islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

உணவு உரிமை உயிரின் பரிசு!


இந்தியத் திருநாட்டின் உணவுக்கொள்கையில் மக்களின் உயிர்கள் இரண்டுவிதமாகப் பறிபோகின்றன. ஒருபக்கம் உணவை உற்பத்தி செய்பவன் கடனாளியாகிக் கந்துவட்டிக்குப் பலியாகித் தன் உயிரைத் தானே மாய்த்துக் கொள்கிறான். மற்றொரு பக்கத்தில் உணவு வாங்கப் பணமில்லாமல் பரம ஏழைகள் பட்டினியால் சாகின்றனர்.


உணவு உற்பத்தியாகும் இடங்களில் அரசுக் கொள்முதல் காரணமாக உணவை மலையெனக் குவித்துள்ளனர். யாருக்கு எங்கு தேவையோ அங்கு உணவு செல்வதில்லை. சத்தீஸ்கர், தமிழ்நாடு நீங்கலாக பொது விநியோகத்தில் உணவுத்தேங்கல் ஏற்பட்டுள்ளது.

எல்லா கிராமங்களிலும் ரேஷன் கடைகள் இல்லை. நகரப்பகுதிகளில் மட்டும் நிறைய உண்டு. மாத ரேஷன் வாங்க சில மாநிலங்களில் 10 முதல் 20 கி.மீ. வரை நடை பயில வேண்டும்.

ஒரேசமயத்தில் 20 கிலோ அல்லது 35 கிலோ அரிசியோ, கோதுமையோ வாங்கப் போதிய பணம் இல்லாததாலும் ரேஷன் கடைகளில் ஆஃப்டேக் அதாவது சரக்குகள் தீருவது இல்லையாம்.

தமிழ்நாட்டிலும் சத்தீஸ்கரிலும் ஒரு ரூபாய் அரிசித் திட்டம் உள்ளது. இதர மாநிலங்களில் மத்திய அரசு நிர்ணயித்துள்ள நியாயவிலையில்தான் ரேஷன் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்ற கூட்டுறவு விற்பனைச் சங்கம் பிரிட்டிஷ் ஆட்சியில் தொடங்கி நல்ல அடித்தளம் பெற்றிருந்தாலும் நடுவே நலிவுற்று நோயுற்றபோது ரேஷன் பொருள் விநியோகப் பொறுப்பைப் பெற்றுப் புத்துணர்வு கொண்டது.

தமிழ்நாட்டில் சுமார் 93% ரேஷன் பொருள்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களுக்குச் சொந்தமான கடைகள் மூலம் விநியோகமாகின்றன. மீதி சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் கடைகள் மூலமும் விநியோகமாகின்றன.

தமிழ்நாட்டில் அனைத்துக் கிராமங்களிலும் ரேஷன் கடை உண்டு. அதிகபட்சம் 2 கி.மீ. தூரமே. அரிசி அரசியலால் ஆட்சியைக் கோட்டைவிட்ட காங்கிரஸ் ஆட்சிக்குப்பின், ஒரு ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி வழங்குவதாக வாக்களித்த அறிஞர் அண்ணா வாக்குறுதியை ஏற்று தி.மு.க. பதவிக்கு வந்த காலம் முதலே அரிசி விஷயத்தில் உஷார்.

தி.மு.க. என்றாலும் அ.தி.மு.க. என்றாலும் போட்டி போட்டுக் கொண்டு ரேஷன் கடை நியாயவிலையைவிடக் குறைவாகக் குறைத்துக் குறைத்து இன்று கிலோ ஒரு ரூபாயானது.

அடுத்தகட்டமாக, இன்று 2011 அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அரிசி இலவசமாகிவிட்டது. மாநில அரசுக்கு இதனால் ஏற்படும் இழப்பு 4,000 கோடி ரூபாய். இந்த இழப்பை ஈடுசெய்யவே டாஸ்மாக் அதாவது ""தேசிய உடைமையாக்கப்பட்ட மதுக்கடை வியாபாரம்'' கைகொடுப்பது மட்டுமல்ல; டி.வி. பெட்டிகளையும் மாநில அரசால் வழங்க முடிந்தது.

கேபிள் கட்டண வசூலையும் பெருக்கிக் கொள்ள முடிந்தது. எப்படியெனில் டாஸ்மாக் மூலம் கணக்கில் வந்த நிகர லாபம் 12,000 கோடி ரூபாய்கள். கிலோ 1 ரூபாய்க்கு அரிசியுடன் டி.வி. யுடன் பல இலவசங்களை அள்ளிவிட்டுப் பெருமையுற்றாலும்கூட, மதுவிலக்கால் உயர்ந்த மகாத்மாகாந்தியின் "ஆன்மா இதை மன்னிக்குமா? ஏழை மக்களைக் குடிக்க வைத்துக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு இலவசங்களை வழங்குவது அரசியல் தருமம் ஆகாது.

ரசாயன உரத்தால் விஷமான உணவுடன் உடலை விஷமாக்கும் டாஸ்மாக் சாராயமும் சேர்ந்து வயிற்றை நிரப்பும்போது ஈரல் நோய், இதய நோய், வயிற்றுப்புண், கட்டி, புற்றுநோய், வாத நோய், பித்த நோய் என்று தமிழர்களை நோயாளிகளாக மாற்றுவதுதான் உணவு உரிமைச்சட்டம் என்று ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டால் அந்த விதியை யார் மாற்ற முடியும்? ஆகவே, இதர மாநிலங்களுக்கு சத்தீஸ்கர் முன்மாதிரியே நன்று.

பழங்குடிகள் நிரம்பிய மாநிலம் சத்தீஸ்கர். மாவோயிஸ்டுகளின் கூடாரமும்கூட. உணவு விநியோகம் ஊழல் நிரம்பியிருந்தது. அரிசி உற்பத்தியில் உபரி மாநிலம். 1967-ல் தமிழ்நாட்டில் சி.என். அண்ணாதுரை செய்ததை பாரதிய ஜனதா தலைவர் ராமண் சிங் செய்தார். மக்களுக்கு ஊழலற்ற உணவு விநியோகத்தையும் மலிவு விலையில் அரிசியும் தர வாக்களித்தபடி 2004-ல் இவர் பதவிக்கு வந்தார். வந்தபின்னர் பொதுவிநியோக அவசரச்சட்டம் ஒன்றைப் பிறப்பித்துத் தனியார் ரேஷன் கடைகளையும், போலி ரேஷன் கடைகளையும் ஒழித்தார்.

ரேஷன் கடைகளைக் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், பஞ்சாயத்து சபை, மகளிர் சுயஉதவிக் குழு அமைப்புகளுக்கு வழங்கினார். ரேஷன் கடை அமைக்க வங்கிக்கடன் மானியங்கள் வழங்கப்பட்டன. ஏறத்தாழ 10,000 ரேஷன் கடைகளும் 1,500 கொள்முதல் நிலையங்களும் உருப்பெற்றன.

சத்தீஸ்கர் உணவு விநியோகத்தின் சிறப்பு எதுவெனில் அலோக் சுக்லாவின் ஆக்கப்பூர்வமான யோசனைகளுக்கு ராமண்சிங் வழங்கிய நல்லாதரவு. 2007-08-ல் உணவுச் செயலராகப் பணியாற்றிய சுக்லா ஐ.ஏ.எஸ். தலைசிறந்த பொது நிர்வாகி என்ற பிரதமர் விருதைப் பெற்றார். இவர் வழங்கியுள்ள உணவு நிர்வாகத்தில் ஒரு மூட்டை அரிசிகூட வீணாகாத திட்டத்தை அமல் செய்தார். ஆண்டுக்கு 44 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்து அதில் 24 லட்சம் டன்கள் மையத் தொகுப்புக்கு வழங்கியதுபோக, நீண்டகாலம் நெல்லாக வைக்காமல் கொள்முதல் செய்த 4 மாதங்களுக்குள் அரவை செய்து பக்குவம் செய்து ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படுவதுடன் - திருட்டுப்போகவோ, ஏமாற்றவோ, வெளி அங்காடிக்குக் கடத்தவோ வழியில்லாமல் கம்ப்யூட்டர் கண்காணிப்பும் உண்டு. திருட்டைக் கம்ப்யூட்டர் காட்டிக் கொடுத்துவிடுமாம்!

டாஸ்மாக் விற்பனையில்லாமல் நல்வழியில் மாநில மானியம் 1,287 கோடி ரூபாயுடன் மத்திய அரசு மானியம் 2,000 கோடி ரூபாய் கொண்டு உணவு விநியோகம் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் சுமார் 50 சதவீத மக்களுக்கு வழங்கி, மாவோயிஸ்டுக் கிளர்ச்சிகளையும் அந்த மாநில அரசு சமாளித்துவிட்டது.

உலகத்தில் வறுமையின் காரணமாக யாரையும் பட்டினியால் சாகவிடக்கூடாது என்றும், குறைந்தபட்சம் 1,700 கலோரி உணவாவது கிடைக்க வேண்டும் என்றும் ஐ.நா. உணவு - விவசாய நிறுவனம் வழங்கியுள்ள உத்தரவைத் தொடர்ந்து வளரும் நாடுகள் எல்லாம் ஏழைகளின் உணவு உரிமை மசோதாவை அதாவது "ஃபுட் செக்யூரிட்டி மசோதா'வைச் சட்டமாக்கி வருகின்றன.

குறிப்பாக, பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் கொடிய வறுமை நிலவி வருகிறது. ஐ.நா. உணவு நிதியும் கணிசமாக வழங்கப்படுகின்றன.

இந்தியாவில் வறுமைக்கோட்டை அளவிடுவதில் நிறைய முரண்பாடுகள் இருப்பினும், தமிழ்நாடு, சத்தீஸ்கர் மாநிலங்களில் பொது விநியோகத்தில் தாராள மனப்பான்மை உள்ளது. வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கும் அரிசி உண்டு.

டெண்டுல்கர் கமிட்டி ஐ.நா. உணவு - விவசாய நிறுவன அளவுகோலை மையமாக வைத்து கிராமப்பகுதிகளில் 41 சதவீத மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்வதாக முடிவு செய்துள்ளது. ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் என்.சி. சக்சேனாவின் முடிவு 50% ஆகும். திட்டக்கமிஷன் சர்வேயின்படி இது 28.3%.

ஏழ்மை பற்றிய புள்ளிவிவரம் பொதுவாகவே மிகைப்படுத்தப்பட்டுப் பேசுவதாகவும் கருத்து உண்டு. அரசிடமிருந்து எதுவும் உதவி கிட்டும் என்று மக்கள் பொதுவாக வருமானத்தைக் குறைத்துக் கூறலாம். என்னவாயினும் சரி, வறுமையில் உழன்று வாங்கும் சக்தி இல்லாத இம்மக்கள் பட்டினியில் மடிந்துவிடக் கூடாது என்றுதான் இந்திய நாடாளுமன்றத்தில் ஏழை உயிர்களுக்குப் பரிசாக உணவு உரிமை மசோதா சட்டமாக்கப்படவுள்ள சூழ்நிலையில், பொது விநியோகத்தை எட்ட முடியாத இடத்தில் உள்ளவர்களுக்கு எப்படி உணவுதானியம் கிடைக்கச் செய்வது என்றுதான் யோசிக்க வேண்டும்.

மாறாக, 2011 பட்ஜெட்டில் உணவு மானியத்தைப் பணமாக வழங்கப் போவதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளதைக் கவனித்தால் உணவு விநியோகத்தை, அதாவது ஏழைகளுக்கு ரேஷனில் அரிசி, கோதுமை வழங்கும் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் முயற்சியாகவே தோன்றுகிறது. குடும்பத்தலைவரிடம் வழங்கப்படும் பணத்தை அவர் உணவை வாங்கச் செலவழிப்பாரா? "குவார்ட்டர்' வாங்கச் செலவழிப்பாரா?

தவிரவும் உண்மையான ஏழையை அடையாளப்படுத்துவதிலும் சிக்கல் உண்டு. ஏழைகளைச் சென்றடைய வேண்டிய பணம் நடுவில் இடைத்தரகர்களைச் சென்றடையலாம்.

இப்பொழுதும்கூட வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் ஏழைகளின் அடையாள அட்டைகளை வழங்குவதில் முறைகேடுகள் உண்டு. அதற்கும் ஏழைகள் லஞ்சம் கொடுத்துப் பெறவேண்டிய சூழ்நிலை தமிழ்நாட்டில் மட்டுமல்ல; எல்லா மாநிலங்களிலும் உள்ளது.

உணவைக் கொள்முதல் செய்வதிலிருந்து பின்னர் பக்குவப்படுத்தி அது நுகர்வோரிடம் சென்றடையும்வரை பல கட்டங்களில் பலவிதமான ஊழல்கள் உண்டு. இந்த ஊழல் கூட்டணியில் உணவுக் கார்ப்பரேஷன், மாநில சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன், ரேஷன் கடைகள் இணைந்து அந்த நாள் முதல் இந்த நாள் வரை சாதித்தவை 2ஜி ஸ்பெக்ட்ரம்போல் ஒன்றுக்குப்பின் பல பூஜ்ஜியங்கள் போட்ட பல கோடி ஊழல்கள் என்று அண்மையில் ஷேட்காரி சங்கடன் விவசாயிகள் சங்கத் தலைவரும் எம்.பி.யுமான சரத் ஜோஷி அப்பட்டமாகக் கூறுகிறார்.

ஒருபக்கம் மலைபோல் உணவுக்குவியல். மற்றொருபக்கம், வாங்கும் சக்தியற்று ஆதிவாசிகளாகவும், பழங்குடிகளாகவும் வாழ்ந்துவரும் தரித்திர நாராயணர்களின் பட்டினிச்சாவுகள்.

உணவுக் கொள்முதலில் பிரச்னைகள் இல்லை. கொள்முதல் செய்த உணவு நிஜமான ஏழைகளை அடையாததுதான் விசுவரூபம் எடுத்து வருகிறது. இதில் தமிழ்நாடும் சத்தீஸ்கரும் விதிவிலக்கு.

வாங்கும் சக்தியற்ற பல கோடி கடைக்கோடி மக்களைப் பட்டினியால் வாடிச் செத்துவிடாமல் பாதுகாக்கும் நல்லெண்ணத்தில் உணவு பெறும் உரிமைச்சட்டம் இயற்றப்பட்டு உயிரின் பரிசாக அன்னமிடுவதைப்போல் நல்ல புண்ணியம் வேறு ஏதும் உண்டோ?
dinamani

No comments:

Post a Comment