டில்லியில் உள்ள திகார் சிறை, ஆசியாவின் மிகப் பெரிய சிறைச்சாலையாகும். இச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து, ஆயுதங்களை நூதனமான முறையில் கடத்தி வரும் சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகரித்துள்ளன.
நேற்று 4 கைதிகளுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின் இவ்வாக்குவாதம் முற்றி, நால்வரும் பிளேடால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில், படுகாயமடைந்த கைதிகள், அப்பகுதியில் உள்ள தீனதயாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்து "டிஸ்சார்ஜ்' ஆனார், எஞ்சிய மூவர், சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திகார் சிறையைப் பொறுத்தவரை, இதுபோன்ற அடிதடி சம்பவங்கள் அரங்கேறுவது சகஜமான ஒன்று. கடந்த மார்ச் மாதத்தில், விசாரணைக்காக கோர்ட்டுக்கு போலீஸ் வேனில் அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள் இருபது பேர், ஒருவரை ஒருவர் ஆபரேஷனுக்கு பயன்படும் பிளேடால் தாக்கிக் கொண்டனர். தடை செய்யப்பட்ட இது போன்ற ஆயுதங்கள், கைதிகளுக்கு எப்படி கிடைக்கிறது என்பது தான் போலீசாருக்கு புரியாத புதிராக இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், விசாரணைக் கைதி ஒருவர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறைக்கு அழைத்து வரப்பட்டார். சிறையின் பிரதான வாயிலில், வைக்கப்பட்டுள்ள மெட்டல் டிடெக்டர் வழியாக செல்ல அவர் மறுத்ததால், சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரது வாயை திறக்குமாறு கூறினர். அதற்கும் அவர் மறுக்கவே, கடும் போலீஸ் கவனிப்புக்குப் பின், ஒருவழியாக வாயை திறந்தார்.
அப்போது அவரது வாயில், ஆபரேஷனுக்கு பயன்படுத்தப்படும் பிளேடை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின் அவரது வயிற்றில் டேப்பால் சுற்றிவைத்து விழுங்கப்பட்ட மற்றொரு பிளேடையும், டாக்டர்கள் ஆபரேஷன் மூலம் வெளியில் எடுத்தனர்.
திகார் சிறையில் நடந்துவரும் நூதனமான பிளேடு கடத்தல் சம்பவங்கள், பலரையும் வியப்படையச் செய்துள்ளன.
inneram
No comments:
Post a Comment