ஹிந்துத்துவ பாசிஸ்டுகளால் பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட சம்பவத்தை குறித்து விசாரணை நடத்திய லிபர்ஹான் கமிஷனின் அறிக்கையின் அடிப்படையில் சி.பி.ஐ புதிய வழக்கை பதிவு செய்யாது. உள்துறை அமைச்சக அதிகாரிகளும், சி.பி.ஐ அதிகாரிகளும் நடத்திய சந்திப்பில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது.
புதிய வழக்கை பதிவு செய்வதற்கான ஆதாரங்கள் முதல் நிலை சான்று அறிக்கையில் இல்லையென சி.பி.ஐ கூறுகிறது.இதன் காரணமாக புதிய வழக்கை தொடரவோ கூடுதலாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவோ இயலாது என சி.பி.ஐ கூட்டத்தில் விளக்கியதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூத்த பா.ஜ.க தலைவர்களான வாஜ்பேய், எல்.கே.அத்வானி உள்பட 68 பேர் குற்றவாளிகள் என லிபர்ஹான் கமிஷன் கண்டறிந்தது. ஆனால், இவர்களை குற்றவாளிகளாக சேர்த்து வேறொரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், அவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சி.பி.ஐ கூட்டத்தில் தெரிவித்தது. லிபர்ஹான் கமிஷன் அறிக்கையை தெளிவாக ஆய்வு செய்ய சி.பி.ஐயிடம் மத்திய அரசு ஒப்படைத்திருந்தது. அதேவேளையில்,அறிக்கையின் சில பக்கங்கள் குறித்து விசாரணை நடத்த ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அவை குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.
17 ஆண்டுகள் விசாரணையின் இறுதியில் 2009 ஜூன் மாதம் 30-ஆம் தேதி நீதிபதி லிபர்ஹான் மத்திய அரசுக்கு தனது அறிக்கையை சமர்ப்பித்தார்.இதற்கிடையில் கமிஷனின் கால அவகாசம் 48 தடவை நீட்டிக்கப்பட்டது.
No comments:
Post a Comment