islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சிகரெட் பெட்டிகளில் அபாய எச்சரிக்கை பட விளம்பரங்களால் பயனில்லை: கேசவ் தேசிராஜு



சிகரெட், பீடி உள்ளிட்ட புகையிலை சார்ந்த தயாரிப்புகளின் மீது மண்டை ஓடு அச்சிடப்பட்ட அபாய எச்சரிக்கை புகைப்படங்கள் வெளியிட்டதால் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. புகையிலை சார்ந்த பொருள்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்கள் குறித்த விளம்பரப் படங்கள் மக்கள் மத்தியில் எவ்வித அச்சத்தையும் ஏற்படுத்தவில்லை. மேலும் இத்தகைய படங்கள் எதற்காகப் போடப்பட்டுள்ளன என்ற எச்சரிக்கை உணர்வே மக்களுக்கு ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலர் கேசவ் தேசிராஜு தெரிவித்தார்.

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற புகையில்லா புகையிலை குறித்த தேசிய கருத்தரங்கில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது:

புகையிலை பயிரிடும் விவசாயிகளிடம் மாற்று பயிர் சாகுபடி வாய்ப்புகள் குறித்து வேளாண் அமைச்சகத்துடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆந்திரப் பிரதேச விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

சிகரெட் பெட்டிகளின் மீது தேள் படம் அச்சிடுவதே சிகரெட்டுகள் மிகவும் அபாயகரமானது என்பதை உணர்த்துவதற்குத்தான். அதேபோல சிகரெட் புகைப்பவரின் நுரையீரல் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறது என்பதை உணர்த்தவும் எக்ஸ்-ரே படப் பதிவு வெளியிடப்படுகிறது. சில பகுதிகளில் இந்த படங்கள் சரிவர அச்சிடப்படவில்லை என்றும், புகைப்படப் பதிவு சரியாக தெரிவதில்லை என்றும் புகார்கள் வந்துள்ளன. இது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் மிகச் சிறப்பான வகையில் எச்சரிகை புகைப்படங்கள் வெளியிடப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

புகையில்லாத புகையிலையை அதாவது வெறும் புகையிலை, பான்பராக், குட்கா போன்று பிற புகையிலை சார்ந்த பொருள்களை உபயோகிக்கும் வழக்கம் இந்தியாவில் இப்போது அதிகரித்து வருகிறது. இது பிற நாடுகளுக்கும் பரவி வருகிறது. புகையிலை சார்ந்த பொருள்களை எந்த நிலையில் பயன்படுத்தும் ஆபத்தானது. புகையிலையை முற்றிலுமாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். புகையிலையை மாற்று வழியில் பயன்படுத்துவோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புகையிலை சார்ந்த பொருள்களுக்குத் தடை விதிக்க அமைச்சகம் சட்டம் கொண்டு வந்தால் அதை நீர்த்துப் போகச் செய்யும் அளவுக்கு இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் வலிமையாக உள்ளன. எனவே இதை படிப்படியாகக் குறைப்பதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும் என்றார். சமீபத்தில் நிகோடின் உள்ள, புகையிலை இல்லாத சிகரெட் வந்துள்ளதாக சிலர் தெரிவித்தனர். இது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.

ஒரு மாநிலத்தில் புகையிலைக்குத் தடை விதித்து மற்றொரு மாநிலத்தில் தடை விதிக்கப்படவில்லை எனில் அதனால் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை. ஒருமித்த நடவடிக்கை எடுப்பதன் மூலமே இதைத் தடுக்க முடியும் என்றார் அவர்.
dinamani

No comments:

Post a Comment