது வருத்தம் தரும் உண்மை. ஆதலால் காவல்துறை உங்கள் நண்பன் என்று பெயரளவில் மட்டுமல்லாது, முழுஈடுபாட்டுடன் செயலில் காண்பிக்க வேண்டும்.

காவல் நிலைய அதிகாரிக்கு இரண்டு முகம் இருக்கிறது. பாதிக்கப்பட்டவரை மனிதாபிமானத்தோடு நடத்தி துரிதமான நேர்மையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது கனிவான முகம். குற்றம் புரிந்தவர் சட்டத்தை மீறுபவர்கள் போன்ற சமுதாய விரோதிகளுக்குக் கடுமையான முகம் காண்பிக்க வேண்டும்.

மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு உடனடியாகக் குற்றத்தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். குற்றத்தடுப்பு என்பது ஏதோ காவலர்களை ரோந்து அனுப்புவதோடு நின்றுவிடுவதில்லை. சரகத்தில் உள்ள கெட்ட நடத்தைக்காரர்களைக் கண்காணிப்பது, சந்தேக நபர்களை விசாரிப்பது, குற்றங்கள் சம்பந்தமான தகவல்களைச் சேகரிப்பது, வேறு நகரங்களில் நிகழும் சட்டம் ஒழுங்குப் பிரச்னைகளின் தாக்கத்தைக் கணித்து தடுப்பு நடவடிக்கை எடுப்பது என்ற பல ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அடங்கிய மிகக் கடினமான பொறுப்பை காவல்நிலைய அதிகாரி நிர்வகிக்க வேண்டும். இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்.

அந்தரத்தில் சட்டம் அமலாக்கப்படுவதில்லை. மக்கள் நலம்தான் பிரதானம். உதாரணமாக, வாகனச் சோதனை என்று வாகன ஓட்டிகளையும், சாமானிய சிறு வியாபாரிகளையும் வேதனைப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வாகன விபத்துகளைத் தடுப்பதற்குத்தான் வாகனத் தணிக்கை மேற்கொள்ள வேண்டும். நம்பர் பிளேட் இல்லாமல் வளைய வரும் வாகனங்கள், காதைப்பிளக்கும் விரச பாடல் ஒலிக்க அதிவேகமாகக் கார் ஓட்டும் புதுப்பணக்காரர்கள், சோழவரம் பந்தயத்துக்கு ஓட்டுவதுபோல் மோட்டார் சைக்கிளை ஓட்டும் ரோமியோக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காணி நிலமானாலும் பிளாட் போட்டு விற்கும் இடைத்தரகர்கள் எங்குபார்த்தாலும் முளைத்துள்ளனர், சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை. அது பறிக்கப்படும் நிலை நிலதாதாக்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

போலி ஆவணங்களைத் தயாரிப்பது, வயதானவர்கள் மட்டும் இருக்கும் இருப்பிடங்களைக் குறிவைத்து அவர்களைப் பயமுறுத்தி வாங்குவது, வெளிநாடுகளில் தாற்காலிகமாக வசிப்பவரின் சொத்துகளைப் பறிப்பது இப்போது அதிகமாகியுள்ளது. இது மக்களிடத்தில் பயத்தை விளைவித்துள்ளது என்றால் மிகையில்லை. வாடகைக்கு இடம்பிடித்து அதையே அபகரிக்கும் கயவர்கள் அதிகமாகியுள்ளனர். நிலதாதாக்களால் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் சர்வ சாதாரணமாக நிகழ்கின்றன என்பதை மறுக்க முடியாது. இதை முறியடிக்க வேண்டிய உடனடிப் பொறுப்பு காவல்துறைக்கு இருக்கிறது. நிலம் சம்பந்தப்பட்டது ஏதோ சிவில் வழக்கு என்று விட்டுவிட முடியாது.

சாமானியர்கள் சகாப்தம் இது என்றார் அறிஞர் அண்ணா. ஆனால், சாமானியர்கள் பெயரைச்சொல்லி கோடிகள் அள்ளும் நிலை வந்துவிட்டது. இந்தச் சூழலில் சமுதாய மதிப்பீடுகளும் மங்கிக் கொண்டிருக்கின்றன. இதன் தாக்கம் காவல்துறையிலும் பிரதிபலிக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தும் காவல்துறை கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் அப்பழுக்கற்றவையாக இருக்க வேண்டும். அதற்கு முன்னோடியாக உயர் அதிகாரிகளின் நடவடிக்கை இருக்க வேண்டும். நேர்மை, சிந்தனை வாக்கு செயலில் பிரதிபலிக்க வேண்டும்.

தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் தாம் முன்நின்று களப்பணியாளர்களை வழிநடத்திச் செல்ல வேண்டும். பாரம்பரியம்மிக்க தமிழகக் காவல்துறை பல சவால்களை வெற்றிகரமாகச் சந்தித்துள்ளது. துறையின் வலிமை வல்லவர்கள் விட்டுச்சென்ற நற்செயல் முறைகள். எதையும் சாதிக்கவல்ல அறிவும், ஒழுக்கமும் படைத்த ஆய்வாளர்களும், உதவி ஆய்வாளர்களும், காவலர்களும் உள்ளனர். நேர்மையான திறமையான வழிகாட்டுதல் மீண்டும் காவல்துறையை மிளிரச் செய்யும்.

-ஆர். நடராஜ்.

No comments:

Post a Comment