islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

'நடிகர்' சச்சினுக்கு வரிச் சலுகை -வருமானவரித் துறையின் 'அபார' லாஜிக்



நம் இந்திய நாடே சச்சின் டெண்டுல்கரை ஒரு மகான் கிரிக்கெட் வீரராக, கிரிக்கெட் கடவுளாக அபத்த வழிபாடு செய்துவருகிறது. ஆனால் சச்சின் டெண்டுல்கரோ தான் ஒரு கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல ஒரு நடிகர் அல்லது கலைஞர் என்று கூறி வரிச்சலுகை பெற்றுள்ளார். எதற்கு? தான் கோடி கோடியாக பணம் ஈட்டும் விளம்பர வருவாய்க்குத்தான் அவர் வரிச்சலுகை பெற்றுள்ளார்.


இந்தச் சலுகை மூலம் நாட்டிற்கு வருவாய் இழப்பு சுமார் ரூ.5 கோடி!

நாளை ஊழல்வாதிகளுக்கெல்லாம் அவர் ஊழல் செய்த பணத்திலிருந்து 50% வரிச்சலுகை அளிக்கப்படும் என்று ஒரு அபத்த அறிவிப்பை நம் அரசு செய்தால், பலர் தானும் ஊழல் செய்பவர்கள்தான் என்று கூறி வரிச்சலுகை பெறுவார்கள் போலும்! நம் நாட்டில் இப்படியெல்லாம் நடக்காது என்று நாம் எந்த ஒரு அக்கிரமத்தையும் ஒதுக்கி விட முடியாது.

இதற்கு நம் நாட்டின் வருமான வரித்துறையின் இருநபர் ஆணையம் வரிச்சலுகை அளிக்க ஒப்புக் கொண்டுள்ளது ஒன்றும் நமக்கு ஆச்சரியமில்லை. ஆனால் அதற்கு அவர்கள் கொடுக்கும் விளக்கம் ஒரு சிறந்த நகைச்சுவை.

அதாவது சச்சின் டெண்டுல்கர் விளம்பரங்களில் தோன்றும்போது கேமரா முன்னாலும் லைட் வெளிச்சம் முன்னாலும் நிற்க வேண்டியிருக்கிறது. அதாவது ஒரு 'மாடல்' என்ற விதத்தில் அவர் தன் தொழிலுக்கு ஒரு படைப்பு பூர்வமான கற்பனையையும் செலவழிக்கிறாராம், மேலும் கலாபூர்வமான கூறுகளை ஒன்றிணைத்து மானுட புலன்களிலும், உணர்வுகளிலும் தாக்கம் செலுத்தும் அழகியல் மதிப்பு விளம்பர நடிப்புக்கு உள்ளதாம்! இதுதான் அந்தத் தீர்ப்பாயத்தின் வரிச்சலுகைக்கான நகைச்சுவை நியாயம்!

பெப்சி கோலா குடியுங்கள் என்று சச்சின் டெண்டுல்கர் விளம்பரத்தில் கூறும்போது இந்தியர்களின் புலன்களும், உணர்ச்சிகளும் தாக்கம் பெற்று மக்கள் அழகியல் உணர்வில் தத்தளிக்கிறார்கள் போலும்! நம் வருமான வரித்துறையினருக்கு என்னே ஒரு கலை, அழகியல் உணர்வு!

மேலும் ஒவ்வொரு மனிதனுக்கும் அல்லது இந்த விஷயத்தில் ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்கும் கூட இந்த அளவுக்கு படைப்பூக்கம் இருக்குமா என்பது சந்தேகமே. அதாவது கேமராவையும் லைட் வெளிச்சத்தையும் எதிர்கொள்ளும் திறமை, இருப்பதில்லையாம்! இவ்வாறும் கூறியுள்ளது அந்தத் தீர்ப்பாயம்.

எனவே ஒரு கலைஞராக சச்சின் டெண்டுல்கரை ஏற்றுக் கொண்டு அவருக்கு ஒரு நடிகருக்கான வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. முத்தாய்ப்பாக அந்தத் தீர்ப்பாயம் இவ்வாறு கூறியுள்ளது.

இப்போது இந்தியாவில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலக் கட்டம், 2ஜி ஸ்பெக்ட்ரம் மகா ஊழல், காமன்வெல்த் கல்மாடி கூட்டணி ஊழல், ஆதர்ஷ் ஊழல், சுவிஸ் வங்கியில் கோடிகோடியாக கொட்டிக் கிடக்கும் கறுப்புப் பணம், ஊழல் பணம் இன்னும் என்னென்னவோ ஊழல், கொள்ளை என்ற காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம்.
இதில் பிடிபட்டவர்கள் அனைவரும் கேமரா முன் கொண்டு வரப்படுகிறார்கள். அவர்களும் அபாரமாக சிரித்துக் கொண்டே தங்களது சொந்த நடிப்புத் திறமையை பயன்படுத்தி 'மானுட புலன்கள்' மற்றும் 'உணர்வுகளில்' தாக்கம் செலுத்துகிறார்கள், இதே அடிப்படையில் அவர்களையும் நடிகர்களாக பாவித்து வரிச்சலுகை வழங்கலாமே. தண்டனை என்றைக்குக் கிடைக்கப்போகிறது? வரிச்சலுகையையாவது இவர்களுக்கெல்லாம் அளித்து நம் நாடே ஒரு அழகியல், கலை மதிப்பை வளர்த்தெடுக்கும் நாடு என்ற பெயர் எடுக்கலாமே!

நாம் உடனே ஒரு வாதம் செய்வோம். நாட்டில் அவனவன் மக்களுக்கு ஒன்றுமே செய்யாமல் கோடி கோடியாக கொள்ளை அடிக்கிறார்கள். இதில் சச்சின் டெண்டுல்கருக்கோ, தோனிக்கோ விளம்பர வருவாய்க்கு வரிச்சலுகை அளிப்பதில் என்ன சார் குடி மூழ்கிவிடப்போகிறது? இவர்கள் நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடுபவர்கள், இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பவர்கள் என்றெல்லாம் நம் மத்திய தர வர்க்க அசட்டு உணர்ச்சிகளை பெரிய அறிவு ரீதியான பார்வையாக நாம் முன்வைப்போம்.

இந்த படித்த மத்திய தர வர்க்க ஜீவிகள் எத்தனை பேருக்கு பொருளாதார ஆய்வாளர் பி.சாய்நாத் எழுதிய கட்டுரை தெரியவந்திருக்கும்? தெரியவந்தாலும் 'இந்தாளுங்களுக்கெல்லாம் இதுதான் வேலை' ஆக்கபூர்வமாக எதையும் இவர்கள் செய்ய முடியாது, எப்போதும் குறை கண்டே வாழ்பவர்கள்' என்று கூறி முற்றிலும் ஒதுக்கி விடும் ஒரு அராஜக மனப்போக்கையும் நாம் பார்த்து வருகிறோம்.

இந்திய நிதிநிலை அறிக்கையின் படி நாளொன்றுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து அரசுக்கு வரவேண்டிய வருமான வரி பாக்கி ரூ.240 கோடி. ஆனால் இதுவரை வசூலிக்க முடியாதவை என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

2005- 06ஆம் ஆண்டு முதல் கடந்த 6 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து அரசுக்கு வரவேண்டிய ரூ.3,74,937 கோடி வருமான வரி அடுத்தடுத்த நிதிநிலை அறிக்கைகளில் வராதா வரியாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது ஸ்பெக்ட்ரம் ஊழலினால் ஏற்பட்ட வருவாய் இழப்பை விட இரு மடங்கு அதிகம் என்று குறிப்பிடுகிறார் சாய்நாத்.

இது தவிர ஆயத்தீர்வை, சுங்கவரிகளில் அரசு விட்டுக் கொடுக்கும் சலுகைகள் சொல்லி மாளாத வகையில் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் வைரம், தங்கம், தங்க நகைகளுக்கான சுங்கவரி வராக்கடன் என்ற வகையில் தள்ளுபடி மாத்திரம் ரூ.95,765 கோடி.

இது தவிர இயந்திரங்கள் இறக்குமதி என்ற தலைப்பிலும் ஏகப்பட்ட சுங்கவரிச்சலுகைகள் வழங்கப்பட்டு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது மத்திய அரசு.

சுங்கவரி வராக்கடன் வருவாய் இழப்பு மட்டும் ரூ.1,98,291 கோடி என்று அந்தக் கட்டுரையில் சாய்நாத் குறிப்பிட்டுள்ளார். மொத்தமாக வராத வரி, வரிச்சலுகை ஆகியவற்றினால் வருவாய் இழப்பு மட்டும் ரூ. 22 லட்சம் கோடி! ஆஹா! ஏழைகளின் நலன்களுக்காக நம் அரசு என்னமாய் உழைத்து வருகிறது!

இந்த வரிச்சலுகையெல்லாம் விலைக்குறைப்பு என்ற அளவில் மக்களுக்காகச் செய்யப்படுவதே என்று பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், மன்மோகன் சிங், கபில் சிபல் ஆகியோர் கூறலாம்.

No comments:

Post a Comment