நமக்குத் தெரியாமலேயே உலகில் பல ஆராய்ச்சிகள் நாள்தோறும் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு துறையைச் சேர்ந்த நிபுணர்கள் அவர்களுடைய துறையில் ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறார்கள். குழந்தைகள் நலப் பல் மருத்துவர் ஷரத் அசோகன் சென்னை மதுரவாயலில் உள்ள மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். அவர் செய்த ஆராய்ச்சியோ மிகவும் வித்தியாசமானது. தனது முனைவர் பட்ட ஆய்வுக்காக அவர் எடுத்துக் கொண்ட பொருள், வாயில் எண்ணெயை வைத்துக் கொப்பளிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றியது.
இந்தத் துறையில் ஆய்வு செய்தவர்களில் - செய்பவர்களில், வயதில் மிக இளையவன் என்று பெருமைப்படும் ஷரத் அசோகனுக்கு இப்போது வயது 32. இதைப் பற்றி ஆராய்ச்சி செய்த முதல் தமிழரும் அவர்தான்.
எவ்வளவோ ஆராய்ச்சிகள் இருக்க வாயில் எண்ணெயை வைத்துக் கொப்பளிப்பதைப் பற்றி ஏன் ஆராய்ச்சி செய்தீர்கள் என்ற கேள்வியுடன் தொடங்கினோம்.
""நமது நாட்டில் ஒன்றை நீண்டகாலமாகக் கடைப்பிடித்து வருவார்கள். ஒரு பொருளை நீண்டகாலமாகப் பயன்படுத்தி வருவார்கள். ஆனால் அதைப் பற்றி வெளிநாட்டுக்காரர்கள் அதைப் பற்றி ஆராய்ச்சி செய்து பெயர் வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள். உதாரணமாக மஞ்சளின் மருத்துவ குணங்கள் நமக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தெரியும். ஆனால் நாம் அதைப் பற்றி ஆராய்ந்து அறிவியல்ரீதியாக நிறுவவில்லை. வெளிநாட்டுக்காரர்கள் ஆராய்வதில் முந்திக் கொள்கிறார்கள்.
வாயில் எண்ணெயை வைத்துக் கொப்பளிப்பது நமது நாட்டில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருக்கிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் சரக ஸம்ஹிதை, அஷ்டாங்க ஹிருதயம் ஆகியவற்றில் இதைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. எனவே வாயில் எண்ணெயை வைத்துக் கொப்பளிப்பதை ஆராய்ந்து அறிவியல்பூர்வமாக அதை நிறுவ வேண்டும் என்று நான் நினைத்தேன். இதைப் பற்றி மேல்நாடுகளில் குறிப்பாக ரஷ்யாவில் டாக்டர் கராச் என்பவர் நிறையப் பேசி வருகிறார். தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு வாயில் எண்ணெயை வைத்துக் கொப்பளிக்கச் சொல்கிறார். இதன்மூலம் ஆஸ்த்துமா, சிறுநீரக, இதய நோய்கள் உட்பட பல நோய்களைக் குணப்படுத்த முடியும் என்பதை அனுபவப்பூர்வமாகச் சொல்கிறார். அவர் சொல்வதற்கு அறிவியல்பூர்வமான நிரூபணங்களை அவர் தராதநிலையில் நான் இத்துறையில் ஆராய்ச்சி செய்து அறிவியல்பூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தேன்'' என்கிறார் ஷரத் அசோகன்.
யாரை வைத்து ஆராய்ச்சி செய்தீர்கள்? எப்படி ஆராய்ச்சி செய்தீர்கள்? என்று கேட்டோம்.
""நான் சென்னை மதுரவாயலில் உள்ள மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறேன். இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள், விடுதியில் தங்கியுள்ளனர். அவர்களில் ஒரே வயதுடைய முப்பது பேரை எனது ஆராய்ச்சிக்காகத் தேர்ந்தெடுத்தேன். அவர்களை பத்துப் பேர் கொண்ட மூன்று பிரிவுகளாகப் பிரித்தேன். அதில் ஒரு பிரிவினரை மக்கள் பெருமளவில் பயன்படுத்துகிற மவுத் வாஷைப் பயன்படுத்தச் சொன்னேன். இன்னொரு பிரிவினரை வாயில் நல்லெண்ணெயை வைத்துக் கொப்பளித்துச் சுத்தம் செய்த பின்பு பல் துலக்கச் சொன்னேன். அடுத்த பிரிவினரை பல்துலக்க மட்டும் சொன்னேன்.
இந்த முப்பது பேரையும் ஆராய்ச்சிக்காகத் தேர்ந்தெடுக்கவே பல சோதனைகள் செய்ய வேண்டியிருந்தது.
அவர்களின் வாயில் உள்ள பற்களின் தன்மை, சொத்தை உள்ளதா? எந்த அளவுக்கு உள்ளது? வாயில் நோய்களை உருவாக்கும் கிருமிகள் எந்த அளவுக்கு உள்ளன? எனப் பல சோதனைகள் செய்த பின்னரே அவர்களை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தத் தேர்ந்தெடுத்தேன். இந்த ஆராய்ச்சியை ஆரம்பித்து ஓர் ஆண்டு கழித்து மீண்டும் சோதனை செய்து பார்த்தேன். அப்படிச் சோதனை செய்து பார்த்தபோது தெரிந்த உண்மைகள் என்னைப் பிரமிக்க வைத்தன'' என்கிறார் கண்களில் மகிழ்ச்சியுடன்.
என்ன உண்மைகள்? என ஆவலாகக் கேட்டோம்.
""வழக்கமாக எல்லாராலும் பயன்படுத்தப்படுகின்ற மவுத் வாஷை விட வாயில் எண்ணெயை வைத்துக் கொப்பளிப்பதால் வாய், பற்கள் மிகவும் சுத்தமாகிவிடுவது கண்டுபிடிக்கப்பட்டது. மவுத் வாஷைப் பயன்படுத்தியவர்களின் வாயில் உள்ள கிருமிகளை விட வாயில் எண்ணெயை வைத்துக் கொப்பளித்தவர்களின் வாயில் கிருமிகள் மிகக் குறைவாக இருந்தன. அப்படியானால் நல்லெண்ணெய்க்கு கிருமிகளைக் கொல்லும் திறன் இருக்கிறதா? என்று ஆராய்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தேன். அதற்கு எண்ணெயில் உள்ள மூலக்கூறுகளைப் பிரித்துப் பார்த்து அவற்றுக்கு கிருமிகளைக் கொல்லும் திறன் இருக்கிறதா? என்பதைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. சென்னை தரமணியில் உள்ள ஐபிஎம்எஸ் நிறுவனத்தின் உதவியோடு ஆராய்ந்து பார்த்ததில் நல்லெண்ணெய்க்குக் கிருமிகளைக் கொல்லும் திறன் இல்லை என்பது தெரிய வந்தது. அப்படியானால் நல்லெண்ணெயை வாயில் வைத்துக் கொப்பளித்தவர்களுக்கு கிருமிகள் இல்லாமற் போனது எப்படி? என்று தலையைப் பிய்த்துக் கொள்ள நேரிட்டது. நல்லெண்ணெயை வாயில் வைத்துக் கொப்பளிக்கும்போது அதில் சோப்பு போல உருவாகிறது. எண்ணெய் சிறு சிறு கொப்புளங்களாக உருமாறுகிறது. நுரை ஏற்படுகிறது. அந்த நுரையில் கலந்து வாயில் உள்ள அழுக்குகள் வெளியேறுகின்றன என்று பேராசிரியர்கள் டி.கே.ரத்தினசாமி, இன்பமணி ஆகியவர்களின் உதவியுடன் கண்டுபிடித்தேன். வாயில் எண்ணெயை வைத்துக் கொப்பளித்த பின்பு பல் துலக்கினால் கிருமிகள் வெளியேறிவிடுகின்றன. மேலும் நல்லெண்ணெய் சில பாக்டீரியாக்களை வாயில் ஒட்டவிடாது என்பதையும் கண்டுபிடித்திருக்கிறேன்'' என்கிறார்.
எந்தக் கண்டுபிடிப்பானாலும் நன்மைகள் ஏற்பட வேண்டும். உங்களுடைய இந்தக் கண்டுபிடிப்பினால் என்ன நன்மை? என்ற கேள்விக்கு, ""மவுத் வாஷ் பயன்படுத்துவதை விட நல்லெண்ணெயைப் பயன்படுத்தி வாய் கொப்பளிப்பது சிறந்தது என்று கண்டுபிடித்திருக்கிறேன். இதனால் நீங்கள் அதிக விலை கொடுத்த மவுத் வாஷ் வாங்கத் தேவையில்லை. ஏனென்றால் நல்லெண்ணெயைவிட மவுத் வாஷ் 4 - 5 மடங்கு விலை அதிகம். மவுத் வாஷைப் பயன்படுத்திய எனது மாணவர்களுக்குப் பற்களில் மவுத் வாஷின் நிறம் படிந்தது. நாக்கின் ருசியுணர்வு மாறிவிட்டது. இப்படிப்பட்ட கெடுதல்கள் எதுவும் வாயில் எண்ணெயை வைத்துக் கொப்பளித்தவர்களுக்கு வரவில்லை. இங்கே ஒன்றைச் சொல்ல வேண்டும். நல்லெண்ணெய் என்றதும் ரீபைன்ட் செய்யப்பட்ட நல்லெண்ணெய் என்று நினைத்துவிடாதீர்கள். ரீ பைன்ட் நல்லெண்ணெயில் வேதிப் பொருட்கள் உள்ளன. எனவே அதைப் பயன்படுத்தினால் வேறு சில பிரச்சினைகள் ஏற்படலாம். வாயில் வைத்துக் கொப்பளிப்பதற்கு ரீ பைன்ட் செய்யப்படாத நல்லெண்ணெய்யே சிறந்தது'' என்கிறார் ஷரத் அசோகன்.
வாயில் எண்ணெயை வைத்துக் கொப்பளிப்பதில் ஒரு பிரச்னை கூடவா ஏற்படவில்லை? என்றோம்.
""ஒரே ஒரு பிரச்னை இருக்கிறது. வாயில் எண்ணெயை வைத்துக் கொப்பளிக்க குறைந்தது 10 - 15 நிமிடங்கள் தேவைப்படும். இந்தக் காலத்தில் அவ்வளவு நேரம் யாருக்கு இருக்கிறது? என்று கேட்பார்கள். ஆனால் நாம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டும், வீண் அரட்டை அடித்துக் கொண்டும் ஒருநாளில் எவ்வளவு நேரத்தை வீணாக்குகிறோம் என்று பார்த்தால் இந்த 10 நிமிடம் உங்களுக்கு பெரிய நேரமாகத் தெரியாது'' என்ற ஷரத் அசோகனிடம், உங்களுடைய அடுத்த ஆராய்ச்சி என்ன? என்று கேட்டோம்.
""வாயில் எண்ணெயை வைத்துக் கொப்பளிப்பதால் ஆஸ்த்துமா நோய் குணமாகிறது என்று ரஷ்ய டாக்டர் கராச் அனுபவ அடிப்படையில் சொல்லி வருகிறார். அதை அறிவியல் அடிப்படையில் நிரூபிக்க ஆராய்ச்சி செய்வதே எனது அடுத்த திட்டம்'' என்கிறார் அந்த இளம் ஆராய்ச்சியாளர்.
kathir
No comments:
Post a Comment