islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

டாஸ்மாக் அருளும் இலவசங்கள்! தமிழகத்தை அழிக்கும் வக்கிரம்!!


இந்த தேர்தலில் ஜெயா தலைமையிலான எதிர்க்கட்சிகள் ” ஊழல் எதிர்ப்பு, குடும்ப ஆட்சி எதிர்ப்பு ” என்ற இரண்டு பிரச்சினைகளை வைத்து பிரச்சாரம் செய்கின்றன. ஆனால் ஊழலின் தோற்றுவாயான தனியார் மயம் குறித்து ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டிற்கும் எந்த வேறுபாடுமில்லை. இரண்டுமே அதை ஆதரிக்கின்றன.

ஜெயலலிதாவின் ஊழலை விட பன்மடங்கு பெரிய ஊழல்களைச் செய்து தன் குடும்ப பரிவாரங்களையெல்லாம் கோடீசுவரர்களாக்கி குடும்ப ஆட்சி நடத்தி வரும் கருணாநிதி (தலைமையிலான திமுக கூட்டணி) சென்ற தேர்தலின் போது இலவசத் திட்டங்களை அறிவித்து வெற்றி பெற்றது போல, இப்போதும் வெற்றி பெற பல புதிய கவர்ச்சிகரமான இலவசங்களை அறிவித்துள்ளார்.

ஏட்டிக்குப் போட்டியாக ஜெயலலிதாவும் இலவச திட்டங்களை அறிவித்துள்ளார். இந்த இலவசங்களையெல்லாம் தனது பரம்பரை சொத்திலிருந்தோ அல்லது மனைவி தயாளு அம்மையாரும் துணைவி ராஜாத்தி அம்மையாரும் கொண்டு வந்த தாய்வீட்டு சீதனத்திலிருந்தோ, அல்லது அவரது வாரிசுகள் வேலைக்கு சென்றோ, தொழில் நடத்தியோ ஈட்டிய பணத்திலிருந்தோ கொடுத்ததில்லை; கொடுக்கப் போவதில்லை. ஜெயாசசி கும்பலும் தாங்கள் கொள்ளையடித்த சொத்தை செலவு செய்து இலவசங்களை கொடுக்கப் போவதில்லை.

மாறாக இரண்டு வழிகளில் மக்களிடமிருந்து பணத்தை பறித்தெடுத்துத்தான் அந்தப் பணத்தைக் கொண்டுதான் இந்த “இலவசங்கள்” மக்களுக்கு வழங்கப்படுகின்றன. ஒன்று, டாஸ்மாக் சாராயக் கடைகள் மூலம் உழைக்கும் மக்களிடமிருந்து பணம் பறிக்கப்படுகின்றது. அரசு நிறுவனமான டாஸ்மாக் 1983-84இல் தொடங்கப்பட்டபோது, அதன் முதலீட்டுத் தொகை ரூ15 கோடி. அன்றைய ஆண்டு வருவாய் ரூ. 139 கோடி மட்டுமே. இன்றைய ஆண்டு வருமானம் மட்டும் ரூ. 15,000 கோடி. 25 ஆண்டுகளில் 107 மடங்கு வளர்ச்சி. இந்தியாவில் எந்த நிறுவனமும் இத்தகைய வளர்ச்சியை அடைந்திருக்காது.

மது விற்பனையை தனியார் மூலம் நடத்திய அரசு 2003&04இல் டாஸ்மாக் மூலம் நேரடி விற்பனையைத் தொடங்கியபோது கிடைத்த ஆண்டு வருவாய் ரூ. 2828 கோடி. 2009&10இல் இது ரூ. 12461 கோடியாக உயர்ந்து நடப்பாண்டில் ரூ. 15,000 கோடியைத் தாண்டி விட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரூ. 50,000 கோடிக்கு மேல் மது விற்பனை மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.

இந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு ரூபாய் அரிசித் திட்டத்திற்கு சுமார் ரூ. 15,000 கோடியும், இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டத்திற்கு ரூ. 4500 கோடியும் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் திட்டத்திற்கு ரூ. 650 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. (முகவை க. சிவகுமார், தினமணி, 1.3.2011). இன்னும் இருக்கின்ற பிற இலவச திட்டங்களுக்கும் சேர்த்துப் பார்த்தால் கூட கடந்த ஐந்தாண்டுகளில் கருணாநிதி அரசு வழங்கிய இலவச திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதி அதிகபட்சம் ரூ. 40,000 கோடியைக்கூட தாண்டாது. அரசுக்கு குறைந்தது ரூ. 10,000 கோடியாவது ஆதாயம் கிடைத்துள்ளது.

இன்னொரு பக்கம் மதுவை உற்பத்தி செய்யும் சாராய ஆலை அதிபர்கள் அடைந்த இலாபம் பல கோடிகள் இருக்கும். மதுவிற்பனையை தொடர்ந்து அனுமதித்ததற்காக சாராய ஆலை அதிபர்களிடமிருந்து கருணாநிதி குடும்பம் பெற்ற கட்டிங் எத்தனை கோடிகளோ! எல்லாவற்றையும் விட, டி.ஆர்.பாலு, ராஜாத்தி அம்மையார் போன்றோரே சாராய ஆலையையும் நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் வியாபாரம் மூலம் இவர்களுக்கும் நல்ல லாபம்!

“குடியின் போதையில் வாய்ச்சண்டை முற்றி அடிதடி கொலை, குடிப்பழக்கம் காரணமாக கடனாளியாகி குடும்பமே தற்கொலை, குடிபோதையில் மனைவி, குழந்தைகளை வெட்டிக் கொன்ற விவசாயி” என அன்றாடம் மூன்று நான்கு செய்திகள் பத்திரிகைகளில் வருகின்றன. அண்மைக் காலமாக பாதிக்கு மேற்பட்ட குற்ற நிகழ்வுகள் குடிபோதையினால் நடந்தவையே! அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் வரதட்சணையை விட குடிபோதையில் பெண்களை துன்புறுத்தும் கணவன்மார் மீதான புகார்கள் தான் மொத்தப் புகார்களில் 80% இருக்கின்றது.

நெடுஞ்சாலை விபத்துகள் பல குடிபோதையில் ஏற்படுபவையே! நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது வேகமாக வந்த சரக்கு ரயில் மோதியதன் விளைவாக ஏற்பட்ட ஒரு விபத்தில் 28 பேர் இறந்தனர்; 35 பேர் பலத்த காயமடைந்தனர்; இன்னும் பலருக்கு சிறுகாயங்கள்; விபத்துக்கு காரணம் சரக்கு ரயிலின் ஓட்டுனர் நினைவை இழந்து போகும் அளவுக்கு குடித்திருந்ததுதான் என்று பின்னர் நடந்த மருத்துவ ஆய்வு தெரிவித்தது. தொடர்ச்சியான மதுப்பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டு மரணம் அடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இவைகளின் காரணமாக தமிழ்நாட்டில் இளம் விதவைகளின் எண்ணிக்கை கணிசமான அளவு குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிகரித்துள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே குடிப்பழக்கம் அதிகரித்து வருகின்றது. இதனால் எதிர்கால தலைமுறையே சீரழிந்து நாசமாய் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குடிபோதையினால் ஏற்படும் உற்பத்தி இழப்பு, மரணங்கள் மூலம் இழப்பு, குடியினால் வரும் உடல்நலக் கேட்டிற்கு மருத்துவம் செய்ய செலவிடும் தொகை ஆகியவற்றைக் கணக்கிட்டால் மது விற்பனையில் வரும் வருவாயைவிட அதிகம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

‘குடி’மக்கள் குடிப்பதை நிறுத்தினால் அதனால் அவர்களின் குடும்ப சேமிப்பு நடக்கும். அல்லது குடிப்பதற்கு செலவிடப்படும் பணம் பிற பயனுள்ள பொருட்களை வாங்க பயன்படுத்தப்படும். இந்த விற்பனை மூலம் மறைமுக வரியாக அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் வருவாய் கிடைக்கும். பண்பாட்டு சீரழிவும் நோய்களும் மரணங்களும் குறையும்.

இவை பற்றியெல்லாம் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நன்கு தெரியும். ஆனால் எந்தக் கூட்டணியும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமுல்படுத்துவோம் என்று சொல்லவில்லை. மாறாக, போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் அறிவிக்கின்றன. இந்த இலவசத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமானால் தமிழச்சிகளை தாலியறுக்கும், இளைய தலைமுறையினரை சீரழிக்கும் டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். கூட்டணித் தலைவர்கள் நம்பியிருப்பது இதைத்தான்! அடுத்த ஐந்து ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கும் வருவாய் ஒரு இலட்சம் கோடி ரூபாய்களைத் தாண்டும் என்று அவர்களுக்கு தெரியும். அதில் அதிகபட்சம் 60&70%ஐ செலவழித்தாலே போதும், இந்த இலவசத் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்றும் அவர்களுக்கு தெரியும்.

சேவை வரி உள்ளிட்ட மறைமுக வரிகள் மூலம் உழைக்கும் மக்களின் வருமானத்தை பிக்பாக்கெட் அடிக்கின்றது அரசு; இந்த வரிகளும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. இதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய்களை மக்களிடமிருந்து பிடுங்கிக் கொள்கிறது அரசு.

சாராய விற்பனை டாஸ்மாக் மூலம் இளம் தமிழச்சிகளின் தாலியறுத்து, இளம் தலைமுறையினரையே சீரழித்து, சின்னாபின்னமாக்கி, குடிகார கணவன்களால் பெண்கள், குழந்தைகளின் மன அமைதியை இழக்க வைத்து, அவர்களை அன்றாடம் சித்திரவதைக்குள்ளாக்கி அந்த அவலம், சோகம், கண்ணீரிலிருந்து கறக்கப்பட்ட பணத்தைக் கொண்டு, பறி கொடுத்த மக்களுக்கு மிக்சி, கிரைண்டர், மடிக் கணினி போன்றவைகளை இலவசமாக தருவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? எவ்வளவு பெரிய கிரிமினல் குற்றம்? எவ்வளவு பெரிய கொடூரம்? பதவிக்கு வந்து மக்கள் பணத்தை பகற்கொள்ளையடிக்கவும் சாராய அதிபர்கள் பெரும் இலாபம் ஈட்டவும் கொடுக்கப்படும் இந்த இலவசங்கள் ஏதோ அந்தக் கூட்டணித் தலைவரின் தயாள குணத்திலிருந்து பிறந்த மக்கள் மீதான பாசம், பரிவு என்றெல்லாம் சித்தரித்து ஓட்டு கேட்பது எவ்வளவு பெரிய மோசடி? எவ்வளவு பெரிய பித்தலாட்டம்? எவ்வளவு பெரிய வக்கிரம்?

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் “மதுவிலக்கை அமுல்படுத்த போராடுவோம்” என்று அறிவித்துள்ளன. திமுகவுடனான கூட்டணி கொள்கைக்கான கூட்டணி அல்ல; இந்தக் கூட்டணிக்கென்று குறைந்தபட்ச பொதுத்திட்டம் எதுவும் இல்லை; வெறும் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் என்று கூறியுள்ளனர் பாமக தலைவர் இராமதாசு. அப்புறம் எப்படி இவர் சார்ந்துள்ள கூட்டணி வெற்றி பெற்றால் மதுவிலக்கை அமுல்படுத்தும்? இவர் சார்ந்துள்ள திமுக கூட்டணிகளில் காங்கிரசு, திமுக இரண்டும் உள்ளன. இரண்டும் மத்திய, மாநில அரசுகளை ஆள்பவை. இன்னும் பல கோடி மக்களை குடிபோதையில் ஆழ்த்தி பதவி ஆதாயம் தேடும் கட்சிகள்! இவர்களிடம் மதுவிலக்கை அமுல்படுத்தச் சொல்லி போராடுவாரா இராமதாசு; அப்படிப் போராடினால் கூட்டணியில் நீடிக்க முடியுமா?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியோ தேசிய அளவில் முழுமையான மதுவிலக்கை அமுல்படுத்த தொடர்ந்து வலியுறுத்தும் என்று தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கொடூர நகைச்சுவை என்று சொல்வார்களே அதற்கு தலைசிறந்த விளக்கமாக இவர்களின் இந்த தேர்தல் வாக்குறுதி இருக்கின்றது! தமிழ்நாட்டிலேயே கூரையேறாதவர்கள், தேசிய அளவில் வானமேறப் போகிறார்களாம்! நடக்க முடியாத, தாங்கள் வலியுறுத்த விரும்பாத மதுவிலக்கை தேசிய அளவில் அமுல்படுத்த வலியுறுத்துவதாக சொல்வது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்? மக்களை அந்த அளவிற்கு இளிச்சவாயன்களாக, ஏமாளிகளாக இவர்கள் கருதுகிறார்கள் என்பதுதான் இதன் பொருள். தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் சாராயம் குடிக்கக் கூடாது, குடிப்பவர்களை கட்சியில் சேர்க்க மாட்டோம் என்று அறிவிப்பார்களா? பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் 50% இட ஒதுக்கீடு கேட்டுப் போராடுவோம் என்று சொல்லும் இராமதாசு தனது வேட்பாளராக ஒரு பெண்மணியைக் கூட நிறுத்தவில்லை! இதுதான் இவர்களின் உண்மை முகம்! யோக்கியதை!!

எனவே இலவசங்களை எதிர்பார்த்து ஓட்டளிப்பதென்பது கடவுளின் அருளைப் பெறுவதற்காக தனது தலையில் தானே தேங்காய் உடைத்துக் கொள்வதற்கும், இரத்தம் பீறிட சாட்டையால் பளீர் பளீரென தன்னைத்தானே அடித்துக் கொள்வதற்கும், உடம்பெல்லாம் வெட்டுக்கத்தியால் தானே வெட்டிக் கொள்வதற்கு ஒப்பானதாகும். நமது ரத்தத்தை விலைபேசி அதன் மூலம் நமக்கு பிரியாணி தருவதாக கூறுவதுதான் இந்த தேர்தல். இலவசங்களின் பின்னே நாம் இழக்கப்போவது ஆரோக்கியமான தமிழ் மக்களின் எதிர்காலத்தை!
vinavu

No comments:

Post a Comment