islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

தேர்தல் நேரக் கட்சிகள்!



1989-ல் நடந்த ஒன்பதாவது சட்டப் பேரவைத் தேர்தல் எம்.ஜி.ஆரின் மறைவு, அ.தி.மு.க.வில் பிளவு போன்ற அதிரடி அரசியல் மாற்றங்களின் பின்னணியில் நடந்தது என்பது மட்டுமல்ல, தமிழகம் முதன்முறையாக நான்கு முனைப் போட்டியைச் சந்தித்ததும் இந்தத் தேர்தலில்தான். புறா சின்னத்தில் போட்டியிட்ட எம்.ஜி.ஆரின் மனைவி வி.என். ஜானகியின் தலைமையிலான அ.தி.மு.க.வும் (ஜா), சேவல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. (ஜெ)வும் மட்டுமின்றி, சிவாஜிகணேசன் தலைமையிலான தமிழக முன்னேற்ற முன்னணியும் இந்தத் தேர்தலில் களம் கண்டன.

தேர்தலில் படுதோல்வியைத் தழுவிய தமிழக முன்னேற்ற முன்னணி மறுபடியும் காங்கிரஸில் இணைந்தது என்றால், கட்சியில் ஏற்பட்ட பிளவால் வெற்றியைப் பறிகொடுத்த ஜானகி மற்றும் ஜெயலலிதா அணிகள் தேர்தலுக்குப் பிறகு இணைந்து, ஜெயலலிதா தலைமையில் அ.இ.அ.தி.மு.க. மீண்டும் செயல்படத் தொடங்கியது.

கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சி விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1991-ல் நடைபெற்ற பத்தாவது சட்டப் பேரவைத் தேர்தலும் அனுதாப அலைத் தேர்தலாக அமைந்தது. ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் தாக்கப்பட்டு ஸ்ரீபெரும்புதூரில் அகால மரணம் அடைந்ததன் பின்னணியில் நடைபெற்ற இந்தத் தேர்தல்தான், முதன் முதலாகப் பாட்டாளி மக்கள் கட்சி களம்கண்ட தேர்தல். மிகப் பெரிய அனுதாப அலைக்கு நடுவிலும் பண்ருட்டி தொகுதியில் வெற்றி பெற்ற பா.ம.க., வட மாவட்டங்களில் செல்வாக்குள்ள சக்தியாக உருவாவதற்கான அறிகுறிகள் 1991-ல் நடந்த இந்தத் தேர்தலில் தெரிந்தன என்று சொல்லலாம்.

1996-ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மூன்று புதிய கட்சிகள் களம் கண்டன. காங்கிரஸில் ஏற்பட்ட பிளவால் ஜி.கே. மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உருவானதைத் தொடர்ந்து தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்தித்தது. வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையிலான தமிழ்நாடு ராஜீவ் காங்கிரஸ் கட்சியும் பா.ம.க.வுடன் கூட்டணி அமைத்துத் தேர்தல் களத்தில் குதித்தது.

தி.மு.க.விலிருந்து வெளியேறி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க.) என்கிற கட்சியைத் தொடங்கி முதன்முதலாக வைகோ தேர்தலைச் சந்தித்தது 1996-ம் ஆண்டு நடந்த இந்தத் தேர்தலில்தான்.

தமிழ் மாநில காங்கிரஸ் தவிர மற்ற இரண்டு கட்சிகளும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாவிட்டாலும், ம.தி.மு.க. பல இடங்களில் மூன்றாவது இடத்தை எட்டிப் பிடித்தது. மூன்றே மூன்று இடங்கள் தவிர, மற்ற இடங்களில் டெபாசிட்கூடக் கிடைக்கவில்லை என்றாலும் அரசியலில் தாக்குப் பிடிக்கும் கட்சியாக ம.தி.மு.க. காட்சி அளித்தது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

2001-ம் ஆண்டு நடந்த பதினொன்றாவது சட்டப் பேரவைத் தேர்தலின் சிறப்பம்சம் ஜாதிக் கட்சிகளின் படையெடுப்பு. தொல். திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள், டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான "புதிய தமிழகம்' போன்ற தலித் அமைப்புகள் களம் கண்ட தேர்தல் இதுதான். ஏ.சி. சண்முகம் தலைமையில் "புதிய நீதிக் கட்சி' என்கிற அமைப்பும் தேர்தல் களத்தில் குதித்தது.

எந்த அணியிலும் சேராமல் தனித்துப் போட்டியிட்டு அத்தனை தொகுதிகளிலும் ம.தி.மு.க. டெபாசிட் தொகையை இழந்தது என்றால், அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து ஒரு பலமான சக்தியாக பாட்டாளி மக்கள் கட்சி தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட தேர்தலும் இதுதான். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட கடைசித் தேர்தல் இது. தேர்தல் முடிந்த கையோடு மீண்டும் காங்கிரஸில் இணைந்துவிட்டது த.மா.கா.

2006 சட்டப் பேரவைத் தேர்தலில் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் பரபரப்பாகப் பேசப்பட்ட புதிய கட்சி. பெரிய அளவில் பொதுமக்களை பிரசாரத்தின்போது கவர்ந்த கட்சியும் இதுதான் என்றுகூடச் சொல்லலாம். திண்டிவனம் ராமமூர்த்தி தலைமையிலான தமிழ்நாடு ஜனநாயகக் காங்கிரஸ் கட்சியும் இந்தத் தேர்தலில் தனித்துக் களம் கண்டது. ஆர்.எம். வீரப்பன் தலைமையிலான எம்.ஜி.ஆர். கழகம், ஜெகத்ரட்சகனின் ஜனநாயக முன்னேற்றக் கழகம் என்று சில கட்சிகள் களத்தில் இருந்தாலும் குறிப்பிடும்படியான பலம் அந்தக் கட்சிகளுக்கு இருக்கவில்லை.

2011 தேர்தலில் களம்காண இருக்கும் புதிய கட்சிகள் இந்திய ஜனநாயகக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு முன்னேற்றக் கழகம் போன்றவை. மனித நேய மக்கள் கட்சி அதிமுக அணியிலும், கொங்குநாடு முன்னேற்றக் கழகம் திமுக அணியிலும் இணைந்து தேர்தலைச் சந்திக்கின்றன.

2006 தேர்தலின்போதே உருவாகி விட்டிருந்தாலும் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் இந்தத் தேர்தலில்தான் அதிமுக அணியில் இணைந்து களம் காண்கிறது. நடிகர் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி முதன்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதும் இந்த முறைதான்.

தமிழ்நாட்டின் தேர்தல் சரித்திரத்தில் வந்துபோன கட்சிகளின் எண்ணிக்கை நூறைத் தாண்டும் என்றாலும், ஒரு சில கட்சிகள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, அதன்பிறகு காணாமல் போன சரித்திரமும் உண்டு. ஒன்றிரண்டு தேர்தல்களை மட்டும் சந்தித்த கட்சிகளின் பட்டியலும் நீளும்.

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியாரின் தமிழரசுக் கட்சி, சி.பா. ஆதித்தனாரின் "நாம் தமிழர்' கட்சி, ஈ.வெ.கி. சம்பத்தின் "தமிழ் தேசியக் கட்சி', எஸ்.டி. சோமசுந்தரத்தின் "நமது கழகம்', எஸ். திருநாவுக்கரசரின் எம்.ஜி.ஆர். அண்ணா தி.மு.க., நெடுஞ்செழியன், க. ராசாராம் போன்றவர்கள் தொடங்கிய "மக்கள் தி.மு.க.' என, தலைவர்களை நம்பித் தொடங்கப்பட்ட கட்சிகள் நாளடைவில் காற்றில் கரைந்தது எப்படி என்பதை ஆராய முற்படுவதில் அர்த்தமில்லை.

தேர்தலுக்குத் தேர்தல் புதுப்புது கட்சிகள் தோன்றுவதும் தேர்தல் முடிந்தவுடன் தோல்வியின் பாதிப்பால் காணாமல் போவதும் அரசியல் விளையாட்டில் ஒரு பகுதி. இந்த விளையாட்டு, ஜனநாயகம் இருக்கும்வரை தொடர்ந்த வண்ணம் இருக்கும.
தினமனி

No comments:

Post a Comment