islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

9/11 தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை: ஒபாமா


2001 செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர் திங்கள்கிழமை அளித்த பேட்டி: 9/11 தாக்குதலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள காலித் ஷேக் முகமது, வாலித் முகமது பின் அட்டாஷ், ரம்ஸி பின் அல் ஷிப், அலி அப்துல் அஜீஸ் அலி, முஸ்தபா அகமது அல் ஹவ்சவி ஆகியோர் மீது சிவில் நீதிமன்றத்துக்குப் பதிலாக ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 பேர் ராணுவ விசாரணையைத் தொடங்குமாறு பாதுகாப்பு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது அமெரிக்காவின் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும் என்று 2009-ம் ஆண்டு நவம்பரில் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது திடீரென ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதுகுறித்து எரிக் ஹோல்டர் கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது பெடரல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து எங்களது முடிவை மாற்றிக் கொண்டுள்ளோம்.

இந்த வழக்கின் துவக்கம் முதலே தேவையில்லாத சர்ச்சைகள் கிளம்பின. எனவே இந்த வழக்கில் அரசியல் முத்திரை குத்தப்படவேண்டாம் என நாங்கள் விரும்பினோம் என்றார் அவர். 9/11 தாக்குதல் தொடர்பாக 2003-ம் ஆண்டில் ஷேக் முகமது பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் கைது செய்யப்பட்டார். தாக்குதலில் ஈடுபட்டதாக தன்னைத் தானே அறிவித்துக் கொண்டவர் ஷேக் முகமது. அவருக்கு உதவியதாக மற்ற 4 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்கள் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அமெரிக்க அதிபரின் இந்த முடிவுக்கு குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். நீண்ட காலமாக நடந்து வரும் இந்த வழக்கு விசாரணை இதன் மூலம் துரிதமடையும். 9/11 தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு இதன்மூலம் தண்டனை கிடைக்கும். குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்காதா என்று ஏங்கியுள்ள தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்தார் இதன்மூலம் நிம்மதி அடைவர் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment