நமக்குத் தேர்தல் புதிதல்ல. பண்டைக் காலத்தில் குடவோலை மூலம் தங்களை ஆளுகின்ற பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுத்தனர் என்றும், வேட்பாளர் தகுதி குறித்தும் உத்தரமேரூர் கல்வெட்டுகள் இன்றைக்கும் சொல்கின்றன. பாலாற்றங்கரையில் உள்ள கல்வெட்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் சொத்துக் கணக்குகளை மக்களுக்குத் தெரியப்படுத்தின எனத் தெரிவிக்கின்றனர்.
÷"மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்ற நியதிப்படி, தேர்தல் என்பது ஜனநாயகத்தின் நாற்றங்கால்; மக்கள் நல அரசுக்கு அச்சாணி. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1909-ம் ஆண்டு சட்டத்தின்படி 1910-ல் சொத்து வரி செலுத்துவோர் மட்டுமே வாக்களிக்கும் உரிமை கொண்ட தேர்தல் அறிமுகம் செய்யப்பட்டது. அனைவருக்கும் வாக்குரிமை என்கிற நிலைமை விடுதலைக்குப் பிறகுதான் ஏற்பட்டது.
÷பிரிட்டனில் ஆரம்பத்தில் பெண்களுக்கு வாக்குரிமை இல்லை. பெண்கள் அமைப்புகள் போராடின. ஒரு பெண்ணை பார்சலாகக் கட்டி பிரிட்டிஷ் பிரதமருக்கு அனுப்பி வாக்குரிமை பெற்றது பரபரப்பாகப் பேசப்பட்டது.
÷தமிழகத்தில் 1951 அக்டோபர் மாதத்தில் தொடங்கிய முதல் பொதுத் தேர்தல், 1952 ஏப்ரல் வரை நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. தமிழகத்தில் மட்டும் 1952 ஜனவரி 2, 5, 8, 9, 11, 12, 16, 21, 25 ஆகிய ஒன்பது நாள்கள் தேர்தல் நடைபெற்றது. சென்னை மாகாணத்தில் 375 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருந்தன. அதில் 190 தொகுதிகள் தமிழ்நாட்டில் இருந்தன. மீதித் தொகுதிகள் மலபார் மற்றும் ஆந்திரத்தில் இருந்தன.
÷சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க வண்ணப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. மஞ்சள் - காங்கிரஸ், சிவப்பு - நீதிக்கட்சி, பச்சை - முஸ்லிம் லீக், ஊதாவும் கருநீலமும் - சுயேச்சைகளுக்கு என்று ஐந்து வண்ணப் பெட்டிகள் வாக்களிக்கப் பயன்படுத்தப்பட்டன. துவக்கத்தில் இருந்த வண்ணாரப்பேட்டை, மாதவரம், பேசின்பிரிட்ஜ், பரங்கிமலை, ஆம்பூர், அதிராமப்பட்டினம், திருக்கோஷ்டியூர், சென்னிமலை, வாழப்பாடி, புளியங்குடி, கடம்பூர், கடையம், காரியாப்பட்டி, மேலப்பாளையம், பொறையார், கொடைக்கானல், வடமதுரை என்பவை உள்ளடக்கிய 49 சட்டமன்றத் தொகுதிகள் தற்பொழுது மறைந்துவிட்டன.
÷இந்தியத் தேர் நின்று கொண்டிருக்கிறது. நகர மறுக்கிறது. அதன் சக்கரங்கள் சேற்றில் ஆழப் பதிந்துவிட்டன. அந்தச் சேற்றிலிருந்து தேரை இழுக்க அனைவரும் இதய சுத்தியோடு வடம் பிடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதுதான் இன்றைய இந்திய ஜனநாயகம்.
÷இந்தியத் தேர்தல் முறையை உற்றுப் பார்த்தால் வியப்பும் ஆச்சரியமும் மேலிடும். ஆறு தேசியக் கட்சிகள், 51 மாநிலக் கட்சிகள், 173 தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத கட்சிகள், கிட்டத்தட்ட 67 கோடி வாக்காளர்கள், 7 லட்சம் வாக்குச்சாவடிகள், 35 லட்சம் தேர்தல் பணி அலுவலர்கள், 11 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 5 லட்சம் பாதுகாப்புக் காவலர்கள் - உலகில் எங்கும் இல்லாத அளவிலான புள்ளிவிவரங்கள் இவை. உலகத்தில் அதிக உயரத்தில் உள்ள வாக்குச் சாவடியும், பள்ளத்தாக்கில் உள்ள வாக்குச் சாவடியும் இந்தியாவில்தான் இருக்கின்றன.
÷நாடாளுமன்றத்துக்கு 20 லட்சத்துக்கு மேல் வாக்காளர்களும், சட்டமன்றத்துக்கு 2 லட்சத்துக்கும் மேல் வாக்காளர்களும் அடங்கிய தொகுதிகள் இங்குள்ளன.
அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நாடாளுமன்றத்துக்கு 50 ஆயிரத்திலிருந்து 4 லட்சம் என்றும், சட்டமன்றத்துக்கு 40 ஆயிரத்திலிருந்து 80 ஆயிரம் வாக்காளர்களும் அடங்கிய தொகுதிகள்தான் உள்ளன. இப்படிப்பட்ட சிக்கலான நிலைமையில் இந்திய உபகண்டத்தில் தேர்தலை நடத்துவது மிகவும் சிரமமான காரியம்தான்.
÷இன்றைக்கு வாக்காளர்களுக்கு அடையாள அட்டை, மின்னணு வாக்குப் பதிவு என்று தேர்தல் முறையில் பல்வேறு பரிணாம வளர்ச்சி தேர்தலுக்குத் தேர்தல் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
÷ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரியா, பிரான்ஸ், சுவீடன், டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து, இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளில் வேட்பாளர் செலவை முழுமையாகவோ, பாதியாகவோ அரசே எடுத்துக் கொள்கிறது. அதுபோன்ற திட்டத்தை இந்தியாவிலும் நடைமுறைப்படுத்த வேண்டுமென முன்னாள் உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தா குழு வலியுறுத்தி உள்ளது. இதனால், தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கலாம். அதுபோலவே விகிதாசாரப் பிரதிநிதித்துவம் பற்றியும் விவாதங்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. 1961 தி.மு.க. கோவை தேர்தல் சிறப்பு மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அண்ணா விகிதாசார வாக்குரிமையை வலியுறுத்தி இருந்தார். இந்திய சட்டக் கமிஷனும் 25 சதவிகித இடங்களை இம் முறையில் தேர்தலை நடத்தலாம் என பரிந்துரை செய்துள்ளது.
÷இந்த முறை ஜெர்மனி, இலங்கை, சுவீடன், ஸ்காட்லாந்து, இத்தாலி, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ளது.
÷தேர்தலின் போக்கு ஒவ்வொரு பத்தாண்டுக்கும் மாறுபடுகிறது, வித்தியாசப்படுகிறது. 1000 ரூபாய் செலவில் நடந்த தேர்தல் இன்றைக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து நடத்தப்படுகிறது.
÷ஜாதி, மதம், படை பலமுள்ளவன், அடாவடி ஆசாமி என்ற ஏதோ ஒரு நிலையில்தான் வேட்பாளர்கள் வாக்குகளைப் பெற முயல்கின்ற அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன நமது தேர்தல்கள். தேர்தல் களத்தில் வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்வது, கள்ள வாக்குகள் போடுவது என்பது சர்வ சாதாரண நடவடிக்கையாகிவிட்டது. ஹரியாணா மேகம் தொகுதியில் ஆரம்பித்த இந்த அவலம் பிகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் பரவி இப்போது இந்தியா முழுவதும் பரவிவிட்டது.
இந்தத் தில்லுமுல்லுகளை முதலில் தைரியமாக நளினிசிங் அறிமுகப்படுத்தினார். இதை ஒழுங்குபடுத்த வேண்டுமென்று நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர், ரஜினி கோத்தாரி போன்றோர் இன்டிபென்டன்ட் இனிஷியேட்டிவ் என்ற அமைப்பை உருவாக்கினர்.
மக்கள் தேர்தலை சம்பிரதாயமாகப் பார்க்காமல், தங்களுக்காகத் தங்களால் ஆளப்படும் அரசைத் தீர்மானிக்கும் சக்தியே தேர்தல் என்று உணர வேண்டும். ஆனால், இன்றைய நிலை என்ன? அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஐந்து ஆண்டுகள் ஆள்வதற்குத் தேர்தலை வாழ்வா, சாவா என்று எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் கோலாகலமான திருவிழாவாக எடுத்துக் கொள்கின்றனர்.
மக்கள் தங்களுடைய பிரச்னை என்று எடுத்துக் கொள்ளாமல் இதைப் பொழுதுபோக்காகவும் வேடிக்கைக் காட்சியாகவும் பார்க்கின்றனர்.
÷குன்றக்குடி அடிகளார் ""21-ம் நூற்றாண்டு இளைய தலைமுறையினர் நாட்டுக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்க வரும்போது ஒரு வேளை இந்தியா காணாமல் போயிருந்தால் எங்களைக் குற்றம் சொல்லாதீர்கள். காவல் காக்கும் பொறுப்பு தரப்பட்டவர்கள் ஒன்று விற்றுவிட்டார்கள் அல்லது ஒத்திக்கு விட்டு விட்டார்கள் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும்'' என்றார்.
÷இந்தியாவில் பல்வேறு வகையில் ஜனநாயகத்துக்குக் கேடு வரும்பொழுதெல்லாம் தேர்தல் என்ற மாபெரும் வழிகாட்டி கடந்த 59 ஆண்டுகளாக மக்களைப் பாதுகாக்கிறது.
நமது தேர்தல் முறையில் பழுதில்லாமல் கொண்டு போகும் பொறுப்பு அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் கடமை உண்டு என்று அறிய வேண்டும்.
÷இந்திய அரசியல் சட்டத்தை முன்மொழிந்து அரசியல் சட்ட நிர்ணய சபையில் அன்றைய சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் பேசுகையில் சொன்ன விஷயம் - ""உலகிலுள்ள எல்லா அரசியல் சட்டங்களையும் அலசி ஆராய்ந்து, இதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையையும், விவரத்தையும் விவாதித்து ஒரு மிகச் சிறந்த அரசியல் சட்டத்தை நாங்கள் இந்திய மக்களுக்குக் காணிக்கையாக்குகிறோம். இந்த அரசியல் சட்டத்தின் மூலம் நடக்கும் ஆட்சி வருங்கால சந்ததியினருக்கு வளமான, வலிமையான இந்தியாவைத் தராமல் போனால் எங்களைக் குற்றம் சொல்லாதீர்கள். இந்த அரசியல் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசியல்வாதிகள்தான் அதற்குக் காரணம்''.
÷அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. பொறுப்பில்லாத அரசியல்வாதிகளின் சுயநலங்களையும் மீறி இந்தியா ஒரு சுதந்திர நாடாகக் குடியரசாகத் தொடர்கிறது என்பது பெரிய விஷயம். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சுதந்திரம் பெற்ற 180 நாடுகளில் தொடர்ந்து சுதந்திர நாடாக இருக்கும் ஒரே நாடு இந்தியா மட்டுமே. அதற்குக் காரணம் - தேர்தல்கள்!
dinamani
No comments:
Post a Comment