குஜராத் மாநிலத்தில் காவிப் பயங்கரவாதிகளுடன் இணைந்து இசுலாமியர்களுக்கு எதிரான அரசு பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டு பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்த குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை பாராட்டியதன் விளைவாக சமூக சேவகர் அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
லஞ்ச ஊழலை கட்டுப்படுத்தும் முகமாக லோக்பால் மசோதாவை கொண்டு வரவேண்டும் என்று கோரி மத்திய அரசை வற்புறுத்தி உண்ணா நோன்பிருந்து அதில் வெற்றி கண்டுள்ள சமூக சேவகர் அன்னா ஹசாரே 'குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் சிறப்பாக செயல்படுவதாகவும், நன்றாக அமைந்துள்ள அவர்களது திட்டங்களை இதர மாநில முதல்வர்களும் பின்பற்ற வேண்டும்' என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காவிச்சிந்தனை கொண்ட நரேந்திர மோடியை பாராட்டிப் பேசியதன் விளைவாக குஜராத்தில் உள்ள அன்னாவின் ஹசாரே ஆதரவாளர்கள், சமூக சேவகர் மேதாபட்கர், காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங், செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அன்னா ஹசாரேவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து பிரபல சமூக சேவகர் மேதாபட்கர் கூறும்போது 'நரேந்திர மோடியை அன்னா ஹசாரே பாராட்டி பேசியதை ஏற்றுக் கொள்ள முடியாது; ஊழலுக்கு எதிராக போராடும் இந்த நேரத்தில் மோடியை பாராட்டியது தேவையற்றது' என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு விளக்கம் அளித்த ஹசாரே, நான் நரேந்திர மோடியின் வளர்ச்சி திட்டங்களையும், ஏழை மக்களுக்காக அவர் உருவாக்கிய திட்டங்களையும் தான் பாராட்டினேனே தவிர மதவாதத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன் என்று கூறினார். இவ்வாறு அவர் விளக்கம் அளித்த பிறகும் தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இதனையடுத்து அறிக்கை வெளியிட்டுள்ள ஹசாரே, தனது கருத்து குறித்து தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்ட பின்னரும் தன்னை விமர்சிப்பது தனக்கு வேதனை அளிப்பதாகவும், தொடர்ந்து வரும் விமர்சனங்களை பார்க்கும் போது நம்மிடையே கருத்து வேறுபாடு மற்றும் பிளவை ஏற்படுத்தி ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை சீர்குலைக்க முயற்சி நடப்பதாக தோன்றுவதாவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே, இந்த முயற்சிக்கு யாரும் இடமளிக்கக் கூடாது என்றும் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நமது இயக்கத்தை முன் நடத்தி செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்வதாகவும்; ஊழலுக்கு எதிரான நமது போராட்டம் சிறப்பான வெற்றி அடைந்துள்ள நிலையில் நமது சக்தியை ஒருபோதும் வீணடிக்காமல் ஒற்றுமையோடு செயல்பட்டால் ஊழலற்ற சமுதாயத்தை நிச்சயம் உருவாக்கலாம் என்று அவ்வறிக்கையில் ஹசாரே கூறியுள்ளார்.
inneram
No comments:
Post a Comment