கட்டடங்களின் கூரையாகப் போட பயன்படுத்தப்படும் ஆஸ்பெஸ்டாஸ் நுரையீரல் புற்றுநோயை உண்டாக்குகிறது என்பது உறுதியாகத் தெரிந்துள்ளதால் அதன் பயன்பாட்டை இந்திய அரசு முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்று சுற்றுச் சூழல் நிபுணர்களும், அறிவியலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஆஸ்பெஸ்டாஸ் என்றழைக்கப்படும் மிருதுவான, நார் போன்ற இப்பொருள் சிலிகேட் கனிமப் பொருள் வகையைச் சார்ந்தாகும். இதனை கிரைசோலைட் என்றும் அழைக்கின்றனர். இந்த ஆஸ்பெஸ்டாஸ் பெரும்பாலும் கட்டடங்களின் கூரையாகவே பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு கூரையாக போடப்படும் ஆஸ்பெஸ்டாஸில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறும் நார்கள் சுவாசத்தின்போது நுரையீரலிற்குச் சென்று தங்கிவிடுகிறது. இதுவே நுரையீரல் புற்றுநோய் ஏற்படக் காரணமாகிறது என்று மருத்துவ அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆஸ்பெஸ்டாஸில் பல வகைகள் உள்ளன என்றாலும், அவை யாவும் ஆபத்தானவையே என்று கூறுகிறார் பேராசிரியர் எலிஹூ ரிச்டர். இவர் இஸ்ரேலின் ஹூப்ரூ பல்கலைக் கழகத்தின் மருத்துவத் துறை பேராசிரியராவார்.
நுரையீரல் புற்று நோய் மட்டுமல்ல, மீசோதேலியோமா எனும் மற்றொரு வகை புற்றுநோயையும் ஆஸ்பெஸ்டாஸ் உருவாக்கக் கூடியது என்கி்ன்றனர் மருத்துவர்கள். மனித உடலின் உள்ளுருப்புகளைச் சுற்றியிருக்கும் ஒருவித பாதுகாப்பு தோல் போன்றது மீசோதேலியம் என்பது. ஆஸ்பெஸ்டாஸில் இருந்து வெளியேறும் மெல்லிழை போன்ற நார்கள் உள்ளே சென்று இவற்றோடு ஒட்டிக்கொண்டு மீசோதேலியோமா (Malignant Mesothelioma) எனும் புற்று நோயை உண்டாக்குகின்றன என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
நுரையீரலுக்குள் மட்டுமின்றி, அதற்கு வெளியேயுள்ள வெற்றிடங்களிலும் ஆஸ்பெஸ்டாஸ் நார்கள் சென்று அடைந்துவிடும் என்றும், அதுவும் புற்றுநோயை உண்டாக்கவல்லது என்றும், இதனை மனிதனால் உண்டாக்கப்படும் கார்சினோஜன் என்றும் (கார்சினோஜன் என்பது உலகிலுள்ள எல்லா பொருட்களிலும் உள்ளதொரு, புற்றுநோயை உண்டாக்கவல்ல சத்தாகும்) புற்றுநோய் ஆய்விற்கான பன்னாட்டு முகமை (International Agency for Research on Cancer - IARC) கூறுகிறது.
No comments:
Post a Comment