islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளை பழைய இரும்புக் கடையில் விற்ற ரெயில்வே நிர்வாகம்...





2007 ஆம் ஆண்டு பிப்ரவரியில் 68 பேரின் மரணத்திற்கு காரணமான குண்டுவெடிப்பு நிகழ்ந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகளை ரெயில்வே நிர்வாகம் பழைய இரும்புக் கடையில் விற்றதாக என்.ஐ.ஏ கண்டறிந்துள்ளது.




ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஓரளவு சேதமடைந்த இதர மூன்று பெட்டிகளை ரெயில்வே புதுப்பித்து உபயோகிக்கத் துவங்கியுள்ளது.

குண்டுவெடிப்புத் தொடர்பாக ஃபாரன்சிக் ஆதாரங்களை சேகரிக்க ஹரியானாவில் யமுனா நகருக்கு அருகிலுள்ள ஜகாத்ரிக்கு வருகைத் தந்த என்.ஐ.ஏ குழுவினருக்கு இத்தகவல் கிடைத்தது.

இந்தியாவில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட பல்வேறு குண்டுவெடிப்பு விசாரணைகளை பரஸ்பரம் இணைப்பதன் ஒரு பகுதியாக ஆதாரங்களை சேகரிக்க புலனாய்வுக் குழுவினர் இங்கு வருகைத் தந்தனர்.

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்ட சுவாமி அஸிமானந்தாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை முன்னேற்றமடையும் சூழலில் இத்தகையதொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

நடைபெறவிருக்கும் உள்துறை அமைச்சர்களின் சந்திப்பில் பாகிஸ்தான் இவ்விவகாரத்தை எழுப்பும் என கருதப்படுகிறது.

குண்டுவெடிப்பு நடந்த பெட்டியின் சிதிலங்களை பரிசோதித்து மக்கா மஸ்ஜித், அஜ்மீர், மலேகான் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளில் இதற்கான தொடர்பை கண்டறிவதற்குதான் ஃபாரன்சிக் பரிசோதனைக்கு என்.ஐ.ஏ திட்டமிட்டது. ஆனால், ரெயில்வே நிர்வாகம் அளித்துள்ள பதிலில், குண்டுவெடிப்பு நிகழ்ந்த இரண்டு பெட்டிகளும் பயன்படுத்த முடியாததாக மாறிவிட்டதால் அதனை பழைய இரும்பு கழிவுகளை வாங்கும் வியாபாரிகளிடம் விற்றுவிட்டதாக கூறியுள்ளது.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த பானிப்பட்டிற்கு அருகிலுள்ள திவானாவிலிருந்து ஐந்து பெட்டிகள் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டதாக ரகசிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பின்னர் இவை ஜக்ராதியில் வர்க்‌ஷாப்பிற்கு மாற்றப்பட்டது.

ஜக்ராதிக்குச் சென்ற என்.ஐ.ஏ புலனாய்வுக் குழுவிடம் முதன்மை மேலாளர் பினோத்குமார் பஸ்வான், ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டின் அனுமதியைப் பெற்ற பிறகே மூன்று பெட்டிகளை புதுப்பித்து உபயோகிக்கத் துவங்கியதாக தெரிவித்தார். ஆனால், கூடுதல் விசாரணக்கு சிதிலங்கள் தேவையில்லை என ஹரியானா போலீஸ் தெரிவித்ததைத் தொடர்ந்து இத்தீர்மானம் எடுத்ததாக ரெயில்வே நிர்வாகம் தெரிவிக்கிறது.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த இரண்டு பெட்டிகளை உடைத்து பிசிறுகளாக மாற்றி 2009-ஆம் ஆண்டிலேயே ஏலத்தில் விற்றதை ரெயில்வே நிர்வாகம் ஒப்புக்கொண்டதாக என்.ஐ.ஏவின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் பிரகாஷ் மிஷ்ரா தெரிவிக்கிறார்.

யமுனா நகரில் குஜ்ரால் ஸ்டீல் இந்தியா என்ற நிறுவனம்தான் ரெயில் பெட்டிகளை ஏலத்திற்கு எடுத்துள்ளது. அந்நிறுவனத்திடமிருந்து பெட்டியின் சிதிலங்களை கண்டறிய இயலுமா என்பது சந்தேகமே என மிஷ்ரா கூறுகிறார்.

இந்தியாவில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்புகளை பரஸ்பரம் தொடர்புபடுத்துவதற்கு சுவாமி அஸிமானந்தாவின் வாக்குமூலம் உதவும் என்றாலும், அதனை உறுதிச் செய்வதற்கு ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு சிரமம் ஏற்படும்.

ஃபாரன்சிக் ஆதாரங்கள்தாம் இவ்விவகாரத்தில் வலுவான ஆதாரமாக கருதப்படும் என்பதால், அதற்கான வாய்ப்பு மங்கியுள்ள நிலையில் வழக்கை பாதிக்கும் என என்.ஐ.ஏ கருதுகிறது. அதேவேளையில், இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் உள்பட 68 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த ஒரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஆதாரங்களை வழக்கு முடியும் முன்பே அழிப்பதற்கு போலீசும், ரெயில்வே நிர்வாகமும் துணை நின்றதில் மர்மம் நீடிக்கிறது.
thoothu

No comments:

Post a Comment