islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

முறைகேடுகளை வேடிக்கை பார்க்க முடியாது: எஸ்.ஒய்.குரேஷி


தேர்தலில் முறைகேடுகள் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

தமிழகத்தில் தேர்தல் நடத்தும் பணி சவாலானது என்று கூறியிருக்கும் அவர், அவசரச் சட்ட காலத்தைப் போன்ற நிலை இருப்பதாக திமுக, பாமக ஆகிய கட்சிகள் கூறியிருக்கும் குற்றச்சாட்டை மறுத்தார்.

தில்லியில் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக அவர் மேலும் கூறியது:

5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் அதிலும் முக்கியமாக தமிழகத்தில் பணபலம் பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்காக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க பல இடங்களில் முயற்சிகள் நடந்திருக்கின்றன.

இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் மூலம் ரூ.53 கோடி அளவுக்கு கணக்கில் வராத பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியிருக்கின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் ரூ.42 கோடி பிடிபட்டிருக்கிறது.

அதிகார வரம்பை மீறி தேர்தல் ஆணையம் செயல்படுவதாகக் கூறப்படுவது தவறானது. அரசியல் சட்டம் அளித்திருக்கும் அதிகார வரம்புக்குள்தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்துவதுதான் எல்லாவற்றிலும் முதன்மையானது. தேர்தல் அமைதியாகவும் வெளிப்படையாகவும் அனைவரும் பங்கேற்பதாகவும் அமைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

தேர்தலில் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடைமுறைகளை அமல்படுத்தியிருக்கிறோம். தமிழகத்தில் தேர்தல் நடத்தும் பணி மிகவும் சவாலானது. ஆனாலும் எந்தத் தவறும் நடந்துவிடக்கூடாது என்கிற வகையில், முடிந்தவரை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம்.

தேர்தல் நேரத்தில் அரசு இயந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை நாங்கள் தடுக்கிறோம். அதனால், தேர்தல் ஆணையம் மீது ஆளுங்கட்சி அதிருப்தியில் இருப்பது வழக்கமான ஒன்றுதான். தேர்தல் களத்தை சமநிலையாக்க விரும்பும் எதிர்க்கட்சிகள் எங்களை நடுநிலையானவர்கள் என்று கூறுவதும் வழக்கமானதுதான்.

தேர்தலில் அளவுக்கு மீறி செலவு செய்யப்படுவதைத் தடுப்பது மட்டும் தேர்தல் ஆணைய நடவடிக்கைகளின் நோக்கமல்ல. வாக்காளர்களுக்கு தரப்படுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் கணக்கில் வராத பணம், பரிசுப் பொருள்கள், மதுபானங்களைக் கைப்பற்றுவதும் எங்களுடைய பணியாக இருக்கிறது.

எந்தக் கட்சியையும் எந்த தனிநபரையும் புண்படுத்த வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.

பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும்போது சில அத்தியாவசியமான சோதனைகள் அவசியமாகின்றன. அதனால் சில அசெüகரியங்கள் தவிர்க்க முடியாதவையாகின்றன.

தேர்தலில் நடைமுறைப்படுத்தப்படும் புதிய நடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் கலந்து கொண்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால், எந்த மாதிரியான நடவடிக்கைகள் இருக்கும் என்பது கட்சிகளுக்கு முன்பே தெரிந்ததுதான். கட்சிகள் கேட்டுக்கொண்டபடிதான் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன. இப்போது குற்றம்சாட்டுவது நியாயமற்றது.

அரசியல் சட்டப்படியான கடமைகளில் இருந்து நாங்கள் தவற முடியுமா? முறைகேடுகள் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்க முடியுமா?

தேர்தலில் பணபலம் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. கட்சிகளும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

தமிழகம் மட்டுமல்லாமல், தேர்தல் நடக்கும் மற்ற மாநிலங்களிலும் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கைளை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் செலவுகளைக் கட்டுப்படுத்தும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மட்டும் தீவிரமாக நடந்து வருகின்றன.

மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சவாலாக இருந்தது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை அடுத்து இப்போது நிலைமை கட்டுக்குள் வந்திருக்கிறது. மாநில அரசு தேர்தல் ஆணையத்துக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. குறை சொல்லும் அளவுக்கு மாநில அரசு எந்த நேரத்திலும் நடந்து கொள்ளவில்லை என்றார் குரேஷி.

No comments:

Post a Comment