islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

இன்று பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்: வேலைவாய்ப்புக்காக பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய ஏற்பாடு- முதல்வர் உத்தரவு


பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவ, மாணவியருக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் புதன்கிழமை வழங்கப்படுகின்றன. இந்த சான்றிதழ்களை வேலைவாய்ப்புக்காக பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பிளஸ் 2 தேர்ச்சிப் பெற்றவுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணி மூப்பு தகுதி உடனடியாகக் கிடைக்க வேண்டும் என வேலைவாய்ப்பு அலுவலகங்களை மாணவ, மாணவியர் நாடுகின்றனர்.

தேர்ச்சிபெற்ற அனைவரும் வேலைவாய்ப்பு அலுவலகங்களை அணுகுவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. கால விரயம், போக்குவரத்து செலவு ஆகியவற்றால் மாணவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

இந்தப் பிரச்னை எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டவுடன், அதனைத் தீர்க்கும் வகையில் மதிப்பெண் பட்டியலை பள்ளியில் பெறும் நாளிலேயே, மாணவ, மாணவியர் பயிலுகின்ற பள்ளிகளில் ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய ஆணையிட்டுள்ளேன்.

அதன்படி, 2011-ல் பிளஸ் 2 தேர்ச்சியடைந்த அனைத்து மாணவ, மாணவியர்களும் பள்ளியிலிருந்தே தங்களது கல்வித் தகுதியை ஆன்-லைன் மூலம் பதிவு செய்யலாம்.

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் மே 25 (புதன்கிழமை) முதல் வழங்கப்படுகிறது. மே 25 முதல் 15 நாள்களுக்குள் அந்தந்த பள்ளியிலேயே மாணவ, மாணவியர் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து, வேலைவாய்ப்பு பதிவு அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு 15 நாள்களில் பதிவு செய்யும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் மே 25-ம் தேதியிட்ட பதிவு மூப்பு வழங்கப்படும்.

இந்தப் பணியை பள்ளிக் கல்வித் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் எல்காட் நிறுவனம் ஆகியவை இணைந்து செய்யும்.

மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்காக வரும்போதே, மாணவ, மாணவியர் தங்களது பெயர் இடம்பெற்றுள்ள குடும்ப அட்டை, குடும்ப அட்டையின் நகலினை தவறாது எடுத்து வந்து கல்வித் தகுதியையும் பதிவு செய்து கொள்ளலாம்.

அவர்களுக்கான பதிவு எண் பதிவு செய்யும் நாளன்றே வழங்கப்படும்.

பத்தாவது கல்வித் தகுதியினை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கெனவே பதிவு செய்தவர்கள் அதற்கான வேலைவாய்ப்பு அடையாள அட்டையினையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் இருப்பின் தங்களுடைய கல்வித் தகுதியை பள்ளியில் பதிவு செய்த பின்னர் தங்கள் முன்னுரிமையை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

படித்த பள்ளியிலிருந்தே ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் வசதி இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது.

புதன்கிழமை முதல் 15 நாள்கள் வரை ஆன்-லைன் பதிவு அமலில் உள்ளதால் இந்த வாய்ப்பை மாணவர்கள் தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment