வாக்களிப்பதற்காக பணம் கொடுத்தாலோ, வாங்கினாலோ ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் எச்சரித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக சட்டமன்ற தேர்தலில், புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க முடியாது. அடையாள அட்டை இல்லாதவர்கள், தேர்தல் ஆணையம் வழங்கும் பூத் சிலிப்பை கொண்டு வாக்களிக்கலாம். இதுவரை 95 சதவீதம் பேருக்கு பூத் சிலிப் வழங்கிவிட்டோம். மீதமுள்ளவர்களுக்கு அவரவர் வாக்களிக்கும் வாக்குச்சாவடியில் நாளை (இன்று) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும். 100 சதவீதம் பேருக்கு பூத் சிலிப் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக இதுவரை 20 ஆயிரம் துணை ராணுவத்தினர் வந்துள்ளனர். மேலும், 4 ஆயிரம் துணை ராணுவத்தினர் 11ஆம் தேதி வருகின்றனர். இவர்கள் அனைவரும் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
வாக்களிப்பதற்காக பணம் கொடுப்பதும், பணம் வாங்குவதும் சட்டப்படி குற்றம். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 171 (இ) பிரிவின் கீழ் ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும். ஸ்ரீரங்கம் தொகுதியில் ஓட்டுக்காக பணம் கொடுத்த 7 பேரும், பணம் வாங்கிய 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பணம் கொடுப்பவர்களை மட்டுமல்லாமல், பணம் வாங்குபவர்களையும் சேர்த்து பிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் பணத்தைப் போட்டுவிட்டால் அந்தப் பணத்தை எடுத்து வைத்துக்கொள்ளாமல், காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அதன்மூலம் நல்ல குடிமகன் என்பதை நிரூபிக்கலாம். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கு வசதியாக இரவு நேரத்தில் வேண்டுமென்றே மின்தடை ஏற்படுத்துவதாக கூறப்படும் புகார் பற்றி விசாரிக்கப்படும். இதுதொடர்பாக மின்சார வாரியத் தலைவருடன் பேச இருக்கிறேன்.
வாகன சோதனையின்போது இதுவரை ரூ.29 கோடியே 93 லட்சம் ரொக்கப் பணம் பிடிபட்டுள்ளது. ரூ.11 கோடியே 39 லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் பிடிபட்டன. இதில், உரிய ஆவணங்களைக் காண்பித்ததால் ரூ.5 கோடியே 18 லட்சம் திருப்பி தரப்பட்டுவிட்டது. தற்போது திருச்சியில் அதிகளவு பணம் பிடிபட்டுள்ளது.
பகலில் மட்டுமல்லாமல் இரவு நேரத்திலும் வாகன சோதனையை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதை கண்காணித்து தடுக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளோம். தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு வாகன சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்படும். இனிமேல் நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமங்கள், குக்கிராமங்களுக்கும் அதிகாரிகள் சென்று பணம் விநியோகம் செய்யப்படுகிறதா என்று கண்காணிப்பார்கள். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 57 ஆயிரத்து 284 புகார்கள் வந்துள்ளன.
இந்த தேர்தலில், யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களுக்கு தனியாக படிவம் கொடுக்கப்படமாட்டாது. வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருக்கும் 17ஏ பதிவேட்டில், யாருக்கும் ஓட்டுப்போட விரும்பவில்லை என்று எழுதி கையெழுத்திடலாம்.
வாக்களிப்பவர்ககளும் இந்த பதிவேட்டில்தான் கையெழுத்திடுவார்கள். இந்த பதிவேட்டைக் கொண்டு ஒரு வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எத்தனை வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது கண்டறியப்படும். வாக்குச்சாடியில் பணியாற்ற வரும் ஊழியர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும்படி கிராம நிர்வாக அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளோம். இதில் எந்த குறைபாடும் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும். இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் சட்ட விதிமுறைகளின்படி எவ்வித பாகுபாடு இல்லாமல் செயல்படுகிறது என்று பிரவீண்குமார் கூறினார்.
No comments:
Post a Comment