islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

கொள்கை மறந்த கூட்டணிகள்



தமிழ்நாட்டின் சட்டப் பேரவைத் தேர்தல் களைகட்டத் தொடங்கி விட்டது. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்தவுடன் அரசியல் கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கிவிட்டன. இடங்கள் ஒதுக்குவதில் முதலில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே பூசல் முளைத்தது.

÷தி.மு.க.வின் செயற்குழு அவசரம் அவசரமாகக் கூடியது. காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாட்டை முறித்துக் கொள்வது எனவும், மத்திய அரசின் அமைச்சரவையிலிருந்து விலகி விடுவதெனவும் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈழப் பிரச்னையில் பதவி விலகல் நாடகம் நடத்தியது போலவே இப்போதும் நடத்தப்பட்டு ஒரு முடிவுக்கு வந்தது. காங்கிரஸ் தாங்கள் கேட்ட 63 இடங்களையும் பெற்றுக்கொண்டது.

÷ஒருவாறு தி.மு.க. கூட்டணியில் குழப்பங்கள் முடிந்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் குழப்பம் தொடங்கியது. தே.மு.தி.க. மற்றும் இடசாரிக் கட்சிகளுக்கு இடஒதுக்கீடு எண்ணிக்கை முடிந்த நிலையில் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் அ.தி.மு.க. தலைமை, ஒருதரப்பாக 160 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதிர்ச்சியடைந்த தே.மு.தி.க.வும், இடதுசாரிகளும் மூன்றாவது அணியை உருவாக்குவார்கள் என செய்திகள் வெளியாயின; மக்களின் எதிர்பார்ப்பை மறுபடியும் பொய்யாக்கி, சமரசமும், சமாதானமும் செய்து கொள்ளப்பட்டுள்ளன.

÷தி.மு.க. ஆட்சியையும், அ.தி.மு.க. ஆட்சியையும் மாறி மாறிப் பார்த்துவிட்ட தமிழக மக்கள், இந்த இரண்டு கட்சிகளிடமும் நம்பிக்கை இழந்துவிட்டனர்; இந்த நிலையில் மூன்றாவது அணியை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அந்த இடத்தைப் பூர்த்தி செய்ய மற்ற எந்த அரசியல் கட்சியும் தயாராக இல்லை என்பதே பெரிய சோகம்.

÷""லஞ்சமும், ஊழலும் பெருத்துவிட்ட இந்த தேசத்தை மீட்டெடுத்து ஒரு தூய அரசியலை உருவாக்க யாராவது வர மாட்டார்களா?'' என்று எதிர்பார்த்திருக்கும் நல்லவர்களும், நடுநிலையாளர்களும் வெறுப்படைந்து போயினர். பெருந்தலைவர் காமராஜ் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று பேசியவர்களும், இரண்டு கட்சி ஆட்சிகளும் மக்களை ஏமாற்றிவிட்டன என்றும், தூய ஆட்சியைத் தருவதே தம் ஒரே கொள்கை என்றும் பேசிவந்த தே.மு.தி.க.வும் இந்த இரண்டு ஜோதிகளிலும் ஐக்கியமாகிவிட்டது. ÷இத்தனை ஆண்டுகளாக அரசியல் கட்சிகள் தங்கள் கொள்கைகளைக்கூறி, தனித்தனியாகப் போட்டியிட்டு வெற்றி,தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருந்தன. ஆனால், அண்மைக் காலமாக அரசியல் கட்சிகள் கூட்டுச் சேர்ந்து போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காரணம் என்ன? அரசியல் கட்சிகளின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அவர்களின் பேச்சும், செயலும் வேறுவேறு என்று தெரிந்து கொண்டனர். இவர்கள் எதிர்க்கட்சியாய் இருக்கும்போது மக்களுக்காகப் பேசுகின்றனர்; போராடுகின்றனர். ஆளும் கட்சியாய் வந்தவுடன் தங்களுக்காகவே திட்டமிட்டுச் செயல்படுகின்றனர் என மக்கள் தெரிந்து கொண்டனர்.

÷அரசியலில் பதவிகள், மேல் துண்டு போன்றது என்றும், கொள்கைகளோ கோவணம் போன்றது என்றும் தலைவர்கள் மேடைதோறும் பேசி வந்தனர். தேவை ஏற்பட்டால் பதவிகளைத் துறப்போமே தவிர, கொள்கைகளை விட்டுக்கொடுக்க ஒருக்காலும் சம்மதிக்க மாட்டோம் என்றும் உறுதி கூறினர். ஆனால், இப்போது கூட்டணி பேரத்தில் கோவணம் போன இடமும் தெரியவில்லை; கொள்கை போன இடமும் தெரியவில்லை.

÷"திராவிட நாடு திராவிடருக்கே' என்றும், "தமிழ்நாடு தமிழருக்கே' என்றும் பேசப்பட்ட கொள்கைகள் ஒரு தடைச் சட்டத்துடன் கைவிடப்பட்டன. அதன்பின், "மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்ற முழக்கம் எழுந்தது. அதைத் தொடர்ந்து, "உரிமைக்குக் குரல் கொடுப்போம்; உறவுக்குக் கை கொடுப்போம்' என்றனர். ஆனால், ஈழத்தில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது மத்திய, மாநில அரசுகள் அதைத் தடுக்க முயற்சி செய்யவில்லை. அந்த உள்நாட்டுப் போரைத் தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாக, அந்நாட்டு அரசுக்கு ஆயுதங்களும், ஆலோசனைகளும் அளிக்கப்பட்டனவே? இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்க இப்போது யாருக்கும் நேரம் இல்லை.

÷"அரசியல், அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்' என்று பெர்னாட்ஷா கேலியாகக் குறிப்பிட்டார். அதுவே உண்மை என்பதுபோல நல்லவர்கள் அரசியலைக் கண்டு ஒதுங்கி ஓடுகின்றனர். அரசியலில் இருக்கிற ஒரு சில நல்லவர்களும்கூட வேறுவழி இல்லாமல் பெயரளவில் இருந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் பேச்சுக்கு உள்கட்சியிலேயே மரியாதை இல்லை. இவர்கள் எல்லாக் கட்சிகளிலும் மிகச் சிலராக கேலிக்குரியவர்களாக இருப்பார்கள்.

÷தேசத்துக்காகவும், மக்களுக்காகவும் தியாகம் செய்தவர்கள் நிறைந்ததும், லஞ்சத்துக்கும், ஊழலுக்கும் அப்பாற்பட்ட கட்சியாகத் தெரிவதும் இடதுசாரிக் கட்சிகளே! இவர்களே மூன்றாவது அணியை உருவாக்கும் தகுதிபடைத்தவர்கள் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. அதை அவர்கள் செய்யாமல் காலத்தின் கட்டளையை வீணாக்கி விட்டனர்.

÷யானைக்குத் தன்பலம் தெரியாது. தெரிந்திருந்தால் ஒரு சாதாரண பாகனின் பேச்சைக் கேட்டுப் பிச்சை எடுக்குமா? இடதுசாரிக் கட்சிகளும் தம் பலத்தைத் தாங்களே அறியாமல் இரண்டு கட்சிகளுக்கும் மாறிமாறி பல்லக்குத் தூக்குகின்றனர். இதனால், இவர்கள் தங்கள் மரியாதையையும் இழந்துபோயினர்; எதிர்காலத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பையும் இழந்து போயினர். தன்னம்பிக்கையை இழந்துவிட்ட தனிமனிதனையும் சரி, கட்சிகளையும் சரி, யாராலும் காப்பாற்ற முடியாது.

÷"மிகப்பெரிய சிந்தனையாளர்கள் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவர மாட்டார்கள்' என்பது பொதுவிதி. மார்க்சிய சித்தாந்தங்களைக் கற்றவர்களும், மயிர் பிளக்கும் வாதம் செய்பவர்களும் நிறைந்த இடதுசாரிக் கட்சிகளின் நிலையே இதுவென்றால், மற்ற கட்சியினரைப் பற்றிக் கேட்க வேண்டுமா?

÷இந்தத் தேர்தல் நேரத்தில் ஜாதிக்கட்சிகளும் புற்றீசல்போல புறப்பட்டு வருகின்றன. இரண்டு பக்கங்களிலும் ஓடி கிடைத்தவரைப் பெற்றுக்கொள்வது மட்டுமே இவர்களின் ஒரே கொள்கை. எடுப்பது பிச்சை என்றாலும், பேசுவது வீரம்தான். தங்கள் ஜாதியினர் ஆண்ட பரம்பரை என்று ஆர்ப்பரிப்பார்கள். மக்களாட்சியில் மன்னர் பெருமை பேசுவது வேடிக்கையாக இருக்கும். அரசியல் இவர்களுக்குப் பாதுகாப்புக் கவசமாகும் என்பதால் இதை விட்டுக்கொடுக்க விரும்ப மாட்டார்கள்.

÷தேர்தலை ஒட்டி வெளியிடப்படும் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் அவர்களது வாக்குறுதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும். இதுவரை அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் மட்டும் நிறைவேற்றப்பட்டிருக்குமானால், இந்தியா எவரெஸ்ட் சிகரத்தைவிட உயர்ந்திருக்கும். அவ்வளவு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆசை வார்த்தைகளாகவே அவை முடிந்ததால் மக்களுக்கு இதில் ஆர்வம் ஏற்படவில்லை.

÷இந்தத் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையே முதலில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, இலவச எரிவாயு அடுப்பு என்பதுபோல, இம்முறை இலவச கிரைண்டர் அல்லது மிக்சி, பரம ஏழைகளுக்கு மாதம்தோறும் 35 கிலோ இலவச அரிசி, அரசுக் கல்லூரியில் தொழில்கல்வி பயிலும் முதலாண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி (லேப் டாப்) எனப் பல இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

÷கடந்த முறை வெற்றிக்கு இலவசத் திட்டங்கள் உதவியதுபோல இந்த முறையும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலவசத் திட்டங்களைப் பலரும் எதிர்த்தபோதிலும், "ஏழைகள் இருக்கும்வரை இலவசம் தொடரும்' என்று முதலமைச்சர் அறிவித்தது நினைவிருக்கலாம். அதன் தொடர்ச்சியாகவே இந்தத் தேர்தல் அறிக்கையும் அமைந்திருக்கிறது.

÷"இந்த இலவசத் திட்டங்கள் எல்லாமே மக்களின் வரிப்பணத்திலிருந்தே வழங்கப்படுகின்றன; அரசியல்வாதிகளின் சொந்தப் பணத்திலிருந்தோ, அரசியல் கட்சிகளின் பணத்திலிருந்தோ வழங்கப்படவில்லை என்னும்போது அவை எப்படி இலவசமாகும்?' என்று மக்கள் கேட்பதும் சரிதானே!

÷அரசியல் கட்சிகளின் கொள்கைகளுக்கும், தேர்தல் கால வாக்குறுதிகளுக்கும் வேறுபாடு உண்டெனினும், மக்களுக்கு இந்த வேறுபாடுகளைப் பகுத்துப் பார்க்க நேரம் இல்லை. "சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்' என்று சொல்வது மக்களைக் கவரப் பயன்படும். "ஏழ்மையை ஒழிப்போம்' என்பதும், "வறுமையே வெளியேறு' என்பதும் மக்கள் பலமுறை கேட்டு ஏமாந்ததுதான். என்றாலும், ஏழை மக்கள் ஏமாறுவது ஒன்றும் புதிதல்லவே!

÷இந்தக் கூட்டணிப் பேரத்தில் மனம் புண்பட்டு ம.தி.மு.க. தேர்தலைப் புறக்கணிப்பதாக முடிவு செய்திருக்கிறது. இது அரசியல் துறவறத்துக்கே வழிவகுக்கும். ஜாதி, சமயக் கட்சிகளும், நேற்றைக்குப் பிறந்த கட்சிகளும் கூட்டணியில் இடம்பிடித்துவிட்ட நிலையில், பல ஆண்டுகளாக அ.தி.மு.க.வுக்கு விசுவாசமாக இருந்த ம.தி.மு.க.வுக்கு இடமில்லை என்பது பரிதாபகரமானது. கொள்கைகளை மறந்து எதிரிக்கும் எதிரி நண்பன் என அரசியல் நடத்துபவர்களின் நிலை இதுதான்.

÷விசுவாசிகளுக்குச் சுயமரியாதை தேவையில்லாதது என்பது இதன்மூலம் தெளிவாகிறது. "விசுவாசமா? சுயமரியாதையா? இரண்டுமா?' என்ற பெரும் போராட்டத்தில் தவித்த அக்கட்சியைக் கூட்டணியின் பிற கட்சிகள் கண்டு கொள்ளாதது ஏன் என்பது தெரியவில்லை. "தங்கள் பிரச்னையே தலைக்கு மேல் இருக்கும்போது இதில் போய் தலையிடுவதா?' என்று எண்ணியிருக்கக் கூடும். ÷"கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதுபோல சுயமரியாதையை இழந்து பதவியைப் பெறவேண்டிய தேவை இல்லை' என்று அறிக்கை கூறுகிறது. "இது அதன் தலைவருக்கு ஏற்ற முடிவாக இருக்கலாம்; தொண்டர்களுக்கு ஏற்ற முடிவாக இருக்குமா?' என்ற கேள்வி எழுகிறது. எப்படியிருப்பினும், அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தைப் புறக்கணித்தல் அக்கட்சிகளைத் தற்கொலைக்கே இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

÷தேர்தல்களம் தினமும் எத்தனையோ மேடுபள்ளங்களைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறது. "அரசியலில் நிரந்தரமான நண்பர்களும் இல்லை; பகைவர்களும் இல்லை' என்பதே நமது நிலையான கொள்கையாகும். எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்பது தாற்காலிகக் கொள்கையாகும்.

÷திருமண ஆரவாரத்தில் தாலிகட்ட மறந்துவிட்டதாக ஒரு பழமொழி உண்டு. இது வேடிக்கையாகக் கூறப்பட்டாலும் அதில் பொருள் இல்லாமல் இல்லை. இந்தத் தேர்தல் நேரத்தில் இது மிகவும் பொருத்தமாகவும் இருக்கிறது. கூட்டணி அமைக்கும் அவசரத்தில் எல்லாக் கட்சிகளும் கொள்கையை மறந்துவிட்டன.

÷இப்போது இவர்களுக்கு இருப்பது ஒரே கொள்கைதான்; அதிக எண்ணிக்கையில் இடம் ஒதுக்குகிறவர்களுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளுவதே கொள்கையாகி விட்டது; இந்தக் கொள்கையும் இந்தத் தேர்தல் முடியும் வரைதான்.
dinamani

No comments:

Post a Comment