பிரான்ஸில் சந்தேகத்தின் பேரில் கைதான மேலூரைச் சேர்ந்த பொறியாளர் முகமது நியாஸ் எந்தத் தீவிரவாத இயக்கத்துடனும் தொடர்பு இல்லாதவர்; அவரை பிரான்ஸிலிருந்து மீட்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தாயார் பாத்திமா தெரிவித்தார்.
பிரான்ஸ் விமான நிலையத்தில், சிமி இயக்கத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் முகமது நியாஸ் உள்ளிட்ட சிலரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து பிரான்ஸ் போலீஸார் அளித்த தகவலின் பேரில், மத்திய தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுதொடர்பாக மதுரை மாவட்டம், மேலூர் சந்தைப்பேட்டை தெருவில் வசித்துவரும் முகமது நியாஸின் தாயார் பாத்திமா செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
"என் கணவர் அப்துல் ரஷீத், மதுரையில் உள்ள தனியார் நூற்பாலையில் துணை மேலாளராகப் பணிபுரிந்தவர். இப்போது கத்தார் நாட்டில் வேலை செய்து வருகிறார்.
எங்கள் மகன் முகமது நியாஸ், மதுரை மேலப்பொன்னகரத்தில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்தார். பின்னர் கீழக்கரை பாலிடெக்னிக்கில் படித்தார். திருச்சி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பொறியாளர் பட்டம் பெற்றார். பின்னர் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றுவிட்டார்.
அவருக்கும் தீவிரவாத இயக்கத்துக்கும் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுவது சரியல்ல. அவருக்கு தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பது தெரியவந்திருந்தால் நாங்களே போலீஸில் ஒப்படைத்து இருப்போம். எவ்விதமான குற்றச் செயலிலும் என் மகன் ஈடுபட்டது இல்லை.
ஏற்கெனவே, மத்திய புலனாய்வுப் பிரிவு போலீஸார் கடந்த ஜனவரி மாதம் எங்களிடம் விசாரித்தனர். குடும்ப அட்டை, பாஸ்போர்ட்டையும் ஆய்வு செய்தனர். அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகத் தெரிந்திருந்தால் அப்போது வெளிநாடு செல்ல அனுமதி கிடைத்திருக்குமா?
புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரித்தபோது, என் மகன் இங்குதான் தங்கியிருந்தார். அப்போது, இன்டர்நெட் மூலம் ஹபீப்புன்னிஸா என்ற பெண்ணை பார்த்ததாகவும் அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறினார். ஆனால், நாங்கள் மறுத்துவிட்டோம்.
எந்தவிதமான குற்றச் செயலிலும் தொடர்பு இல்லாத என் மகனை பிரான்ஸ் போலீஸாரிடமிருந்து மீட்க பிரதமரும், உள்துறை அமைச்சரும் விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றார் அவர்.
ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் தீவிரவாதி என கைது செய்யப்பட்ட பெங்களூரை சார்ந்த டாக்டர் ஹனீஃப் பின்னர் குற்றமற்றவர் என தெரியவந்து அந்நாடு விடுதலை செய்தது. ஹனீஃபின் நிலைமை தான் நியாஸிற்கு ஏற்பட்டிருக்குமோ என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது
No comments:
Post a Comment