islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

பி.இ. கலந்தாய்வு: 4 இடங்களில் நடத்த திட்டம்: தமிழக அரசு



பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை சென்னை உள்பட 4 இடங்களில் நடத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.


கலந்தாய்வு நடைமுறைகளை, தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்தின் கீழ் கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலான இடங்களில் ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்த கலந்தாய்வை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 484 பொறியியல் கல்லூரிகளுக்குமான மாணவர் சேர்க்கை, இந்த ஒரு மையத்தின் மூலமே நடைபெற்று வருகிறது.

இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்தாய்வில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வருவது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக, பெற்றோர் அவ்வப்போது புகார் தெரிவித்து வருகின்றனர். நீண்ட தொலைவில் இருந்து வருபவர்கள், சென்னையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாள்கள் தங்கியிருந்து, கலந்தாய்வில் பங்கேற்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இதனால் பொருள் செலவும் ஏற்படுவதாக பெற்றோர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சிரமங்களை நீக்கும் வகையில், பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை சென்னையில் மட்டுமல்லாமல், மாநிலத்தின் மேலும் சில இடங்களில் நடத்த வேண்டுமென பெற்றோர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வை பல இடங்களில் நடத்துவது என்பது, தேவையற்ற கால விரயத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும். கலந்தாய்வை ஒரே இடத்தில் நடத்துவதுதான் சிறந்தது என்று கூறி, பெற்றோரின் கோரிக்கையை அதிகாரிகள் நிராகரித்து வந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசு, பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை சென்னையில் மட்டும் அல்லாமல் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் நடத்த, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், கலந்தாய்வு நடைமுறைகளை, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் அல்லாமல், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்தின் கீழ் கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை நடத்தி வருவதாக அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டைக் காட்டிலும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பங்கள் விநியோகிக்கத் தொடங்கிய 10 நாள்களில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 2 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. எனவே சென்னையில் மட்டுமின்றி மேலும் சில பகுதிகளில் கலந்தாய்வை நடத்துவதே சிறந்தது என சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் உயர் அதிகாரிகள் கூறியது:

பொறியியல் கலந்தாய்வுக்கு, குறைந்த நாள்களே உள்ளன. விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 3. அதன் பிறகு ஒரு சில நாள்களில் ரேண்டம் எண் வெளியிடப்பட்டு விடும். தொடர்ந்து ரேங்க் பட்டியல் தயாரிப்பது என அடுத்தடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஜூன் மூன்றாம் வாரம் முதல் கலந்தாய்வும் தொடங்கி விடும்.

குறைந்த கால அவகாசமே உள்ள நிலையில், கலந்தாய்வை சென்னையில் மட்டும் அல்லாமல் மேலும் சில இடங்களில் நடத்துவது என்பது நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தும். தேவையற்ற குழப்பமும் ஏற்படும் என்றனர்.

6 ஆண்டுகளுக்கு முன்பு... கடந்த 2004- 05 ஆண்டுகளில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒற்றைச் சாளர முறையில் அல்லாமல் 4 மையங்களில் நடத்தப்பட்டன.

ஆனால் பல்வேறு காரணங்களால் தேவையற்ற தாமதமும், குழப்பங்களும் ஏற்பட்டு வந்தன. எந்தக் கல்லூரியில் இடம் உள்ளது என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ள நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக ஒற்றைச் சாளர முறை மீண்டும் செயல்படுத்தப்பட்டு ஒரே மையமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இப்போது கலந்தாய்வு செயல்பாடுகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுவிட்டதால் சில நொடிகளிலேயே கல்லூரிகளில் இடம் உள்ளதை அறிந்து கொள்ள முடியும். எனவே முன்பு உள்ளது போல் 4 மையங்களில் நடத்துவதால் காலவிரயம் ஏற்படாது என கல்வியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
dinamani

No comments:

Post a Comment