மே மாதம் அக்னி நட்சத்திரத்தின்போது சென்னையில் வெயில் 41 டிகிரி செல்சியஸ் (106 டிகிரி பாரன்ஹீட்) வரை இருக்கும். அந்த வெயிலில் கால்பந்தாட்டப் போட்டி நடத்தினால் அது பைத்தியக்காரத்தனமாக இருக்கும். கத்தார் நாட்டில் அதுதான் நடக்கப் போகிறது.
2022-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி கத்தாரில் அதுவும் கோடையில் நடக்கப்போகிறது. பெரிதும் பாலைவனமாக உள்ள கத்தார் நாட்டில் கோடையில் வெயில் 50 டிகிரி ( 122 டிகிரி) அளவில் இருக்கும். இந்த அளவு வெயிலில் எப்படி விளையாடுவது? ஆகவே, வெயிலிலிருந்து விளையாட்டு வீரர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க, கத்தார் பல்கலைக்கழக நிபுணர்கள் வழி கண்டுபிடித்துள்ளனர். அதுதான் செயற்கை மேகங்கள்.
எந்தெந்த ஆண்டில் உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியை எங்கே நடத்துவது என்பதை எப்போதும் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஓட்டெடுப்பு மூலம் முடிவு செய்துவிடுவது வழக்கம். அதன்படி 2022-ம் ஆண்டுப் போட்டியை நடத்துவதற்கான இடத்தை முடிவு செய்ய 2010-ம் ஆண்டு டிசம்பரில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜூரிச் நகரில் உலகக் கால்பந்தாட்ட அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது.
ஓட்டெடுப்பு நடந்தபோது போட்டியை கத்தாரில் நடத்துவதற்கு ஆதரவாக 14 உறுப்பினர் நாடுகள் வாக்களித்தன. 8 உறுப்பினர் நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. இதில் வேடிக்கை என்னவென்றால் இப் போட்டியைத் தங்கள் நாட்டில் நடத்த ஆதரவு திரட்டுவதில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் தீவிரமாக முயன்றும் கத்தார் வென்றது.
அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் நேரில் சென்று முகாமிட்டு ஆதரவு கோரியும் அவரது முயற்சி பலிக்கவில்லை. எண்ணெய் வளம் கொண்ட கத்தார் நாடு பணம் கொடுத்துப் போட்டியை விலைக்கு வாங்கிவிட்டதாக அப்போது பேசப்பட்டது. பாலைவன வெயிலில் போட்டியை நடத்துவதா என்று கூறி எதிர்ப்புத் தெரிவித்தவர்களின் குரல் எடுபடவில்லை. இப் போட்டியை கத்தாரில் நடத்துவது என்று எடுக்கப்பட்ட முடிவு தவறானது என்று அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமா பகிரங்கமாகக் கூறினார்.
கடந்த சுமார் 70 ஆண்டுகளில் உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் ஐரோப்பாவிலும் தென் அமெரிக்காவிலும் மாறி மாறி நடந்துள்ளன. 2002-ம் ஆண்டில் முதல் தடவையாக இப்போட்டி ஆசியாவில் (ஜப்பானிலும் தென் கொரியாவிலும்) நடந்தன. அதேபோல 2010-ம் ஆண்டில் முதல் தடவையாக ஆப்பிரிக்கக் கண்டத்தில் (தென்னாப்பிரிக்கா) நடந்தது. எனினும், கத்தார் போன்ற சின்னஞ்சிறிய நாட்டில் இப் போட்டி நடக்க இருப்பது இதுவே முதல்தடவையாக இருக்கும்.
கத்தார் என்பது ஒரு சிறிய அரபு நாடு. இது சவூதி அரேபியாவுக்கு வடக்கே அமைந்துள்ளது. பரப்பளவில் அது தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தைவிட இரு மடங்கு பெரியது. மக்கள்தொகை சுமார் 16 லட்சம். அதில் பாகிஸ்தான் உள்பட வெளிநாடுகளிலிருந்து வந்து பணியாற்றுகிறவர்களின் எண்ணிக்கையும் அடங்கும். நாட்டின் பெரும்பகுதி பாலைவனம் என்று சொல்லத்தக்க அளவில்தான் உள்ளது. கத்தாரில் நிறைய பெட்ரோலிய குரூட் எண்ணெயும் எரிவாயுவும் கிடைக்கின்றன. அவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலம் கத்தாருக்கு நிறைய வருமானம் கிடைக்கிறது. ஆகவே, அந்த நாடு பல மேற்கத்திய நாடுகளுக்கு ஈடாகப் பெரிய பணக்கார நாடாக விளங்குகிறது.
எங்கள் நாட்டில் கடும் வெயில் அடித்தால் என்ன? அதைச் சமாளிக்கத் தொழில் நுட்பம் இருக்கிறது என்று கத்தார் ஆரம்பத்திலிருந்தே கூறி வந்துள்ளது. போட்டியை நடத்துவதற்கு இன்னும் பத்து ஆண்டுகள் இருந்தாலும், இப்போதே அது பிரச்னையைச் சமாளிக்க வழி கண்டுபிடித்துள்ளது.
கத்தார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் செயற்கை மேகத்துக்கான டிசைனைத் தயாரித்துள்ளனர். கால்பந்தாட்ட மைதானத்துக்கு மேலாக நல்ல உயரத்தில் இந்த செயற்கை மேகம் நிலைநிறுத்தப்படும். ரிமோட்டை இயக்குவதன் மூலம் இந்த மேகத்தை சற்று மேலே போகும்படி செய்யலாம். வானில் சூரியன் எங்கே இருக்கிறது என்பதைப் பொறுத்து செயற்கை மேகத்தை கிழக்கே நகர்த்தலாம் அல்லது மேற்குப் பக்கம் நகர்த்தலாம். தேவையானால் இந்தச் செயற்கை மேகத்தை வேறு மைதானத்துக்கு மேலாகக் கொண்டுபோய் நிறுத்தலாம். நிபுணர்கள் இதற்குச் செயற்கை மேகம் என்று பெயரிட்டுள்ளனரே தவிர, உண்மையில் இது கால் ஊன்றாமல் போடப்படுகிற அந்தரங்க பந்தல் போன்றதே.
சென்னை போன்ற பெரிய நகரங்களில் விளம்பரத்துக்காக நீண்ட கயிற்றின் நுனியில் பெரிய பலூனைக் கட்டிப் பறக்க விடுவார்கள். இதில் பெரும்பாலும் ஹீலியம் வாயு நிரப்பப்பட்டிருக்கும். ஹீலியம் வாயு காற்றைவிட லேசானது என்பதால் ஹீலியம் அடைக்கப்பட்ட பலூன் உயரே பறக்கிறது.
கத்தார் நிபுணர்கள் உருவாக்கும் செயற்கை மேகம் என்பது எடை குறைவான, ஆனால் வலுவான ஒரு பொருளால் தயாரிக்கப்படுவதாகும். இதனுள் ஹீலியம் வாயு நிரப்பப்பட்டிருக்கும். இது பார்வைக்கு ராட்சத கைப்பேசிபோல இருக்கும். இதன் மேற்புறத்தில் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுகிற சோலார் செல்கள் நிறையப் பதிக்கப்பட்டிருக்கும். இவை தொடர்ந்து மின்சாரத்தை உற்பத்தி செய்து கொண்டிருக்கும். செயற்கை மேகத்தின் மேற்புறத்தில் நான்கு மூலைகளிலும் எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கும். இவை மின்சாரத்தால் இயங்குபவை. ஆகவே, இந்த எஞ்சின்களை இயக்கி செயற்கை மேகத்தை இஷ்டம்போல நகர்த்தலாம். இந்தச் செயற்கை மேகமானது ஒரு மைதானம் முழுவதற்கும் நிழலை அளிக்கிற அளவுக்கு நீள அகலம் கொண்டதாக இருக்கும்.
செயற்கை மேகத்தைத் தக்கநேரத்தில் மைதானத்துக்கு மேலே கொண்டுபோய் நிறுத்திவிட்டால் மைதானத்தில் வெயில் விழாது. மைதானத்தில் நேரடியாக வெயில் விழாது என்பதால் தரை சூடேறாது. ஆகவே, தரைக்கு மேலே உள்ள காற்றும் சூடேறாது. இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும்.
பொதுவில் உலகில் எந்த ஒரு நாட்டிலும் வானிலைத் துறையினர் வெயிலை அளக்கும்போது வெப்ப அளவு மானியானது வெயிலில் வைக்கப்படுவதில்லை. நிழலில்தான் வைக்கப்படுகிறது. தவிர, வெயிலால் தரை சூடாகி அதன் விளைவாகச் சூடேறும் காற்றின் வெப்பத்தைத்தான் வெப்பமானி அளக்கிறது. அந்த அளவில் கத்தார் நிபுணர்களின் செயற்கை மேகத்தால் நிலம் சூடேறாமல் தடுக்கப்படும்போது அங்கு வெப்ப அளவு குறையும். அக்னி நட்சத்திரத்தின்போது என்றாவது ஒருநாள் காலையிலிருந்தே வானம் மேகமூட்டமாக இருக்குமானால் அன்று வெயில் அவ்வளவாகத் தெரியாது என்பது நாம் அறிந்த விஷயமாகும்.
தலைக்கு மேலே செயற்கை மேகம் இருந்தாலும் மைதானத்துக்கு வெளிப்புறத்திலிருந்து அனல் காற்று வீசினால் அது மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் கால்பந்தாட்ட வீரர்களைப் பாதிக்குமே என்று கேட்கலாம். அதற்கும் கத்தார் நிபுணர்கள் பதில் வைத்துள்ளனர். மைதானத்தைச் சுற்றி ரசிகர்கள் அமரும் ஆசனங்களுக்கு அடியிலிருந்து மேல் நோக்கி குளிர்காற்று வீசிக் கொண்டிருக்க ஏற்பாடு செய்யப்படும். அதாவது, மைதானத்தின் எல்லாப் புறங்களிலும் ஆசனங்களுக்கு அடிப்புறத்தில் குளிர்சாதன வசதி இருக்கும். இதனால் ரசிகர்களுக்கு வெயில் பாதிப்பு இராது.
ஆகவே, ஆட்டக்களத்தைச்சுற்றி ஏ.சி. போட்டது போன்ற விளைவு இருக்கும் என்பதால் வெளியிலிருந்து வரும் அனல்காற்று விளையாட்டு வீரர்களைப் பாதிக்கிற வாய்ப்பு இராது.
செயற்கை மேகம் ஒன்றை உருவாக்க ரூ 2 கோடி ஆகலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்று பல செயற்கை மேகங்களை உருவாக்கும்போது செலவு குறையலாம். செயற்கை மேகம் பற்றி கத்தார் நிபுணர்கள் மார்ச் மூன்றாம் வாரம் அறிவிப்பு வெளியிட்டதிலிருந்து உலகில் பல நாடுகளும் இதுகுறித்து தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. ஏனெனில், இவ்வித செயற்கை மேகத்தை கால்பந்தாட்டப் போட்டிக்கு மட்டுமன்றி, திறந்த வெளியில் நடக்கிற கிரிக்கெட், ஹாக்கி போன்ற வேறு விளையாட்டுகளுக்கும் பயன்படுத்த முடியும்.
திறந்த வெளியில் நடத்தப்படுகிற வேறு பல நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்த முடியும். செயற்கை மேகங்கள் வாடகைக்குக் கிடைக்கிற நிலைமையும் ஏற்படலாம். கத்தாரில் கோடையில் கடும் வெயில் இருக்கும்போது உலகக் கோப்பைப் போட்டியை நடத்துவதற்குப் பதில் குளிர்காலமாக இருக்கும்போது நடத்தலாமே என்று ஒருசமயம் யோசனை கூறப்பட்டது. ஆனால், உலக கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அந்த யோசனையை ஏற்க மறுத்துவிட்டார்.
உலகக் கோப்பைப் போட்டியில் கலந்துகொள்ளும் நாடுகள் வேறு போட்டிகளில் கலந்து கொள்வதற்கு ஏற்கெனவே போட்டுள்ள திட்டங்களை மாற்றச் சொல்ல வேண்டியிருக்கும் என்பதால் அது சாத்தியமற்றது என்று அவர் கூறினார்.
உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியை நடத்த கத்தார் சுமார் 2 லட்சத்து 60 கோடி செலவிடலாம் என்று ஒரு தகவல் கூறுகிறது. போட்டிக்கென்றே லூசெயில் என்ற பெயரில் புதிதாக ஒரு நகரம் உருவாக்கப்படும். அங்கு குறைந்தபட்சம் புதிதாக ஐந்து கால்பந்தாட்ட மைதானங்கள் கட்டப்படும்.
இந்தியாவில் கிரிக்கெட் ஆட்டத்தின் மீது பித்து அதிகம். ஆனால், கத்தாரில் கால்பந்தாட்டத்தின் மீது தான் ஆர்வம் அதிகம். கடந்த பல ஆண்டுகளில் கத்தார் அரபு நாடுகளுக்கான கால்பந்தாட்டப் போட்டியில் இரண்டு தடவை கோப்பையை வென்றுள்ளது.
2006-ம் ஆண்டில் ஆசிய விளையாட்டுப் போட்டி கத்தாரில் நடந்தபோது கால்பந்தாட்டத்துக்கான தங்கப் பதக்கத்தை கத்தார் வென்றது.
ஆசிய விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக நடத்தியதில் அனுபவம் உண்டு என்பதால் உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியை நடத்துவது கத்தாருக்குப் பெரிய விஷயமாக இராது என்று கருதப்படுகிறது.
கத்தார் நாட்டின் நிபுணர்கள் உருவாக்குகிற செயற்கை மேகங்களை பல தடவை சோதித்து அவற்றை மேலும் செம்மையாக்க நிறைய அவகாசம் இருக்கிறது. ஆகவே, செயற்கை மேகங்களை உருவாக்கும் திட்டம் வெறும் வாய்ப்பந்தலாக இராது என்று நிச்சயம் கூறலாம்.
dinamani
No comments:
Post a Comment