சேலத்தில் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களில் 17 பேர் தற்போது இன்ஜினியரிங் படித்து வருவதாக ஸ்மைல் திட்ட இயக்குநர் தெரிவித்தார்.
தேசிய குழந்தைத் தொழிலாளர் (ஸ்மைல்) தடுப்பு திட்டத்தின் சார்பில், குழந்தைகளை வேலைக்கு அமர்த்தக்கூடாது, கல்வி கற்பித்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சேலத்தில் 3நாட்கள் விடியல் கலைக்குழுவினர் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய உள்ளனர். பிரசார பரப்புரையை சேலம் மாவட்ட ஆட்சியர் சந்திரகுமார் துவக்கி வைத்து, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் மற்றும் போஸ்டர்களை வெளியிட்டார். சேலம் மாவட்டத்தில் ஸ்மைல் பணிகள் குறித்து திட்ட இயக்குநர் விஸ்வநாதன் கூறியதாவது:கடந்த 10வருடங்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 25ஆயிரம் என்று கணக்கிடப்பட்டது. விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் காரணமாக இந்த எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. செவ்வாய்ப்பேட்டை, திருமலைகிரி, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, தாரமங்கலம் என்று பல்வேறு பகுதிகளில் மீட்கப்பட்ட 3800 பேர் ஸ்மைல் சிறப்பு பள்ளிகளில் 6ம்வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். 95பேர் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இதில் 17பேர் இன்ஜினியரிங் படித்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் அதிகமாக உருவாவதற்கு வாய்ப்புள்ள பகுதியாக சேலம் இருக்கிறது. ஆனாலும் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வில் முதலிடத்தில் இருப்பது பெருமைக்குரியது.இவ்வாறு ஸ்மைல் திட்ட இயக்குநர் விஸ்வநாதன் தெரிவித்தார்.வருவாய் கோட்டாட்சியர் பிரசன்னராமசாமி, தொழிலாளர் ஆய்வாளர் வெங்கடேசன் உட்பட ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment