islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

லிபியா தாக்கப்படுவது ஏன்?




லிபியாவில் மனித உரிமைகள் மீறப்பட்டன, பத்திரிகைகள் முடக்கப்பட்டன, காவல்துறையும் ராணுவமும் பொதுமக்களைச் சித்திரவதை செய்தன, கடாஃபி சொத்துகளைக் குவிக்கிறார். இவையெல்லாம்தான் சர்வதேச நாடுகளின் குற்றச்சாட்டுகள். இதே காரணங்களுக்காகத்தான் உள்நாட்டில் புரட்சி வெடித்து ஆயுதப்போர் நடந்து வருகிறது. புரட்சியை ஒடுக்குவதற்காக ராணுவத்தைப் பயன்படுத்தியதைக் காரணம்காட்டி, போர்தொடுப்பதற்கான தீர்மானத்தை எந்த எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்றியிருக்கிறது ஐ.நா.பாதுகாப்பு சபை. வழக்கமாக இதுபோன்ற தீர்மானங்களை தனது ரத்து அதிகாரத்தின் மூலம் தடுக்கும் சீனாவும் ரஷியாவும் கூட இந்த முறை மெüனமாக இருந்துவிட்டன.

விமானங்கள் பறப்பதற்குத் தடை என்கிற போர்வையில் இப்போது லிபியா மீது போர் தொடுக்கப்பட்டிருக்கிறது. விமானங்கள் பறப்பதற்குத் தடை என்றாலே, அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் போருக்குச் சமமாகத்தான் இருக்கும். வழக்கமான போர் அறிவிப்பு என்றால், அதில் அமெரிக்கா ஈடுபடுவதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்தி ஒப்புதல் பெற வேண்டும். விமானங்கள் பறக்கத் தடை விதிப்பது என்கிற குறுக்கு வழிப் போருக்கு அதெல்லாம் தேவையேயில்லை.

மனித உரிமை மீறல்களுக்காகவும், பொதுமக்கள் தாக்கப்படுவதற்காகவும்தான் போர் தொடுக்கப்படுகிறது என்றால், லிபியா மட்டும்தானா அப்படி இருக்கிறது? பல உதாரணங்கள் காட்ட முடியும்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் கிட்டத்தட்ட 6 மாதங்கள் நீடித்த உச்ச கட்டப் போரின் போது எந்த சர்வதேச அமைப்பும் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கவில்லையே? அப்போதெல்லாம் பொதுமக்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்ட செய்தி ஐ.நா. பாதுகாப்பு சபைக்கும், பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் எட்டவில்லையா? போர் தொடுப்போம் என்கிற மிரட்டல் கூட விடுக்காமல் வேடிக்கை பார்த்தது எவ்வளவு பெரிய பாரபட்சம், துரோகம்?

உலக நாடுகளைப் பொறுத்தவரை, ஈரான், வடகொரியா ஆகியவற்றைப் போல லிபியாவும் ரௌடி நாடுகளின் பட்டியலில்தான் வருகிறது. ஈரானைவிடவும், வடகொரியாவைவிடவும் ஐ.நா.வையும், அமெரிக்காவையும் மதிக்காத நாடுகள் இப்போதைக்கு இல்லை. அந்த நாடுகளில் மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன, தேர்தல்கள் முறையாக நடைபெறவில்லை, பத்திரிகைகள் செயல்பட அனுமதியில்லை, சர்வதேச சட்டங்கள் மதிக்கப்படுவதில்லை என்பன போன்ற புகார்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், லிபியா விவகாரத்தில் அவசரப்படும் அமெரிக்காவும் பிரான்ஸýம் அந்த நாடுகள்மீது போர் தொடுக்க முன்வரவில்லை. ஏனென்றால் அவர்கள் பலசாலிகள். அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகள். போர்தொடுத்தால் கற்பனை செய்து பார்க்க முடியாத விளைவுகள் ஏற்படும் என்பது, இப்போது லிபியாவுக்குள் ஊடுருவி இருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

லிபியாவும் ஒரு காலத்தில் அணுஆயுதத்தை தயாரிக்கும் பலத்துடன் இருந்த நாடுதான். 1975-ல் சாட் போரின்போது கடாஃபியால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் யுரேனியத் தாது கிடைத்ததாகவும், அதைச் செறிவூட்டுவதற்கு ஆர்ஜென்டீனா உதவியதாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஏ.க்யூ.கானின் அணுஆயுதக் கள்ளச்சந்தையில் லிபியாவுக்கும் பங்குண்டு என்றும் கூறப்பட்டது. ரஷிய உதவியுடன் மின்சாரம் தயாரிப்பதற்கான அணுஉலைகளையும் லிபியா அமைத்திருந்தது. 2007-ம் ஆண்டு வாக்கில் லிபியா அணுஆயுத நாடாக உருவெடுக்கும் என்று இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அனுமானிக்கப்பட்டது.

அப்படியொரு சூழலில்தான் அமெரிக்காவும் பிரிட்டனும் சேர்ந்து ரகசியப் பேச்சு நடத்தி தங்கள் வலையில் லிபியாவை வீழ்த்தின. பொருளாதாரத் தடைகளை விலக்கிக்கொள்கிறோம், ஆயுத சப்ளை செய்கிறோம் என்று வாக்குறுதி அளித்தன. அதை நம்பிய கடாஃபி, 2003-ம் ஆண்டில் சர்வதேச அணுசக்தி முகமையின் நிபுணர்களையும் அமெரிக்க அதிகாரிகளையும் சோதனைக்காக நாட்டுக்குள் அனுமதித்தார்.

உலக நாடுகள் மதிப்பிட்டதைவிட அதிநவீன தொழில்நுட்பங்கள் அந்நாட்டிடம் இருந்ததைப் பார்த்து அவர்களே அதிர்ந்து போனதாகக் கூறப்படுகிறது. அனைத்து அணு உலைகளும் அழிக்கப்பட்டு, ஒரு சரக்கு விமானத்தில் பேரழிவு ஆயுதங்கள் எல்லாம் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த நாளுடன் லிபியாவின் அணுஆயுதக் கனவு முடிவுக்கு வந்தது. வாக்குக் கொடுத்தபடி கண்ணியமாக நடந்து கொண்டீர்கள் என கடாஃபியை அமெரிக்காவும் பிரிட்டனும் பாராட்டின.

அது முடிந்து எட்டு ஆண்டுகள் கழிந்துவிட்டன. இதன் பிறகு இராக் போர் நடத்தப்பட்டது. அதில் ஈடுபட்டது மாபெரும் தவறு என்று கூறி பிரிட்டனில் லேபர் ஆட்சியும், அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் ஆட்சியும் அகற்றப்பட்டன. டேவிட் கேமரூனும் ஒபாமாவும் புதிய தலைவர்களாக உருவெடுத்தனர். ஆனால், அன்று எதை எதிர்த்தார்களோ அதையே இன்று இவர்களும் செய்கிறார்கள். இன்னொருபுறம், இதுவரை லிபியாவுக்கு ஆயுத சப்ளை செய்து கொள்ளை லாபம் அடைந்த பிரான்ஸ், இன்று கடாஃபி மீதான போரை முன்னின்று நடத்துகிறது.

எந்தக் காரணத்துக்காக லிபியா அன்று பாராட்டப்பட்டதோ அதுவே இன்று அந்நாட்டின் பலவீனமாகிப் போயிருக்கிறது. அணுஆயுதத் தயாரிப்பு நியாயமில்லை என்றாலும், ஒருவேளை சர்வதேச அணுசக்தி முகமை, ஐ.நா., அமெரிக்கா ஆகியவற்றின் பேச்சைக் கேட்காமல் அணுஆயுதத் தயாரிப்பைத் தொடர்ந்திருந்தால், ஈரானையும், வடகொரியாவையும் போல லிபியாவும் அச்சுறுத்தும் நாடாக உருவெடுத்திருக்கும் என்றே நினைக்கத் தோன்றுகிறது. இன்று வாட்டர்லூ போரை மறந்துவிட்ட சர்கோஸியின் படைகள், முதல் நாள் தீர்மானம் மறுநாள் போர் என்று அவசரகதியில் லிபியாவுக்குள் நுழைந்திருக்கவும் முடியாது.

கடாஃபி மீது கரிசனம் கொள்ளும் அளவுக்கு அவர் சிறந்த ஆட்சியாளர் இல்லையென்றே வைத்துக் கொண்டாலும், காஸ்ட்ரோ போலவும், சாவேஸ் போலவும் ஒரு தரப்பினரால் மதிக்கப்படும் தலைவர் என்பதை மறுக்க முடியாது. லிபியாவில் அவருக்கும் குறிப்பிடத்தக்க ஆதரவு இருக்கிறது. கிளர்ச்சியாளர்களின் மீதான தாக்குதலை நிறுத்துவதாகவும் பேச்சு நடத்த தயாராக இருப்பதாகவும் அறிவித்த பிறகும், ஒரு இறையாண்மை கொண்ட நாட்டுக்குள் அத்து மீறி நுழைந்திருப்பதன் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறைப் புரிந்திருக்கின்றன. இந்தியா இதை ஆதரிக்கவில்லை என்பது மட்டும் நமக்குத் திருப்தி.
dinamani

No comments:

Post a Comment