islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

'கண்ணீர் கடலில் தத்தளித்த அந்த 9 வருடங்கள்!' - அபலைத் தாய் பீபி காத்தூனின் கண்ணீர் பேட்டி!




கடந்த 2002ம் ஆண்டு, அயோத்தியில் கரசேவை முடித்து விட்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் குஜராத் திரும்பிய 59 கரசேவகர்கள் கோத்ரா ரயில் நிலையத்தில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாட்டில் அல்லது உலகத்தில் எந்தவொரு சம்பவம் நடந்தாலும் – அது குண்டு வெடிப்பாக இருக்கட்டும், ரயில் எரிப்பாக இருக்கட்டும், விமானத் தாக்குதலாக இருக்கட்டும், ஏன், பக்கத்து வீட்டு காலணி தொலைந்தாலும் அரசின் பார்வையும், அதிகாரிகளின் பார்வையும் முதலில் திரும்புவது அப்பாவி முஸ்லிம்கள் மீதுதான்.




இந்த வழக்கு மட்டும் விதிவிலக்கா என்ன? இந்த வழக்கிலும் முதலில் சந்தேகத்தின் பேரில் எந்தவித விசாரணையும் இன்றி 134 பேரைக் கைது செய்து, பின் 94 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

9 வருடங்களுக்குப் பிறகு இந்த வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி 22, 2011 அன்று வழங்கப்பட்டது. அதில் 31 பேர் குற்றவாளிகள் என்று கூறப்பட்டனர். 63 பேர் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த 9 வருட வாழ்வில் பிள்ளையைப் பிரிந்து தவித்த பெற்றோருக்கும், கணவனைப் பிரிந்து வாடிய மனைவிக்கும், தந்தையின் பாசத்தை இழந்த பிள்ளைகளுக்கும் இந்த நீதிமன்றமும், அரசும் என்ன விலை தர முடியும்? இதுபோல் பரிதவித்த எத்தனையோ பெற்றோர்களில் ஒருவர்தான் பீபி ஹாத்தூன்.

இவர் தன் 3 மகன்களை விட்டுப் பிரிந்து தான் பட்ட இன்னல்கலையும், தன் குடும்பம் பட்ட கஷ்டங்களையும் பற்றி தீர்ப்புக்கு ஒரு நாள் முன்பு பொதுமக்களுக்காக பேட்டி அளித்தார்.

அந்தத் தாயின் கண்ணீர் கதை வருமாறு:
"என்னுடைய பெயர் பீபி ஹாத்தூன். நான் குஜராத்தில் கோத்ரா மாவட்டத்தில் உள்ள ரஹ்மத் நகரில் வசித்து வருகிறேன். (கோத்ராவிலிருந்து அது 4 கீ.மீ. தொலைவில் உள்ளது). எனக்கு 3 மகன்கள் உள்ளனர். முதல் மகன் பெயர் ஷம்ஷர் கான், வயது 34. (இவருக்கு 2 மகன்கள் உள்ளன), இரண்டாவது மகன் பெயர் சித்தீக் கான், வயது 23 (இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது), மூன்றாவது மகன் நஸீர் கான், வயது 18 (திருமணம் ஆகவில்லை).

பிப்ரவரி மாதம் 27, 2002 அன்று ஸபர்மதி எக்ஸ்பிரஸ் வண்டி எரிக்கபட்டது. அதைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. அதே தினத்தில் மாலை நேரத்தில், சில காவலர்கள் மஃப்டி உடையில் எங்களுடைய பகுதிக்கு வந்தனர். இதனால் அங்கு ஒரே பதட்டமும், பரபரப்பும் நிலவின. அச்சத்துடன் அங்கு வசித்த மக்கள் இங்கும் அங்குமாக தங்களை காவலர்களின் பார்வையிலிருந்து மறைத்துக்கொள்ள முயன்று கொண்டிருந்தார்கள். சந்தேகத்தின் பெயரில் யாரையாவது அவர்கள் சிறைப் பிடித்தால், தாங்க முடியாத அளவில் சித்திரவதைகள் அளிக்கப்படும் என்று அவர்கள் அஞ்சினார்கள்.

எனது பக்கத்து வீட்டுக்காரர் வந்து என்னிடம், “உங்கள் பையன்களையும் போலீஸ் பிடித்துச் செல்லக் கூடும், கவனமாக இருங்கள்” என்று சொன்னார். அதன் பிறகு மாலை சமார் 5.30 மணியளவில் சில காவலர்கள் வந்தனர். என்னுடைய பையன்களை எந்தவித விசாரணையும் இல்லாமல் இழுத்துச் சென்றனர். நான் அவர்களிடம் அழுது மன்றாடி அவர்கள், “என்ன பாவம் செய்தனர், ஏன் அவர்களை இழுத்துச் செல்கிறீர்கள்?" என்று கேட்டேன். எனது கண்ணீருக்கு எந்தவித மதிப்பும் கொடுக்காமல் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர்.


சில மணி நேரங்களில் அவர்களை விட்டு விடுவார்கள் என்று என்னை நான் சமாதானப்படுத்திக் கொண்டேன். என்னுடைய 3 மகன்கள் மட்டுமில்லாமல் இன்னும் 11 பேரையும் போலீசார் எங்கள் பகுதியிலிருந்து இழுத்துச் சென்றார்கள், ஆனால் அவர்களை 7 வருடங்களுக்குப் பிறகு விடுதலை செய்தனர்.

ஒரு நாள் எங்கள் பகுதியில் உள்ள ஒருவர் என்னிடம் வந்து, “உன்னுடைய மகன்களை ‘பொடா’ சட்டத்தில் சிறை பிடித்து உள்ளார்கள்” என்றார், அதற்கு நான் அவரிடம், “பொடா சட்டம் (பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம்) என்றால் என்ன” என்று விசாரித்தேன். ஆனால் அவருக்கும் அதைப் பற்றிய விவரம் ஒன்றும் தெரியவில்லை. பிறகு என்னுடைய கணவர் சந்தையில் இருந்த சமயம் யாருடனோ பொடா சட்டத்தைப் பற்றிய விளக்கம் கேட்டு விட்டு அதிர்ச்சியில் என்னைக் காண வந்த போது நான் மயங்கிய நிலையில் இருந்தேன்.
அந்த நாள் முதல் அவர் என்னுடன் வெறும் 4 வருடங்கள் மட்டுமே உயிர் வாழ்ந்தார்.

என்னுடைய மகன்கள் சிறையில் பல விதமன சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர். நாங்கள் அவர்களைச் சந்திக்கச் சென்றபோது, என்னுடைய பெரிய மகன் என்னிடம் உணவும், துணிமணியும் கேட்டான். அடுத்த முறை நான் அவர்களைச் சந்திக்கச் சென்ற போது என்னுடைய அத்தனை குடும்ப கஷ்டத்திற்கு இடையில் ஒரு டிஃபன் பாக்ஸில் உணவு எடுத்துச் சென்றேன், ஆனால் அங்குள்ள போலீசார் அதை வாங்கி தரையில் சிதறடித்தனர். மறுபடியும் என்னுடைய மகன் உணவும், துணிமணிகளும் கேட்டதால், மறுபடியும் எடுத்துச் சென்றேன். ஆனால் அவர்கள் மறுபடியும் அதை வாங்கி வீசியடித்தார்கள்.

கொஞ்ச நாள் கழித்து என்னுடைய இளைய மகன்கள் 2 பேரையும் அங்கிருந்து எங்கேயோ அழைத்துச் சென்று விட்டார்கள். அதைப் பற்றி அவர்கள் எதுவும் எங்களிடம் தெரிவிக்கவில்லை. என்னுடைய பெரிய மகனுக்கும் அவர்களைப் பற்றி ஒன்றும் விவரம் தெரியவில்லை. நாங்கள் இங்கும் அங்குமாக அவர்களைத் தேடினோம். 2 நாட்களுக்குப் பிறகு என்னுடைய பெரிய மகனையும் அங்கிருந்து எங்கேயோ அழைத்துச் சென்று விட்டர்கள். 3 மாதத்திற்குப் பிறகு என்னுடைய பெரிய மகன் எங்களுக்கு கடிதம் எழுதியிருந்தான். அதில் அவன் அஹமதாபாத்தில் உள்ள சபர்மதி சிறைக்கு தங்களை மாற்றி விட்டதாகவும், அவர்களை அங்கு சந்திக்க வரும்படியும், வரும்போது துணிமணிகள் கொண்டு வரும்படியும் எழுதியிருந்தான்.

நானும், என்னுடைய கணவரும், என்னுடைய பையன்களின் மனைவிகளையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவர்களைப் பார்க்கப் போனோம். நான் அவர்களைப் பல முறை பார்க்கப் போனபோதும் எனது உடல் நிலை பாதித்துவிடுமோ என்ற பயத்தில் என்னுடைய மகன்கள் சிறையில் அனுபவித்த எந்தச் சித்திரவதையைப் பற்றியும் என்னிடம் சொல்லவில்லை. எனக்கு ஒன்றே ஒன்று மட்டும் தெரியும், இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று.

என்னுடைய பையன்களை இந்த பொடா சட்டப் பிரச்சினையிலிருந்து விடுவிக்கக் கோரி நடுவர் மன்றத்தில் மன்றாடினேன். ஒரு முறை பொடா சட்டத்தில் சிக்கிய அப்பாவி மக்கள், சிறையில் பல விதமான சித்திரவதைகளுக்கு மனதாலும் உடலாலும் உள்ளாக்கபட்டு வெறும் மூச்சுக் காற்றுடன்தான் வெளியில் வர முடியும்.

என் பையன்கள் இல்லாத காரணத்தினால், என்னுடைய சூழ்நிலை என்னை பிச்சை எடுக்கும் அளவிற்குத் தள்ளியது. என்னுடைய 2 மருமகள்களும் வீட்டு வேலைக்குச் சென்றனர். அவர்கள் 2 பேரின் சம்பளமும் சேர்த்து மாதம் வெறும் 300 ரூபாய் மட்டுமே கிடைக்கும். எங்களுடைய வருமானத்தை வைத்து என்னுடைய பேத்திகளுக்கு அவர்களுடைய சிறிய ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாத பாட்டியாய் அவர்கள் முன் நான் வெட்கப்பட்டு நிற்கும் அளவில்தான் எங்கள் நிலமை இருந்தது. இந்த நிலையில் என்னுடைய மகன்களுக்கு வழக்கறிஞர் வைக்கும் அளவுக்கு வசதி இல்லை. என்னுடைய கஷ்டத்தை நடுவர் மன்றத்தில் மட்டுமே முறையிட முடிந்தது.

அந்த ரயிலில் உயிரிழந்தவர்கள் அந்த ஒரு நிமிடத்தில் தங்களுடைய முழு வேதனையையும் அனுபவித்து இந்த உலகத்தை விட்டுப் போய் விட்டர்கள். ஆனால் அந்த வழக்கில் சிக்கிய அப்பாவி மக்கள் 1 வருடம் அல்ல, 2 வருடம் அல்ல, 9 வருடங்களை இழந்து நிற்கின்றனர். இழந்த 9 வருட வாழ்க்கையையும் இளமையையும் யாரால் திருப்பித் தர முடியும்?

எங்களுடைய குடும்பத் தலைவர்களை இழந்து, பெற்ற பிள்ளையைப் பிரிந்து தவித்த பெற்றோர்களுக்கும், கட்டிய கணவனை இழந்து வாடிய மனைவிகளுக்கும், தன் தகப்பனை யார் என்று அறிய முடியாத குழந்தைகளுக்கும் யார் பதில் சொல்ல முடியும்? நாங்களும் எங்கள் குடும்பமும் இழந்த சந்தோஷத்தையும், பட்ட அவமானத்தையும் என்ன விலை கொடுத்தாலும் யாரலும் திருப்பித் தர முடியாது.”

இப்படி எத்தனையோ பெற்றொர்களின் கண்ணீருக்கும், மனைவிகளின் கேள்விகளுக்கும், பிள்ளைகளின் அழுகுரலுக்கும் இந்தச் சமுதாயமும், அரசும் என்ன பதில் தர முடியும்?
paalaivanathoothu

No comments:

Post a Comment