விவாகரத்து பெறும் பெண்ணுக்கு சரிபாதி சொத்து அளிக்கப்பட வேண்டும் என்று சட்ட அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
இக் குழுவின் தலைவர் ஜெயந்தி நடராஜன் தில்லியில் செயதியாளர்களிடம் புதன்கிழமை இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:
இந்து திருமணச் சட்டம் மற்றும் சிறப்புத் திருமணச் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்வதற்கான திருத்த மசோதா, 2010 ஆகஸ்ட் 4-ம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பிறகு மத்திய சட்ட அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு இந்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி அனுப்பிவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்தி நடராஜன் தலைமையிலான இந்த ஆலோசனைக் குழு பல தரப்பினரை அழைத்து பல கூட்டங்களை நடத்தி இந்த மசோதாவை விரிவாக பரிசீலனை செய்தது. இது தொடர்பாக தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை கடந்த மாதம் 1-ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இக் குழு தாக்கல் செய்தது.
இக் குழு செய்துள்ள முக்கிய பரிந்துரைகள் வருமாறு:
தம்பதியர் திருமணத்துக்குப் பின் சம்பாதித்த சொத்தில் சரி பாதியை விவாகரத்து பெறும் பெண்ணுக்கு அளிக்க வேண்டும்.
தற்போது மசோதாவில் விவாகரத்துக்கு விண்ணப்பித்த தேதியிலிருந்து 6 மாத கால அவகாசம் தரத் தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மாறாக, தம்பதியர் மீண்டும் ஆலோசிப்பதற்காக அந்த கால அவகாசத்தை அவர்களுக்கு தரவேண்டும் என பரிந்துரை செய்துள்ளோம்.
விவாகரத்து பெறும் தம்பதியர் தத்தெடுத்த குழந்தைகள் எதையும் வளர்த்து வந்திருந்தால் விவாகரத்துக்குப் பிறகு அக் குழந்தைகளை யார் வளர்ப்பது, அவர்களின் வாழ்வாதாரத்துக்கான சட்டப் பாதுகாப்பு போன்றவற்றை இந்த மசோதாவில் அரசு தெளிவாக குறிப்பிடவேண்டும்.
விவாகரத்து பெறும் பெண் தனக்கு சேரவேண்டிய பாதி சொத்தை பெறுவதை உறுதி செய்ய இந்த மசோதா மட்டும் போதுமானதாக இராது. சரிபாதி சொத்தை வசூலித்து பெண்ணுக்குப் பெற்று தர வலுவான சட்டபூர்வ அமைப்பு ஒன்றை கட்டாயம் உருவாக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போதைய மசோதாவில் உள்ள சில பிரிவுகளை திருத்துவதற்கு இக் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த நிலையில் மசோதாவில் பல்வேறு அம்சங்களை மீண்டும் பரிசீலித்து, திருத்தப்பட்ட விரிவான ஒரு மசோதாவை அரசு மீண்டும் கொண்டு வரக்கூடும் எனத் தெரிகிறது.
லாலு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்த குழு உறுப்பினர்களாக உள்ளனர். அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இந்த குழு தனது பரிந்துரைகளை அளித்துள்ளது என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment